ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 02 - Silver Linings Playbook

            தனிமை மிக கொடுமையானது யாரும் விரும்பாதது யாருக்கும் நிகழக்கூடாதது. எத்தனையோ மனிதர்கள் சுற்றி இருக்கும் போதும் ஒருவன் தனிமையில் இருப்பது என்பது விருப்பம் அல்ல தேர்வு அல்ல அது ஒரு தேடலின் துயர முடிவு மானுடத்தின் பெருந்தோல்வி மொழியும் நாகரீகமும் வெட்கி தலைக்குனியும் தருணம். தனிமையை விரும்புவதாய் சொல்லும் அனைவரும் தங்கள் பாசாங்குகளையும் போலித்தனங்களையும் விலக்கி வைத்த பின் ஏற்படும் உண்மையான உறவை வென்றிடாதவர்கள்.  உண்மையில் யாருக்கும் தனிமை விதிக்கப்படுவதல்ல அனைவரும் பாசாங்கற்ற முகத்தையும் மனதையும் அவர்களுக்கே காட்டிடும் யாரோ ஒருவரை ஒரு முறையேனும் சந்திக்க தான் செய்கிறார்கள். பெரும்பாலும் அந்த சந்திப்புகள் மட்டுமே உறவை ஏற்படுத்துவது இல்லை எதாவது தடையோ காரணமோ கண்டுபிடித்து அதற்கு ஒரு பெயரும் வைத்து ஒதுங்கியே இருக்கிறார்கள். ஒரு புன்னகை மறுக்கப்பட்டிருக்கலாம் ஒரு கடும் பார்வை வீசப்பட்டிருக்கலாம் எப்போதேனும் வார்த்தைகள் கட்டுபாட்டை இழந்திருக்கலாம் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுக்கானவரை நோக்கி செல்லுங்கள் வாழ்கை வசந்தமாகட்டும்..,



    எல்லா ஆஸ்கரிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கறுப்பு குதிரையாக எதாவது ஒரு படம் நிறைய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஆச்சர்யப்படுத்தும். இந்த கறுப்பு குதிரைகள் சில சமயம் பயங்கரமாய் இம்ப்ரஸ் செய்து ஆச்சர்யப்படுத்தும் சில படங்கள் காசு கீசு குடுத்து வந்துருப்பாய்ங்களோன்னு சந்தேகப்படும் அளவிற்கு மொக்கை போடும் அவற்றுள் இந்த திரைப்படம் முதல் வகையை சேர்ந்தது. ஆஸ்கர் விருகளுக்கான பரிந்துரைகளை பார்த்த போது மற்ற படங்களின் பெயரேனும் தெரிந்து இருந்தது  இதன் பெயரே அப்போது தான் கேள்விப்பட்டேன் அதே நேரத்தில் பார்த்த மாத்திரத்தில் பிடித்து போய்விட்டது. மூணு, ஆரோகணம் ஆகிய படங்களின் மூலம் நமக்கு அறிமுகமான Bi-Polar Disorder உள்ள நாயகன் அவருக்கு ஏற்ற(!!) பெண்ணை கண்டு வேற்றுமைகளை கடந்து இணைந்தார் என்பதை படுஜாலியாகவும் சுவாரஸியமாகவும் சொல்லி இருக்கும் படம் தான் Silver Linings Playbook.


