Showing posts with label அனிமேஷன். Show all posts
Showing posts with label அனிமேஷன். Show all posts

5 Centimeters Per Second [ Japanese/2007 ] - நிரம்பி வழியும் காதல்..,

         யாரோ ஒருவருடன் பேசுவதற்க்காக மட்டுமே பள்ளிகூடத்திற்க்கோ கல்லூரிக்கோ போவதாக உணர்ந்து இருக்கிறீர்களா ? யாரோ கொடுத்த சாக்லேட்டின் ரேப்பர்களை பத்திரப்படுத்தி இருக்கிறீர்களா ?  ஷாப்பிங் மாலிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ யாரையேனும் எதிர்பார்க்கமல் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறீர்களா? தூரத்தில் நடக்கும் ஒரு பெண் அவள் போல் இருக்க ஆசையுடன் அருகில் போய் ஏமாந்து இருக்கிறீர்களா ? வாழ்க்கையில் ஒருமுறையேனும் காதலித்து இருக்கிறீர்களா ?
            இந்த கேள்விகளுக்கு ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் பதில் ஆம்  எனில இது உங்களுக்கான படம்...,


        இது எப்படிப்பட்ட படம் என்று மேலே இருக்கும் பத்தியை படிக்கும் போதே ஒருவாறாக கற்பனை செய்து இருப்பிர்கள் ஆனால் இது ஒரு அனிமேஷன் படமாக இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா.., Yes it is :) . 5 Centimeters Per Second என்ற படத்தின் தலைப்பு செர்ரி பூக்களின் இதழ்கள் உதிர்ந்து விழும் வேகமாகும். இந்த தலைப்பு மனித வாழ்க்கையின் மந்த தன்மையையும் ஒன்றாய் இருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலக தத்தம் வாழ்க்கைகாய் விலகி செல்வதின் குறியீடு அப்புடின்னு நா ஒண்ணும் கண்டுபிடிக்கல விக்கிபீடியா சொல்லுது :).  62 நிமிடங்கள் மட்டுமே ஓட கூடிய மிக சிறிய படமான இது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது..,

Episode I : Chasing Cherry Blossoms

     மத்திய தொண்ணூறுகளில் படத்தின் முதல் பகுதி நடக்கிறது. ஆரம்ப பள்ளியின் இறுதி நாளில் நெருங்கிய நண்பர்களான டகாகி மற்றும் அகாரி பள்ளி முடிந்து வருகின்றனர். அகாரியின் பெற்றோர் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் இனி பார்க்க முடியாது என்றாலும் அடுத்த வருடம் இதே காலத்தில் அவனுடன் இருக்க விரும்புவதாகவும் கூறி செல்கிறாள் அதன் பிறகு  இருவரும் கடிதம் மூலமே உரையாடி கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அவளை பார்ப்பதற்க்காக டகாகி ரயிலில் அகாரி ஊரை நோக்கி செல்கிறான். அன்று இரவு 7 மணிக்கு சந்திப்பதாக அகாரியை சந்திப்பதாக போட்ட ப்ளான் கடும் பனி பொழிவினால் ரொம்பவே சொதப்பி விடுகிறது. 8.30 மணிக்கு பாதி தூரம் மட்டுமே சென்று இருக்கிறான். இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை நீங்களே பாருங்கள்.

Episode II :Cosmonaut

          செல் ஃபோனும் இன்டர்நெட்டும் அறிமுகமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் படத்தின் இரண்டாம் பகுதி நடக்கிறது. காலப்போக்கில் அகாரி உடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்ட டகாகி புதிய பள்ளியில் யாருடனும் ஒட்டாமல் தனியாகவே இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் சுமேடா டகாகியை பார்த்த நாள் முதலே காதலிக்க தொடங்கிவிடுகிறார் ஆனாலும் தன் காதலை வெளிப்படுத்த தைரியமின்றி இருக்கிறாள். கொஞ்ச காலத்தில் இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு உருவாகிறது ஆனாலும் அதற்கு மேல் அவளால் நெருங்க முடியவில்லை. இருவரும் தனியாக இருக்கும் சமயத்தில் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து தோற்று போகிறாள்.



