Dirty Harry [English ~ 1971] - இது தாண்டா போலீஸ் !!!

     
         எழுபதுகள்ல வடக்கு கலிஃபோர்னியாவுல ஒருத்தன் வரிசையா கொலை பண்ணிட்டு இருந்தானாம். கொலை பண்ணதோட மட்டும் இல்லாம முடிஞ்சா புடிச்சு பாருங்கிற கணக்கா போலீசுக்கு விலாவாரியா லெட்டர் அனுப்பிட்டு இருந்தான். போலீசும் கண்ணுல வெளக்கெண்ணை, நல்லெண்ணை இன்னப்பிற எண்ணைகளை ஊத்தி தேடியும் அவனுக்கு "Zodiac Killer"-ன்னு பேர் மட்டும் தான் வைக்க முடிஞ்சது கடைசி வரைக்கும் பிடிக்கவே முடியல. இப்போ வரைக்கும் அவன் யாருன்னு கண்டுபிடிக்காம கேஸ் ஓபனாவே இருக்கு. இந்த கொலைகளையும் போலிஸ் விசாரணையையும் பத்தி Zodiac அப்டின்னு ஒரு அருமையான படத்தை David Fincher எடுத்து இருக்கார் நிறைய பேர் பார்த்து இருப்பிங்க பாக்காதவுங்க கண்டிப்பா பாத்துடுங்க . நாம எப்படி பிரேமானந்தா,  டாக்டர் பிரகாஷ், நித்தியானந்தா, சஹானா பத்தியெல்லாம் பரபரப்பா பேசுறோமோ அது மாதிரியே அமெரிக்க மக்களும் இந்த கொலைகள் பத்தி பரபரப்பா பேசிட்டு இருந்து இருக்காங்க. இந்த பரபரப்பை பணமாக்க விரும்பிய வார்னர் பிதர்ஸ் இது மாதிரியே ஒரு தொடர் கொலைகளை பற்றி கிளிண்ட் ஈஸ்ட்வூட்டை போலீஸ் ஹீரோவா வைச்சு ஒரு படமெடுத்தாங்க. படம் பயங்கர ஹிட் ஆனதோட இல்லாம ஈஸ்ட்வூட்டோட வாழ்க்கையிலையே முக்கியமான கதாப்பாத்திரம் ஆகிட்டு அந்த படத்தின் பெயர் தான் "Dirty Harry".

         நம்ம ஊர்ல இந்த மாதிரி பரபரப்பான விஷயங்களை அடிப்படையா வைச்சு புனையப்பட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எடுத்து இருக்கார். அட்டோ சங்கரின் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட புலன் விசாரணை, வீரப்பன் பத்தி வந்த கேப்டன் பிரபாகரன், ராஜீவ் கொலையை பத்தி எடுக்கப்பட்டு15 வருஷம் கழிச்சு வந்த   குற்றப்பத்திரிக்கை அவ்வளவு தான் நியாபகம் வருது வேற எதாவது இருந்தா சொல்லுஙக..,




       எல்லாரும் சுகமா இருக்கிற ஒரு சுபதினத்துல நிச்சல் குளத்துல குளிக்கிற ஒரு பொண்ணுக்கு ஒரு புல்லட்டையும் மேயருக்கு ஒரு லெட்டரையும் ஒருத்தன் அனுப்புறான் ஒரு சைக்கோ கொலைக்காரன். அந்த லெட்டரில் தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுக்கணும் இல்லைன்னா தினமும் ஒருத்தரை கொன்னுடுவேன்னு மிரட்டுறான். இந்த கேஸ் பாக்குற கிளிண்ட்  முதல்ல அவனை பிடிக்க சில பல பொறிகளை வைக்குறார் ஆனா அதுலலாம் சிக்காம தப்பிக்கிறதோட அவன் சொன்ன மாதிரியே தினமும் ஒருத்தர்ன்னு ரெண்டு பேர கொலை பண்ணிடுறான் அதுல ஒருததர் கறுப்பின சிறுவன் இன்னொருத்தர் பாதிரியார். நிலைமை சீரியஸாவதை உணர்ந்த மேயர் பணம் கொடுக்குறதா முடிவு பண்ணி அந்த பணத்தை  நம்ம கிளிண்ட் கைலையே கொடுத்து அனுப்பறார்.