          மனைவியுடன் இருந்த ஆணை தாக்கிவிட்டு Bi-Polar Disorder வியாதிக்காக மனநல மருத்துவமனையில் எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் பிராட்லி ஹூப்பர். அவர் முழுமையாக குணமாவதற்க்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வீட்டிற்க்கு அழைத்து வந்துவிடுகிறார் அவருடைய அம்மா. அவருடைய மனைவியை 500 அடிக்கு தூரத்திற்கு குறைவாக நெருங்க கூடாது என்ற Restraining உத்தரவுடன் வீட்டிற்க்கு வரும் பிராட்லி அவருடைய முழுநேர வேலையாக மனைவியை தேடுகிறார். சமீபத்தில் கணவனை இழந்த ஜெனிஃபர் லாரன்ஸை ஒரு விருந்தில் சந்திக்கிறார். கணவன் இழந்த சோகத்தை குறைப்பதற்க்காக டான்ஸ் பயிற்சியில் ஈடுப்படும் ஜெனிஃபருக்கு ஏகப்பட்ட ஆண்களுடன் பழக்கம் இருக்கிறது அதன் காரணமாக வேலையையும் இழக்கிறார். பிராட்லியின் அப்பாவாக வரும் ராபர்ட் டீ நீரோ ஒரு வெறித்தனமாக பெட் கட்ட கூடிய ஃபுட்பால் வெறியராக வருகிறார் அதுமட்டுமில்லாமல் அவருடைய மகன் ஒரு குறிப்பிட்ட சோஃபாவில் உட்கார்ந்து பார்த்தால் அவருடைய அணி வெல்லும் என காமெடியான நம்பிக்கைகள் வேறு உண்டு.

          தன்னுடன் நடன போட்டியில் பங்கு பெறுவதாக இருந்தால் பிராட்லியை அவருடைய மனைவியிடன் சந்திக்க வைப்பதாக சொல்லி  பயிற்சிக்கு வர வைக்கிறார். பயிற்சியில் எப்போதும் இருப்பதால் சரிவர அப்பாவுடன் சேர்ந்து பேட்ச் பார்க்க முடிவதில்லை. பயிற்சி காலத்தில் இருவருக்கு இடையிலும் ஒரு அழகான உறவு ஏற்படத் தொடங்குகிறது. ஒரு முக்கிய போட்டியின் போது மைதானதிற்கு வெளியே சண்டை போட்டதால் மேட்சிற்கு போகாமுடியவில்லை. அன்றுடீ நீரோ நிறைய பணத்தை தோற்கிறார். இழந்த பணத்தை மீட்பதற்க்காக மொத்த சொத்தையும் ஒரு போட்டியில் பந்தயம் கட்டுகிறார். அந்த போட்டியில் அவருடைய அணி வெல்வதோடு பிராட்லியும் ஜெனிஃபரும் கலந்து கொள்ளும் போட்டியில் பத்திற்க்கு ஐந்து மதிப்பெண்ணாவது வாங்கினால் டீ நீரோ இழந்த அத்தனையும் தருவதாக அவரிடம் பெட் கட்டும் நண்பர் வாக்கு கொடுக்கிறார். அந்த முக்கிய போட்டி என்ன ஆனது ? அந்த டான்ஸ் போட்டி என்ன ஆனது என்பதெல்லாம் உங்களுக்கே தெரியுமென்றாலும் படத்தில் பாத்துகோங்க.


        திரைக்கதை தான் எந்தவொரு படத்திற்க்கும் அடிநாதம் என்றாலும் அதை நடிக்கும் நடிகர்களின் நடிப்பே அதன் முழுமையான வடிவத்தை கொடுக்க முடியும். அதற்க்கு உதாரணமாக இந்த படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் கூட சோடை போகாமல் இந்த படத்தில் நடித்த எல்லோருமே பெர்ஃபாமென்ஸில் பின்னி எடுத்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர்  ‘The Fighter’ படத்தை இயக்கிய David O. Russell அந்த படத்துகாக Christian Bale ஆஸ்கர் விருது வாங்கியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் மெல்லிய உரசல்கள் அந்த உரசல்களின் ஊடே வெளிப்படும் அன்பு, அட்டகாசமான உரையாடல்கள் குறிப்பாக ஒன்லைனர்கள் என ஃபைட்டர் படத்தில் எதெல்லாம் ஈர்த்ததோ அதுஎல்லாமும் இந்த படத்திலும் இருக்கிறது ஆனால் அத்தனையும் வேறு மாதிரி இருக்கிறது.