Episode III : 5 Centimeters Per Second

          சில வருடங்களுக்கு பிறகு., டகாகி கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக டோக்கியோவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். சுமேடா இன்னும் உன்னை காதலிக்கிறேன் என டகாகிக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார்.  திருமணத்திற்க்கும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் வேலை காரணமாக டோக்கியோவுக்கு பயணமாகிறார் அகாரி. ஒரு முறை ரெயில்வே கிராஸிங்கை தாண்டி செல்லும் போது எதிரில் வந்த பெண் அகாரியாக இருக்குமோ என திரும்பும் போது சரியாக அதே நொடியில் ஒரு ரெயில் வந்து பார்க்க விடாமல் செய்கிறது. அப்போது ரொம்ப ரொம்ப அழகான பாடல் வருகிறது. அப்பாடல் முடிந்ததும் அந்த பெண் அகாரியா ? இருவரும் இணைந்தார்களா ?  போன்ற விஷயங்களை எல்லாம் திரையில் காண்க..,

     இந்த கதையை படிக்கும் போது இது ரொம்பவும் சாதாரணமாக இருப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் திரையில் இந்த படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் ரொம்பவே அதிகம். காதலை பிரிந்ததால் ஏற்படும் தனிமையையும் , பழைய காதலை நினைக்கும் போது ஏற்படும் துக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த கலைவையான உணர்ச்சியையும் அழகான காட்சிகளின் மூலம் வெகுசுலபமாக பார்வையாளனுக்கு கடத்தி விடுகிறது. சிறுவயதில்  நெருக்கமாய் இருந்தவர்கள் செல்ஃபோனும் இணையமும் இல்லாமல் கால ஓட்டத்தில் காணாமல் போனதை எந்தவிதமான மிகையும் இல்லாமல் காட்டுகிறது. படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு முக்கிய பாத்திரங்கள் மூவரும் அவர்கள் மனதுக்குள் நினைப்பதே வசனங்களாக வருகிறது. பெரும்பாலான வசனங்கள் க்யூட்டான கவிதையாக இருக்கின்றன.


          படம் முழுவதுமே நட்பு, பிரிவு, தனிமை,  ஏக்கம், காதலை நோக்கி பயனித்தல், காதலுக்காக காத்திருத்தல் என காதலின் அத்தனை உணர்வுகளையும் கொண்டு காட்சிகளை நிரப்பி படம் முழுவதுமே படுரொமாண்டிக்காக இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததை போல் வருகிறது அந்த கிளைமேக்ஸ் பாடல் அதுவரை படம் ஏற்படுத்திய உணர்வுகளை இன்னொரு லெவலுக்கு இந்த பாடல் எடுத்து செல்கிறது அதிலும் அந்த பாடல் வரிகள் அற்புதம் (அந்த மொழி தெரியுமான்னு கேக்க கூடாது எல்லாம் சப்டைட்டில் தான் :) ). முதன்முறையாக என் கம்ப்யூட்டரில் ஒரு ஜப்பானிய பாடல் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருக்கிறது. அந்த அற்புதமான பாடல் உங்களுக்காக..,


படத்தின் இன்னுமொரு முக்கிய ப்ளஸ் இதில் வரும் அனிமேஷன் அதுவும் ரொம்பவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. ரொம்பவே டெம்ப்ளேட்டாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே நாம் மறக்கும் அளவிற்க்கு இருக்கிறது. நான் பார்த்த மிக சிறந்த 2D அனிமேஷன்களில் இந்த படத்தின் அனிமேஷனையும் எந்த யோசனையுமின்றி சேர்த்து கொள்வேன். இந்த படத்தை எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் Makoto Shinkai என்ற ஜப்பானிய இயக்குநர். ஜப்பானிய விமர்சகர்கள் இவரை அடுத்த மியாசாகி என்றுழக்கும் அளவிற்க்கு நம்பிக்கை தருபவராக இருக்கிறார்.

    எவ்வளவோ யோசித்தும் குறையென்று எதுவும் சொல்ல தோன்றவில்லை அவ்வளவு பிடித்துவிட்டது. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் ஒரு மணிநேரம் மட்டும் செலவு செய்து இந்த படத்தை பாருங்கள் அட்லீஸ்ட் ஒரு நாளுக்காவது அந்த பாதிப்பு இருக்கும் நிச்சயமாக...


