சோளகர் தொட்டி [ச.பாலமுருகன்] ~ அதிகாரத்தின் பெருங்காதல்கள்

           சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் இன்னும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வீரப்பன் மட்டுமல்ல அவருடைய பெரிய மீசையையும் அவரை பிடிப்பதற்க்காக தமிழக கர்நாடக போலீஸார்  மேற்கொண்ட மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட  தேடல் வேட்டையும் இந்திய அளவில் ரொம்ப பிரபலம். வீரப்பன் கொல்லப்பட்ட செய்தியை அரை பக்க செய்தியாக சீன பத்திரிக்கையில் வந்ததாக தினதந்தியில் படித்தது நியாபகம் இருக்கிறது. ஆனால் அந்த தேடுதல் வேட்டையின் போது அந்த காடுகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களின் மீது  கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் ஏனோ அத்தனை பிரபலம் இல்லை. நமது அமைதிப்படையை போல் அண்டை நாட்டுக்கு போகும் வசதி இல்லாததால் சொந்த மண்ணிலேயே அதிரடிப்படையினரால் நிகழ்த்தப்பட்ட அத்தகைய கொடுமைகளுக்கு இலக்கிய சாட்சியாய் நிற்கிறது "சோளகர் தொட்டி".

           சோளகர் தொட்டி எனப்படும் பழங்குடி இன கிராமத்தின் கதை தான் இரண்டு பாகங்களாக பிரித்து இந்த புத்தகத்தில் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில்  அவர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், விழாக்கள் என அவர்களின் கலாச்சாரம் பெருங்கவனத்துடன் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஏற்படும் பதற்றம், அவர்களின் அரம்பக்கட்ட விசாரணை ஏற்படுத்தும் பிரச்சனைகள், அதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

      கொத்தல்லி, மாதி, பேதன், ஜோகம்மாள், கெம்பப்பாள், ஈரம்மா, புட்டன், மண்ணன், சிக்குமாதா,  கோல்காரன், ஜணையன், சித்தி என பரிச்சியமில்லாத பெயர் கொண்டவர்களை பரிச்சியமாகுவதில் முதல் பாகம் வெற்றி பெறுகிறது. சோளகர் தொட்டியின் இயல்பான காலத்தை தான் முதல் பாகத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும் அதுவும் அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. குடியானவர்களால் சுரண்டப்படுகின்றனர் , பரம்பரையாக இருந்த நிலத்தில் இருந்து அநியாயமாய் துரத்தப்படுகின்றனர். கொல்ல வந்த கரடியை கொன்று தின்றதற்க்காக சிக்குமாதா நிர்வாணமாய் வைத்து அடிக்கப்படுகிறான் மற்றும் அவனை விடுவிப்பதற்க்காக தொட்டியே கடனாளி ஆகிறது. இத்தனை சுரண்டல்களும் இன்னல்களும் இருந்தாலும் வாழ்க்கையை ஆடல், பாடல், கஞ்சா என கொண்டாட்டத்துடனே வாழ்கின்றனர்.

            இரண்டாம் பாகத்தின் ஆரம்பம் முதலே வீரப்பன் வேட்டையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடங்கி விடுகிறது. முதலில் மன ரீதியாக டார்ச்சர் கொடுக்க தொடங்குகின்றனர். காவலர்களை பொறுத்த வரை வனத்தில் இருக்கும் எல்லா ஆண்களும் வீரப்பனுக்கு உதவுபவர்கள், எல்லா பெண்களும் வீரப்பன் கூட படுத்தவர்கள், எல்லா குழந்தைகளும் வீரப்பனுக்கு பிறந்தவர்கள். சித்ரவதைகளின் போது வலிக்குது என்று சொல்பவர்களிடம் எல்லாம்  "வீரப்பன் கூட படுக்கும் போது மட்டும் சுகமா இருந்துச்சோ " என்ற கேள்வி மறக்காமல் கேட்கப்படுகிறது. காவல்துறையினர் தங்கி இருக்கும் முகாம்களின் சித்ரவதை படுத்துவதற்க்கென்றே "வொர்க் ஷாப்" ஒன்று இருக்கிறது அதில் சாதாரண சிதரவதை போக புது வகையான சித்ரவதைகளும் செய்கின்றனர்.