        Bradley Cooper கதையின் நாயகன் (:P) பேட்டாக நடித்து இருக்கிறார். மனைவியை நினைத்து ஏங்குவது, எப்படியேனும் அவரிடம் பேசிவிட வேண்டும் என தவிப்பது, அதீதமாய் கோபப்படுவது என கதாப்பாத்திரத்திற்க்கு எவ்வளவு நியாயக் செய்ய வேண்டுமோ அவ்வளவு நியாயம் செய்து இருக்கிறார் ஆனாலும் ரெண்டு பேர் சுலபாக அவரை ஓவர் டேக் செய்துவிடுகின்றனர் ஒருவர் படத்தின் ஹீரோயின் Jennifer Lawrence மற்றொருவர் அவருடைய அப்பாவாக நடித்து இருக்கும் Robert De Niro. Hunger Games படத்தில் உம்மனாமூச்சி Katniss ஆக நடித்தவர் இதில் அதற்கு 'Perfectly Opposite'  கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். மனிதில் பட்ட எதையும் கொஞ்சமும் தயங்காமல் பேசுகிற, அடுத்தவர்களை அதிகாரம் செய்பவராக எல்லா ஆண்களுடனும் சுற்றி கொண்டிருப்பவராக ஓவர் ஆக்டிங் செய்வதற்க்கான சகல சந்தர்ப்பங்கள் இருந்தும் அப்படி ஏதும் நிகழாமல் நடித்திருக்கிறார்.ஏற்கனவே இந்த 14 விருதுகள் வாங்கிவிட்ட நிலையில் போட்டி கடுமையாக இருந்தாலும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


        உலகின் தலை சிறந்த நடிகர்களுள் ஒருவரான Robert De Niro பிராட்லி ஹூப்பரின் தந்தையாக நடித்து இருக்கிறார். தந்தூரி சிக்கனை தயிர் சாதத்துடம் வைத்து சாப்பிடுவது போல Righteous Kill, New Year's Eve மாதிரியான மொக்கையான படங்களில் தான் சமீபகாலமாக டீ நீரோவை பார்க்க முடிந்த்து. அதுமாதிரி இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் நடிப்பு திறமையை வெளிப்படும் விதமாய் நல்ல கதாப்பாத்திரத்திலும் நல்ல படத்திலும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. Philadelphia Eagles அணியின் (Rugby or American Football) அதிதீவிர ஆதரவாளராக எப்பவும் அதை பற்றியே பேசிக்கோண்டிருக்கும் ஸ்டேடியத்திற்க்குள் நுழைய தடை விதிக்கப்படும் அளவிற்க்கு வெறித்தனமாக தனது அணிக்காக சண்டை போடக்கூடிய கதாப்பாத்திரம் வயசானலும் சிங்கம் தான் மாதிரி அசால்ட்டாக நடித்திருக்கிறார். டீ நீரோ வுக்கும் சிறந்த துணை நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் கடும் போட்டியின் காரணமாக கிடைப்பது கடினம் தான் என்றாலும் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம்.

      சிறந்த திரைப்படம் உட்பட எட்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பரிந்துரையிலையே சில சாதனைகளையும் செய்தும் இருக்கிறது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என நடிப்புக்காக வழங்கப்படும் நான்கு விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது கடந்த முப்பது வருடங்களில் இந்த சாதனையை செய்யும் முதல் திரைப்படம் இது தான் அதுமட்டுமில்லாமல் ஆஸ்கர் வரலாற்றிலேயே எந்த படமும் இந்த இந்த நான்கு விருதுகளையும் வென்றதில்லை ஆகவே இந்த படம்  இந்த நான்கு விருதுகளையும் வாங்கும் பட்சத்தில் அது ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை (Adapted or Original) இந்த ஐந்து விருதுகளையும் சேர்த்து Big Five என்று சொல்லுவார்கள். இந்த ஐந்து விருதுகளையும் ஒரே படம் வெல்லும் அரிய நிகழ்வு மூன்று முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த படமும் இந்த ஐந்து விருதுகளுக்காகவும் நாமிநேட் செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பாக 2004-ல் Million DOllar Baby தான் இந்த 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது ஆனால் மூன்றை தான் வெல்ல முடிந்தது.