     
          
[ Read More ]

Princess Mononoke [Japanese / 1997] - மனித போராசையின் இன்னொரு முகம்

          இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் ஊரிலோ அல்லது சுற்று வட்டாரத்திலோ இருந்த என்னவெல்லாம் காணமல் போய் இருக்கிறதென்று யோசித்தது உண்டா ?  ரோட்டை அகலப்படுத்துவதற்க்காக மரங்கள் , ஃப்ளாட் போட்டு விற்கப்பட்ட ஏரிகள் அல்லது குளங்கள் , வீடுகளாக மாறிவிட்ட வயல்வெளிகள் , மணலுக்காக சுறுங்கி போன ஆற்றுப்படுகைகள் , நகரத்தில் இருந்து காணாமல் போய்விட்ட சிட்டுகுருவிகள் இப்படி நீளும் அத்தனையும் மனிதனின் வசதிக்காக சட்டபூர்வமாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ செய்த இயற்க்கை சுரண்டல்களின் நிகழ்கால சாட்சியங்கள். இருபது வருடங்களில் மட்டும் இத்தனை என்றால் இரண்டாயிரம் வருடங்களில் நம் வசதிக்காக என்னவெல்லாம் செய்து இருப்போம். எத்தனை காடுகள் , எத்தனை பழங்குடியினர் , எத்தனை உயிர்கள் நம் வசதிக்காவும் தேவைக்காகவும் ஆசைக்காகவும் அழித்தொழித்துவிட்டோம் இன்னும் நாம் வாழும் காலம் வரை அழிக்கப்போகிறோம்..,


        உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய அனிமேஷன் பட இயக்குநர் Hayao Miyazaki - ன் முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்றாகும். ஒரு காட்டில் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட அங்கே இருக்கும் விலங்கு கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் சண்டை தான் படத்தின் மையக்கரு.  மனிதர்களை வில்லனாக காட்டிய படங்கள் வெகு குறைவு (E.T , Avatar , District 9) மனித பேராசையை காட்டுவதன் மூலம் இந்த  படமும் அந்த சின்ன பட்டியலில் தன்னை இணைத்து கொள்கிறது..,

     ஒரு அழகான காட்டிலுருந்து படம் துவங்குகிறது அமைதியாய் இருக்கும் காட்டில் ஏதோ ஒரு சலனம் தெரிய எல்லோரும் பயந்த படி பார்க்கின்றனர். காட்டில் இருந்து உடலெங்கும் நெளியும் பாம்புகளை கொண்ட விசித்திர மிருகம் வெளிப்பட்டு அந்த கிராமத்தையும் மக்களையும் தாக்குகிறது. அந்த கிராமத்தின் இளவரசன் அஷ்டகா அந்த மிருகத்துடன் சண்டையிட்டு அதை கொன்றுவிடுகிறான் ஆனால் அந்த மிருகத்தின் உடம்பில் இருந்த பாம்பு ஒன்று அவன் கையில் சிக்கி கொண்டு ஒரு அழியாத கருப்பு நிற தழும்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த தழும்பை சோதிக்கும் கிராமத்து கிழவி வந்த மிருகம் ஒரு சபிக்கப்பட்ட பன்றி கடவுள் என்றும் அதன் மூலம் ஏற்பட்ட தழும்பு பெரிதாகி இளவரசனை கொன்றுவிடும் என்றும் கூறுகிறார். இந்த சாபத்தில் இருந்து விடுப்பட மேற்கு நோக்கி பயணம் செய்து மான் கடவுளை சந்தித்தால் சாபம் நீங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