     பணம் கொடுக்க போன நம்ம கிளிண்ட பணத்த கொடுத்தோமா பக்கோடா சாப்பிட்டோமான்னு இல்லாம அவனை பிடிக்க ட்ரை பண்றார் ஆனா அவன் அப்போ கால்ல ஒரு கத்திய வாங்குனதோட தப்பிச்சிடுறான். மறுபடியும் தேடி அவனை பிடிச்சிட்டு வரும் ஈஸ்ட்வூட் சும்மா அடி பின்னிடுறார். ஆனாலும் சாட்சி இல்லைன்னு அவன் எஸ்கேப் ஆகிடுறான். அதுக்கப்புறம் அவனை மறுபடியும் பிடிச்சாரா இல்லையா என்பதையெல்லாம் டவுன்டலோட் பண்ணி பாத்துக்கோங்க..,
      
      எங்கு தப்பு நடந்தாலும் சட்டத்தின் துணை தேடாமல் மனசாட்சியின் படி தட்டி கேட்க்கும் அல்லது தண்டிக்கும் மூக்கு மேல் கோபம் வருகின்ற Rough and Tough போலீஸ் கதாப்பாத்திரம் தான் Harry Callahan என்கிற Dirty Harry.  இது ஒன்று நமக்கு ரொம்ப அந்நியமான கதாப்பாத்திரம் கிடையாது சாமி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஏகப்பட்ட படங்களில் விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் என தமிழ் மட்டுமில்லாம இது தாண்டா போலீஸ், அக்னி I.P.S, வைஜெயந்தி  I.P.S என்று தெலுங்கு வாலாக்கலாலும் நீண்ட நாளாக காட்டி வருவது தான். எனினும் இந்த மாதிரி கதாப்பாத்திரங்களுக்கெல்லாம் Dirty Harry தான் தொடக்கம் என்று சொல்கிறார்கள். இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாதவாறு அட்டகாசமாய் இருக்கிறார் ஈஸ்ட்வூட் அப்படி ஒரு கம்பீரம், மேன்லினெஸ். இந்த படத்தில் அந்த ட்ரெட்மார்க் .44 Magnum துப்பாக்கியோடு அவர் இருக்கும் ஸ்டில் ரொம்ப பிரபலம் நிறைய பேர் டிசர்ட்டில் அந்த படத்தோட சுத்துவதை பார்த்து இருக்கலாம்.



       கிளிண்ட் ஈஸ்ட்வுட் கொஞ்சம் முரட்டு தனமான இளைஞன் (இப்பவெல்லாம் வயசான இளைஞன்) அல்லது ரொம்ப முரட்டுதனமான இளைஞன் என பல வித்தியாசமான வேடங்களில் நடித்தவர் :). என்ன தான் ஒரே மாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அவரோட ஸ்கிரீன் பிரஸென்ஸ அடிச்சுக்கவே முடியாது கிட்டதட்ட நம்ம ஊரு ரஜினி மாதிரி மாஸான ஆளு.நாயகனாக தன் காலம் முடிய தொடங்கியதை உணர்ந்து நடிப்பதை குறைத்து இயக்குநராக மாறி சில ஆஸ்கர்கள் வாங்கும் அளவுக்கு அதிலும் நிருப்பித்தவர் இதுக்காகவே ரொம்ப பிடிக்கும்.

           எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவர் பஞ்ச் டயலாக் பேசும் ஸ்டைல் "My mistake. Four coffins... " என்று 34 வயதில் (A Fistful of Dollars - 1964) சொல்லும் போதும் சரி  "I'll blow a hole in your face then go inside and sleep like a baby."  என்று 78 வயதில் (Gran Torino - 2008) பஞ்சடிக்கும் போதும் போதும் சரி கொஞ்சம் கூட “கெத்து” குறையாமல் இருக்கும். இந்த படத்திலும் இவர் சொல்லும் வசனங்கள் எல்லாம் இன்னமும் செம பிரபலம்..,

 I know what you're thinking. "Did he fire six shots or only five?" Well, to tell you the truth, in all this excitement I kind of lost track myself. But being as this is a .44 Magnum, the most powerful handgun in the world, and would blow your head clean off, you've got to ask yourself one question: Do I feel lucky? Well, do ya, punk?

இது படத்தின் மிக பிரபலமான வசனம். இதை படிக்கும் போது அந்த ஃபீலிங் வருமான்னு தெரில ஆனா படம் பாக்கும் போது செமையா இருக்கும். இது மட்டுமில்லாம மத்த வசனங்களும் புல்லட் ஷார்ப் தான்..

Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy. 
The Mayor: Intent? How did you establish that? 
Harry Callahan: When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross! 
----------------------------
Harry Callahan: And who says that? 
District Attorney Rothko: It's the law. 
Harry Callahan: Well, then the law is crazy. 

        இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் குறித்தோ மற்ற விஷயங்கள் குறித்தோ எழுத எதுவும் தோன்றவில்லை. படம் பார்த்து ஒரு வாரமாக போகுது ஆனா எப்போ இந்த படத்த பத்தி நினைச்சாலும் மூணு விஷயம் தான் நியாபகம் வருது Clint Eastwood, Harry Callahan மற்றும் Dirty Harry.

      உங்களுக்கு எண்பதுகளில் வந்த ரஜினி படம் பிடிக்குமா அதுவும் ஹீரோயின் பாட்டெல்லாம் இல்லாமல் ஆக்சன் மட்டும் உள்ள ரஜினி படம் என்றால் ??. ஆம் என்றால் இது நீங்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம்.

Dirty Harry - A .44 Magnum Opus ..,

[ Read More ]

சோளகர் தொட்டி [ச.பாலமுருகன்] ~ அதிகாரத்தின் பெருங்காதல்கள்

           சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் இன்னும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வீரப்பன் மட்டுமல்ல அவருடைய பெரிய மீசையையும் அவரை பிடிப்பதற்க்காக தமிழக கர்நாடக போலீஸார்  மேற்கொண்ட மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட  தேடல் வேட்டையும் இந்திய அளவில் ரொம்ப பிரபலம். வீரப்பன் கொல்லப்பட்ட செய்தியை அரை பக்க செய்தியாக சீன பத்திரிக்கையில் வந்ததாக தினதந்தியில் படித்தது நியாபகம் இருக்கிறது. ஆனால் அந்த தேடுதல் வேட்டையின் போது அந்த காடுகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களின் மீது  கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் ஏனோ அத்தனை பிரபலம் இல்லை. நமது அமைதிப்படையை போல் அண்டை நாட்டுக்கு போகும் வசதி இல்லாததால் சொந்த மண்ணிலேயே அதிரடிப்படையினரால் நிகழ்த்தப்பட்ட அத்தகைய கொடுமைகளுக்கு இலக்கிய சாட்சியாய் நிற்கிறது "சோளகர் தொட்டி".

           சோளகர் தொட்டி எனப்படும் பழங்குடி இன கிராமத்தின் கதை தான் இரண்டு பாகங்களாக பிரித்து இந்த புத்தகத்தில் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில்  அவர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், விழாக்கள் என அவர்களின் கலாச்சாரம் பெருங்கவனத்துடன் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஏற்படும் பதற்றம், அவர்களின் அரம்பக்கட்ட விசாரணை ஏற்படுத்தும் பிரச்சனைகள், அதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

      கொத்தல்லி, மாதி, பேதன், ஜோகம்மாள், கெம்பப்பாள், ஈரம்மா, புட்டன், மண்ணன், சிக்குமாதா,  கோல்காரன், ஜணையன், சித்தி என பரிச்சியமில்லாத பெயர் கொண்டவர்களை பரிச்சியமாகுவதில் முதல் பாகம் வெற்றி பெறுகிறது. சோளகர் தொட்டியின் இயல்பான காலத்தை தான் முதல் பாகத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும் அதுவும் அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. குடியானவர்களால் சுரண்டப்படுகின்றனர் , பரம்பரையாக இருந்த நிலத்தில் இருந்து அநியாயமாய் துரத்தப்படுகின்றனர். கொல்ல வந்த கரடியை கொன்று தின்றதற்க்காக சிக்குமாதா நிர்வாணமாய் வைத்து அடிக்கப்படுகிறான் மற்றும் அவனை விடுவிப்பதற்க்காக தொட்டியே கடனாளி ஆகிறது. இத்தனை சுரண்டல்களும் இன்னல்களும் இருந்தாலும் வாழ்க்கையை ஆடல், பாடல், கஞ்சா என கொண்டாட்டத்துடனே வாழ்கின்றனர்.

            இரண்டாம் பாகத்தின் ஆரம்பம் முதலே வீரப்பன் வேட்டையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடங்கி விடுகிறது. முதலில் மன ரீதியாக டார்ச்சர் கொடுக்க தொடங்குகின்றனர். காவலர்களை பொறுத்த வரை வனத்தில் இருக்கும் எல்லா ஆண்களும் வீரப்பனுக்கு உதவுபவர்கள், எல்லா பெண்களும் வீரப்பன் கூட படுத்தவர்கள், எல்லா குழந்தைகளும் வீரப்பனுக்கு பிறந்தவர்கள். சித்ரவதைகளின் போது வலிக்குது என்று சொல்பவர்களிடம் எல்லாம்  "வீரப்பன் கூட படுக்கும் போது மட்டும் சுகமா இருந்துச்சோ " என்ற கேள்வி மறக்காமல் கேட்கப்படுகிறது. காவல்துறையினர் தங்கி இருக்கும் முகாம்களின் சித்ரவதை படுத்துவதற்க்கென்றே "வொர்க் ஷாப்" ஒன்று இருக்கிறது அதில் சாதாரண சிதரவதை போக புது வகையான சித்ரவதைகளும் செய்கின்றனர்.