             சிறந்த திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வெல்வதற்க்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பரிந்துரை பட்டியலில் கறுப்பு குதிரையாக வந்தது போல் விருது பட்டியலிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வந்து ஆச்சர்யபடுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு இல்லை :).
[ Read More ]

ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 01 - Argo

         ஆயிரம் குறைகள் சொன்னாலும் அதன் உள்ளரசியல் குறித்து விமர்சித்தாலும் வருடா வருடம் ரொம்பவே எதிர்ப்பார்க்க வைக்கும் விஷயமாகவே இருக்கிறது ஆஸ்கர் விருதுகள். எல்லா வருடங்களையும் போலவே எதிர்ப்பார்த்த படங்கள் பரிந்துரைக்கப்படாமலும் அதுவரை பெயர் கூட கேள்விப்படாத படங்கள் பரிந்துரைக்கப்படுவதும் இந்த வருடமும் நடந்தே இருக்கிறது. நான் ஆஸ்கர் பற்றி எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஆஸ்கர் விருது கொடுக்கத்தான் போகிறார்கள் இருந்தாலும் ஒரு ஆர்வ மேலிட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட படங்களை பற்றி எழுதப்போகிறேன் படிச்சிட்டு படத்தை பாருங்க ரொம்ப கஷ்ட்ட்ட்ட்டமா இருந்தா படத்தை மட்டுமாவது பாத்துடுங்க :) .



         "வரலாறு என்பது உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படும் புனைவு" எம்.ஜி.சுரேஷின் நாவல் ஒன்றில் படித்த வரிகள். இந்த விதியை மிக லாவகமாகவும் அதிகமாகவும் உபயோகப்படுத்தும் மற்றொரு இடம் என்றால் அது நிச்சயம் ஹாலிவூட் தான். ஒரு சம்பவத்தையோ கதையையோ படமாக்க முடிவு செய்யும் பட்சத்தில் அதை திரைக்கதையாக மாற்றி எழுதும் வேளையில் நிறைய மாற்றங்கள் செய்வார்கள். திரைக்கதையை ஹாலிவூட்டிற்க்கே உண்டான வடிவத்திற்க்குள் கொண்டு வரவும் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்க்காகவும் சில காட்சிகள் வெட்டப்படும் சில காட்சிகள் மாற்றப்படும் சில காட்சிகள் சேர்க்கப்படும். இதை தவிர்த்து மிக முக்கியமான விஷயம் அமெரிக்க ஆதரவு கருத்துக்களையும் நாட்டு பற்று சமாச்சாரங்களையும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தூவுவார்கள். மனிதர்களை வில்லனாக காட்டிய படங்களை கூட பார்த்துவிடலாம் ஆனால் அமெரிக்காவை வில்லனாக காட்டிய படங்கள் தேடினாலும் கிடைக்காது. 1979-ல் ஈரானில் அமெரிக்க தூதரகம் சிறைப்பிடிக்கப்பட அதில் இருந்து தப்பிக்கும் ஆறு அமெரிக்கர்களை கனடாவின் உதவியுடன் அமெரிக்க உளவுதுறையான சி.ஐ.ஏ காப்பாற்றிய சம்பவத்தை மேலே சொன்ன விஷயங்களெல்லாம் கலந்து வெளிவந்திருக்கும் படம் தான்  'Argo'.