       அஷ்டகா நீண்ட தூரம் பயணம் செய்து லேடி எபோஷி  என்ற பெண் இரும்பு தொழிற்சாலை நடத்தும் மலைக்கு வந்தடைகிறார். அந்த தொழிற்சாலைக்கும் அங்கிருக்கும் மக்களுக்கும் அந்த மலையை சுற்றி உள்ள மிருகங்களால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். குறிப்பாக மோரோ எனப்படும் ஓநாய் கடவுளும் அதன் மகளாக சொல்லப்படும் Princess Mononoke என்று அழைக்கப்படும் ஷானும் தான் லேடி எபோஷியை கொலை செய்வதையே லட்சியமாய் கொண்டுள்ளனர். அதே சமயம் லேடி எபோஷி தன்னுடைய தொழிற்சாலையில் விபச்சாரிகளுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வேலை கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிறார். அதனால் அங்கு வேலை செய்யும் அனைவரும் அதிக விசுவாசத்தோடு இருக்கின்றனர். ஷான் அந்த தொழிற்சாலைக்குள் புகுந்து லேடி எபோஷியை கொலை செய்ய முயற்சி செய்கிறார் அப்போது அஷ்டகாவின் தழும்பு ஷானை காப்பாற்றுமாறு கட்டாயப்படுத்துகிறது. ஷானை காப்பாற்றும் முயற்சியில் அஷ்டகாவுக்கும் அவனுடைய குதிரை யக்ரூவுக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது.

       காயம்ப்பட்ட  அஷ்டகாவையும் குதிரையும் புனித குளத்திற்கு தூக்கி சென்று அங்கே மான் கடவுளிடம் பிராத்தனை செய்து  காப்பாற்றுகிறார் ஷான். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அஷ்டகாவுக்கும் ஷானுக்கும் ஒரு பிணைப்பு உண்டாகிறது. மான் கடவுளை கொலை செய்வதற்க்காக லேடி எபோஷி அரசப்படையுடன் இணைந்து காட்ட்டிற்க்குள் செல்கின்றனர் அதேசமயம் அரசப்படையினர் லேடி எபோஷி இல்லாத சமயத்தில் அவருடைய தொழிற்சாலையை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அஷ்டகாவின் சாபம் நீங்கியதா ? மான் கடவுள் கொல்லப்பட்டாரா ? லேடி எபோஷி தொழிற்சாலையை காப்பாற்றினாரா ? ஷானும் அஷ்டகாவும் இணைந்தார்களா என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,

    தொழிற்சாலையை காப்பாற்றுவதற்க்காக காட்டில் உள்ள அனைத்து உயிர்களையும் கொல்வதற்க்கும் யாரும் தயங்குவதில்லை கடவுளே ஆனாலும் இதே நிலைதான் மனிதர்கள் தாங்கள் விரும்பியதை செய்வதற்க்காக எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை உணர்த்துவதாக இந்த  காட்சிகள் இருக்கும். படம் வெறும் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமான சண்டையாக இல்லாமல் அனைவருமே தங்கள் இருப்பை காப்பாற்றுவதற்க்கான போராட்டமாகவே அனைத்தும் காட்டப்பட்டிருக்கும் குறிப்பாக லேடி எபோஷியின் கதாபாத்திரம் . லேடி எபோஷி தன்னுடைய தொழிற்சாலையை காப்பாற்ற கடவுளையே கொல்லவும் தயாராய் இருக்கிறார் ஆனால் விபச்சார விடுதிகளில் இருந்து பெண்களை காப்பாற்றி நல்வாழ்வளிக்கிறார் இப்படி முழுக்க நல்லவருமல்லாமல் கெட்டவ்ருமல்லாமல் சாதாரண மனித இயல்புகளோடு வருகிறார்.

       வண்ணங்கள் குழைத்து தீட்டப்பட்ட ஓவியங்களாய் கண்முன்னே காட்சிகள் அனைத்தும் விரிகின்றது. அஷ்டகா பயணம் மேற்கொள்ளும் காட்சி, மெல்ல மழை பொழிய தொடங்கும் காட்சி , தொடக்கத்தில் நெளியும் பாம்புகளோடு வரும் மிருகம் என  படத்தின் நிறைய காட்சிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன அவ்வளவு அழகு. இந்த கதையையும் கதாபாத்திரங்களையும் மொத்தமாக உருவாக்க இயக்குநர் மியசாகிக்கு 16 ஆண்டுகள் பிடித்ததாம். படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் கையால் வரையப்பட்ட பழைய வகை அனிமேஷன் ஆகும் எனவே ஒவ்வொரு ஃப்ரேமும் வரையப்பட வேண்டும். இந்த படத்துக்குகாக வரையப்பட்ட 1,44,000 ஃப்ரேம்களையும் தனிப்பட்ட முறையில் சரிபார்த்ததோடு 80,000 ஃப்ரேம்களை திரும்ப வரையவும் சொல்லிவிட்டாராம். அவர் எதிர்பார்த்த பெர்ஃபெக்ஷன் கிடைத்தப்பின்னர் தான் படத்தை வெளியிடவும் சம்மதித்தாராம்.