      கணவன் கண்முன்னே மனைவி கற்பழிக்க படுகிறாள் வேண்டாமென்று கெஞ்சும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடி விழுகிறது, தந்தையை மகனும் மகனை தந்தையும் செருப்பால் அடிக்க வேண்டும் இல்லையெனில் இருவருக்கும் காட்டுதனமான அடி கிடைக்கும், கட்டைவிரலை மடக்கி வைத்து மணிக்கட்டுடன் சேர்த்து கட்டி வைப்பார்கள் அப்படி செய்தால் அவர்களால் வாழ்க்கை முழுவதும் கட்டை விரலால் எதையும் தூக்க முடியாது, எட்டு மாத கர்ப்பிணியை நான்கு பேர் கொடுரமான முறையில் கற்ப்பழிக்கின்றனர், காவலர்கள் அனுமதித்தால் மட்டுமே யாரக இருந்தாலும் உடை அணிந்து கொள்ளவேண்டும் அதுவும் விசாரணையின் போது ஆண் பெண் பேதமில்லாமல் அனைவரும் நிர்வாணம் தான், காது மடல்கள், மார்பு காம்புகள், பிறப்புறுப்பு என கிளிப்புகள் மாட்டப்பட்டு மின்சாரம் செலுத்தப்படுகிறது, மின்சாரம் செலுத்தும் போது பீதியினால் மலம் கழிப்பவர்களின் வாயில் அந்த மலம் திணிக்கப்படுகிறது, பகலெல்லாம் இப்படி விசாரணை செய்யப்படும் பெண்கள் இரவுகளில் ஆறேழு பேரால் வண்புணர்ச்சி செய்யப்படுகின்றனர், "என்னை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க எம்மகளை விட்டுறுங்க" எனக் கதறும் தாயின் மகளை எல்லாரும் இருக்கும் அறையில் நிர்வாணமாக கட்டி வைத்து அனைவரையும் பார்க்க சொல்கின்றனர் பார்க்காதவர்களுக்கு அடி விழுகிறது அதே நிலையில் அந்த பெண் வண்புணர்ச்சி செய்யப்படுகிறார். இவை யாவும் நடந்தது நாஜி முகாம்களில் அல்ல செய்தவர்கள் சிங்களர்களோ வேறு இனத்தவர்களோ அல்ல நீங்களும் நானும் பேசும் மொழியை பேசுபவர்கள் வணங்கும் கொடியை வணங்குபவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

 
       
                "1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன் முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன. காவல் துறையால் அடித்து உதைத்து முட மாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ் சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின் கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய தேவையும் இருந்தது. 'சோளகர் தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது"  என்ற தனக்கு ஏற்ப்பட்ட அதிர்வை சொல்கிறார் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான  ச.பாலமுருகன். நாவலின் இரண்டு பாகத்திலும் வழக்கமாக கதை சொல்வத்ற்க்கான அழகியலை தவித்து இருப்பதால் ரொம்பவே ஆவணத்தன்மையுடன் சொல்லப்பட்டு இருக்கிறது. சொல்லப்படும் கதைகள் எல்லாம் கதைகளாக உணராமல் உண்மை சம்பவங்களை போல் உணர்வதற்க்காக திட்டமிட்டே ஆவணத்தண்மையுடன் சொல்லப்பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்திய விஷயம் நாவலின் முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சோளகர்களின் வாழ்க்கை முறை. இத்தனை நுணுக்கமாக சொல்வதற்க்கு குறைந்தது சில வருஷங்களாவது  அவர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.

         இந்த புத்தகம் வீரப்பனுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று ஒரு விமர்சனம் இணையத்தில் உலாவுகிறது ஆனால் அது உண்மை அல்ல. விரப்பனுக்கும் அரசுக்கும் இடையே சிக்கி சிதைந்து போன மக்களின் வாழ்க்கையை மட்டுமே இந்த புத்தகம் சொல்கிறது.

       வீரப்பனை கொன்றாகிவிட்டது, பாராட்டு விழா முடிந்தாகி விட்டது, பதக்கங்களும் வீட்டு மனைகளும் கொடுத்தாகிவிட்டது ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை :(.

பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை      : 120 ரூபாய்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்..,
        
[ Read More ]