      கணவன் கண்முன்னே மனைவி கற்பழிக்க படுகிறாள் வேண்டாமென்று கெஞ்சும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடி விழுகிறது, தந்தையை மகனும் மகனை தந்தையும் செருப்பால் அடிக்க வேண்டும் இல்லையெனில் இருவருக்கும் காட்டுதனமான அடி கிடைக்கும், கட்டைவிரலை மடக்கி வைத்து மணிக்கட்டுடன் சேர்த்து கட்டி வைப்பார்கள் அப்படி செய்தால் அவர்களால் வாழ்க்கை முழுவதும் கட்டை விரலால் எதையும் தூக்க முடியாது, எட்டு மாத கர்ப்பிணியை நான்கு பேர் கொடுரமான முறையில் கற்ப்பழிக்கின்றனர், காவலர்கள் அனுமதித்தால் மட்டுமே யாரக இருந்தாலும் உடை அணிந்து கொள்ளவேண்டும் அதுவும் விசாரணையின் போது ஆண் பெண் பேதமில்லாமல் அனைவரும் நிர்வாணம் தான், காது மடல்கள், மார்பு காம்புகள், பிறப்புறுப்பு என கிளிப்புகள் மாட்டப்பட்டு மின்சாரம் செலுத்தப்படுகிறது, மின்சாரம் செலுத்தும் போது பீதியினால் மலம் கழிப்பவர்களின் வாயில் அந்த மலம் திணிக்கப்படுகிறது, பகலெல்லாம் இப்படி விசாரணை செய்யப்படும் பெண்கள் இரவுகளில் ஆறேழு பேரால் வண்புணர்ச்சி செய்யப்படுகின்றனர், "என்னை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க எம்மகளை விட்டுறுங்க" எனக் கதறும் தாயின் மகளை எல்லாரும் இருக்கும் அறையில் நிர்வாணமாக கட்டி வைத்து அனைவரையும் பார்க்க சொல்கின்றனர் பார்க்காதவர்களுக்கு அடி விழுகிறது அதே நிலையில் அந்த பெண் வண்புணர்ச்சி செய்யப்படுகிறார். இவை யாவும் நடந்தது நாஜி முகாம்களில் அல்ல செய்தவர்கள் சிங்களர்களோ வேறு இனத்தவர்களோ அல்ல நீங்களும் நானும் பேசும் மொழியை பேசுபவர்கள் வணங்கும் கொடியை வணங்குபவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

 
       
                "1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன் முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன. காவல் துறையால் அடித்து உதைத்து முட மாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ் சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின் கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய தேவையும் இருந்தது. 'சோளகர் தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது"  என்ற தனக்கு ஏற்ப்பட்ட அதிர்வை சொல்கிறார் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான  ச.பாலமுருகன். நாவலின் இரண்டு பாகத்திலும் வழக்கமாக கதை சொல்வத்ற்க்கான அழகியலை தவித்து இருப்பதால் ரொம்பவே ஆவணத்தன்மையுடன் சொல்லப்பட்டு இருக்கிறது. சொல்லப்படும் கதைகள் எல்லாம் கதைகளாக உணராமல் உண்மை சம்பவங்களை போல் உணர்வதற்க்காக திட்டமிட்டே ஆவணத்தண்மையுடன் சொல்லப்பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்திய விஷயம் நாவலின் முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சோளகர்களின் வாழ்க்கை முறை. இத்தனை நுணுக்கமாக சொல்வதற்க்கு குறைந்தது சில வருஷங்களாவது  அவர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.

         இந்த புத்தகம் வீரப்பனுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று ஒரு விமர்சனம் இணையத்தில் உலாவுகிறது ஆனால் அது உண்மை அல்ல. விரப்பனுக்கும் அரசுக்கும் இடையே சிக்கி சிதைந்து போன மக்களின் வாழ்க்கையை மட்டுமே இந்த புத்தகம் சொல்கிறது.

       வீரப்பனை கொன்றாகிவிட்டது, பாராட்டு விழா முடிந்தாகி விட்டது, பதக்கங்களும் வீட்டு மனைகளும் கொடுத்தாகிவிட்டது ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை :(.

பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை      : 120 ரூபாய்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்..,
        

Post Comment


Follow Us in Facebook

4 Responses so far.

  1. வாசிக்கும்போதே உடம்பெல்லாம் என்னமோ செய்யுது. சே .... வேற ஒண்ணும் சொல்ல விரும்பல.

  2. Unknown says:

    @ஹாலிவூட் ரசிகன்

    முடிஞ்சா புத்தகம் வாங்கி படிச்சுப் பாருங்க நண்பா !!

  3. Unknown says:

    @anand a,

    தேடிப் பார்க்கணும். இலங்கையில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். :)

  4. சோளகர் தொட்டியை படித்தால் கண்ணீர் கொட்டும் என்று எங்கோ , யாரோ சொன்ன ஞாபகம். வெகுநாட்களாக படிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். வாங்கி படிக்கிறேன்.

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...