       இயக்குநர் மியசாகி தன்னுடைய படங்களில்  வெறும் பொழுதுபோக்கோடு ஏதேனும் நல்ல கருத்துக்களை சொல்ல விரும்புபவர். இதிலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதர்கள் இயற்கைக்கு எதிரி ஆகாமல் இரண்டும் இணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று கூறி இருக்கிறார்.மற்றைய படங்களை போலவே கருத்து திணிப்பாக இல்லாமல் கதையின் ஊடே சொல்ல நினைத்த கருத்துக்களை அழகாய் சொல்லி செல்கிறார்.

     மொத்ததில் இரண்டு மணிநேரம் தரமான பொழுதுபோக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்களுக்கு சரியான சாய்ஸ் இந்த படம்.

Princess Mononoke : A nice adventerous journey in the Land of Beauty.
My Rating : 8.5 / 10.

[ Read More ]

Rango [English/2011] - குட்டி கவ்பாயின் சாகசங்கள்

             
          கவ்பாய் படங்கள் என்ற உடனேயே சில விஷயங்கள் உங்கள் மனதில் தோன்றலாம் . அது Sergio Leone எடுத்த டாலர் டிரையாலஜியாவோ அல்லது க்ளின்ட் ஈஸ்ட்வூட்டாகவோ அல்லது சாட்டையும்  குதிரையுமாகவோ  அல்லது துப்பாக்கி சண்டைகளாகவோ அல்லது என அடுத்த ஆப்ஷனை யோசிப்பத்ற்க்கு முன்னால் நிற்க. இதெல்லாம் இருக்கட்டும் Clint Eastwood, John Wayne  தொடங்கி Jeff Bridges வரை நாம் பார்த்த கவ்பாய் போல் அல்லாமல் பச்சை நிறத்தில் ஒரு பல்லி இருந்தால் எப்படி இருக்கும் ?? அதுவும் ஒரு அனிமேஷன் படமா இருந்தா ??.   இப்ப்டி மாத்தி யோசிச்சதன் விளைவு தான் 'Rango'.

            என்ன தான் இதில் கவ்பாய் படத்துக்கான அம்சங்கள் நிறைய இருந்தாலும்  இது முழுமையான கவ்பாய் படமாகவோ அல்லது முழுமையாயான கவ்பாய் படங்களின் Spoof ஆகவோ இல்லாமல் இடையில் தொங்கி நிற்கிறது. இந்த படம்  ஆஸ்கர் வாங்காமல் இருந்திருந்தால் பார்த்து இருப்பேனா என்று தெரியவில்லை.., ஹம்ம்ம் எப்படியோ இந்த படம் வாங்கிடுச்சி நானும் பார்த்துட்டேன் நீங்களும் இந்த கொடுமையை படிச்சிட்டு இருக்கிங்க :)..,

          

           காரில் இருக்கும் மீன் தொட்டியின் உள்ளே நடக்கும் ஒரு குட்டி நாடகத்தோடு தொடங்குகிறது படம். அப்போது ஏற்படும் சிறுவிபத்தினால் ஒரு பாலைவனத்தின் நடுவில் சிக்கி கொள்ளும் அந்த பல்லி ஒரு ஆட்டின் (??) அமானுஷிய பேச்சுகளை நம்பி 'Dirt' என்ற ஒரு ஊரை தேடி செல்கிறது. அந்த வழியில் ஒரு பெரிய கழுகு துரத்த அதனிடமிருந்து தப்பி பிழைத்து பீன்ஸ் என்ற பெண்ணை சந்திக்கிறது. அந்த பெண்ணிடம் சில பல பிட்டுகளை போட்டு அவங்க ஊருக்கு அதாவது அந்த ஆடு சொன்ன 'Dirt'-க்கு போய்டுது.