           படத்தின் கதைகளத்திற்க்கு தேவையான வரலாற்று பின்னணியை வாய்ஸ் ஓவரில் சொல்லியப்படி படம் தொடங்குகிறது. ஈரானின் கடைசி மன்னரான  Mohammad Rezā Shāh Pahlavī ஈரானிய புரட்சியின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்படுகிறார். உயிரை காப்பாற்றி கொள்ளும் பொருட்டு அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறார். அதுவரை வெளிநாட்டில் இருந்து புரட்சியை வழிநடத்திய Ayatollah Khomeini ஈரான் திரும்பி நாட்டின் முதன்மை தலைவராக பதவி ஏற்று கொள்கிறார். ஈரானிய மக்கள் தப்பி ஓடிய மன்னரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு எதிராய் போராடுகின்றனர். டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போரார்ட்டகாரர்கள் அங்கு இருக்கும் 50-க்கும் மேற்ப்பட்ட அமெரிக்கர்களை சிறைப்பிடிக்கின்றனர். இந்த சம்பவத்தின் போது அமெரிக்க தூதரக ஊழியர்கள் ஆறு பேர் தப்பித்து கனட நாட்டு தூதரின் வீட்டில் தஞ்சமைடைகின்றனர்.

         கனட தேச தூதரின் வீட்டில் இருக்கும் அந்த ஆறு அமெரிக்கர்களையும் எப்படி கூட்டி வருவது என சி.ஐ.ஏ அதிகாரி டோனி மெண்டெஸ் மற்றும் அவருடை மேலதிகாரி Jack O'Donnell யோசித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கனட நாட்டு திரைப்படம் எடுப்பதாக சொல்லி லொக்கேஷன் பார்ப்பதற்க்காக ஈரான் போய் அவர்களையும் தங்களுடன் வந்ததாக சொல்லி அழைத்து வந்துவிடலாம் என்று யோசனை சொல்கிறார் டோனி. டோனியின் திட்டத்தை செயல்படுத்த தயாரிப்பாளர் ஒருவரை பிடித்து போலி திரைப்பட தயாரிப்பு நிறுவனம், அவர்களுக்கு போலி பாஸ்போர்ட்,  போஸ்டர் டிசைன், பிரஸ்மீட் என ஒரு திரைப்படத்துக்கான எல்லா வேலையையும் செய்கின்றனர். அந்த போலி படத்துக்கு வைக்கப்படும் பெயர் தான் 'Argo'.

            ஆர்கோவில் துணை தயாரிப்பாளர் என்று போய் சொல்லி டெஹரான் வருகிறார். அங்கு அந்த ஆறு அமெரிக்கர்களையும் சந்தித்து அவர்களுடைய நம்பிக்கையை பெற்று தன்னுடன் வருவதற்க்கு சம்மதிக்க வைக்கிறார். அதன் பின்னால் வரும் தடைகளை எல்லாம் தாண்டி எப்படி அவர்களை ஈரானை விட்டு வெளியே கொண்டு வருகிறார் என்பதையெல்லாம் படத்தில் பாத்துக்கோங்க.
Argo Fuck Yourself :) :)

         அனல் பறக்கும் சண்டைகளோ, அட்டகாசமான ஸ்பெஷல் எஃபெக்ட்டோ இல்லாமலே மொத்த படமும் பரபரவென இருக்கிறது. காமெடி, பரபரப்பு எல்லாம் சமவிகிதத்தில கலந்த படு நேர்த்தியான திரைக்கதை மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. டோனி மெண்டெஸ் ஆக நடித்ததுடன் படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார் Ben Affleck. Breaking Bad டி.வி சீரிஸ் புகழ் Bryan Cranston டோனியில் மேலதிகாரி Jack O'Donnell ஆக நடித்து இருக்கிறார். Ben Affleck தான் முதலில் ஒரு நடிகர் அப்புறம் தான் இயக்குநர் என்றாலும் செம மொக்கையான நடிகர் ஆனால் அவர் இயக்கிய படங்கள் எல்லாம் அதற்கு நேர்மாறானவை. அவர் முதன்முதலாக திரைக்கதை எழுதிய Good Will Hunting எனக்கு ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று அதற்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வாங்கியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பென் தான் இயக்கிய முதல் படமான Gone Baby Gone படத்திலையே விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கினார் அதை தொடர்ந்து வந்த The Town படத்திலும் நல்ல விமர்சனங்கள் பெற்று நம்பிக்கை தரும் இயக்குநராக கருதப்பட தொடங்கினார். Argo இவருடைய இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது  திரைப்படம். படம் வெளிவந்த உடனே பரவலான கவனத்தை பெற்றதுடன் பென் அஃப்ளெக்கின் சிறந்த படமாகவும் இந்த வருடத்தின் சிறந்த படமாகவும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. 