      அந்த விபத்தில் இருந்தே ரொம்ப தாகமா இருக்கிற பல்லி ஒரு பாருக்கு போய் குடிக்க தண்ணி கேக்குது. அங்க எல்லாரும் எதோ டி.ஆர் படம் பாத்த மாதிரி சிரிக்கிறாங்க இதுனால கடுப்பான பல்லி தன்னோட பேர் 'Rango'-ன்னும் அது ஒரே புல்லட்ல ஏழு பேர கொன்னதாகவும் பீலா விடுது. அப்போ அங்க வரும் பெரிய கழுகை அதுக்கே தெரியாம ஒரே தோட்டாவுல கொன்னுடுது. அதுல இம்பிரஸ் ஆன அந்த ஊர் மேயர் ஆமை Rango-வை அந்த ஊர் செரிஃப்பா ஆக்கிடுறாரு..,

       அந்த ஊர்ல பயங்கராமன பஞ்சம் தலைவிரிச்சாடுது எந்த அளவுக்குன்னா அந்த ஊர்ல ஒரு பேங்க் இருக்கு அதுல யாரும் பணம்லாம் போட்டு வைக்க மாட்டாங்க அதுல தண்ணி மட்டும் தான் சேமிச்சு வைச்சு இருப்பாங்க அதே போல தேவைப்பட்டா கடனும் குடுப்பாங்க. தண்ணி பேங்க்ல இருப்பு ரொம்ப கம்மியா இருக்குறதால அத அப்புடி பாதுகாக்குறதுன்னு கூட்டம் போட்டு பேசுறாங்க கரெக்ட்டா அன்னைக்கு நைட் யாரோ பேங்க கொள்ளை அடிச்சடுறாங்க.., அந்த தண்ணிய யார் கொள்ளை அடிச்சான்னு எல்லாரும் கண்டுபிடிக்கிற மாதிரி ஒரு ட்விஸ்ட் வைச்சு சொல்லி முடிக்கிறாங்க..,

     படத்தோட ஸ்பெஷல் அப்புடின்னு பாத்தா அதோட அனிமேஷன் தான். ரொம்பவே கலர்ஃபுல்லான அனிமேஷன் படங்களையே அதிகம் பார்த்து இருக்கும் நமக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. படத்தில் வெப்பத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் பகுதிகளையும் அருமையா காட்சிப்படுத்தி இருக்காங்க.., அதுனாலயே படத்தோட நம்ம ஒன்ற வைக்கிற முக்கியமான விஷயமாகிடுது.

 
    படத்துல அப்ப அப்போ இசை வாத்தியங்களோடு வரும் பறவைகள்  கதை சொல்வது , வழக்கமான கவ்பாய் காட்சிகளை கிண்டல் அடிப்பது , தண்ணிரை மீட்டு வரும் போது நடக்கும் Chase எல்லாமே செமையா இருக்கும். Rango-க்கு Jonny Depp-ன் குரல் நல்லா பொருந்தி வந்திருக்கு அதுவும் அது பீலா விடும் காட்சிகள் எல்லாம் செம Synchronization. படத்த இயக்கி இருப்பவர் Pirates of Caribbean படங்களை இயக்கிய Gore Verbinski. படத்தின் சில இடங்களின் Jack Sparrow-ன் சாயல் Rango-விற்கு இருப்பதைக வனிக்கலாம்.

     படத்தின் சில காட்சிகள் ரொம்பவே மொக்கை போடுகின்றது. இந்த கதையை இத்தனை நீளமாக எடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மிக பிரபலமான கவ்பாயான செர்ஜியோ லியோனின் "The Man with No Name" படத்தில் வருகிறார் ஆனால் இந்த விஷயத்தை படிக்கும் போது இருக்கும் சுவாரசியம் அந்த காட்சியில் துளி கூட இல்லை.

     மொத்ததில் படம் பல இடங்களில் வாய் பிளக்க வைக்கிறது, சில இடங்களில் ஆச்சர்யத்தினாலும் சில இடங்களில் கொட்டாவி விடுவதற்க்காகவும்..,

Rango : A Gud Companion for a weekend with family or Boy friend or  Girl friend or ...
My rating : 7/10.
           
[ Read More ]