    முதல் பத்தியில் சொன்னது போல் இந்த படத்திலும் அமெரிக்க ஆதரவு விஷயங்கள் நிறையவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் இந்த ஆப்ரேஷனில் கனடாவுடையே பங்கு ரொம்பவே அதிகம் அமெரிக்கா சும்மா ஆள் அனுப்பி கூட்டி வரும்  வேலையை மட்டுமே செய்தது. ஆனால் படத்தில் சி.ஐ.ஏ தான் எல்லா வேலையையும் செய்து விட்டு கனடாவுக்கு விட்டு கொடுத்தது போல் காட்டி இருப்பார்கள். Pearl Harbour மாதிரி நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தை மாற்றி எடுத்திருந்தால் கடுப்பாய் இருந்திருக்கும் ஆனால் இந்த கனடா மேட்டரெல்லாம் படம் பார்த்துவிட்டு விக்கிபீடியா மேயும் போது கிடைக்கும் தகவல்கள் என்பதால் படம் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இருக்காது.

     சிறந்த திரைப்படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருந்தாலும் Ben Affleck-க்கு சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காதது இந்த வருட ஆஸ்கரின் மிகப்பெரிய ஏமாற்றமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்கான நுழைவு வாயிலாய் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம் , சிறந்த இயக்குநர் உட்பட பல விருதுகளை பெற்ற போதே இது தான் இந்த வருடம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதை பெறப்போவதாக ஆருடம் சொன்னார்கள் ஆனால் கடைசியில் பிம்பிளாக்கி பிளாபி :) :).  பிரபல இயக்குநர் Queintin சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காததை விட  Ben Affleck-க்கு  கிடைக்காததே வருத்தமளிப்பதாகவும் பரிந்துரை மட்டுமல்ல சிறந்த இயக்குநருக்கான விருதை அவர் தான் வாங்க போவதாகவும் நினைத்திருந்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

Ben Affleck @ Golden Globes

    ஆஸ்கர் விருதுகளில் ஒரு வழக்கம் உண்டு அதாவது எந்த திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதை வாங்குகிறதோ அதுவே சிறந்த படத்திற்க்கான விருதையும் வாங்கும். கடந்த பத்து வருடங்களில்  ஒரு முறை தான் அது தவறி இருக்கிறது , 2005-ம் ஆண்டு சிறந்த படத்திற்க்கன விருதை  Crash வாங்க சிறந்த இயக்குநர் விருதை Brokeback Mountain படத்திற்க்காக Ang Lee வாங்கினார் அந்த வருடம் கூட Crash படத்தின் இயக்குநர் Paul Haggis சிறந்த இயக்குநர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.   சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காவிட்டாலும் சிறந்த படத்திற்க்கான விருதை வாங்கும் என இணையத்தில் படத்தின் ஆதரவாளர்களும் சில விமர்சகர்களும் எழுதி தள்ளுகின்றனர் என்ன நடக்க போகிறது என்று பிப்ரவரி 24-ம் அன்று தெரிந்து விடும் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

  ஆர்கோவிற்க்கு ஆஸ்கர் கிடைக்கிறதோ இல்லையோ ரசிகனை முட்டாளாக்காத பரபரப்பான படங்கள் பிடிக்குமென்றால் Just Go for it :) :).


       
[ Read More ]

Gulaal [ ஹிந்தி ~ 2009 ] - இந்தியாவின் கறுப்பு பக்கங்கள்

        "Divide and Rule" - பிரித்தாளும் தந்திரம். இந்தியா மொத்தத்தையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்க்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரபலமான ராஜதந்திரமாக சரித்திர பக்கங்கள் சொல்கின்றன. சுதந்திரத்திற்க்கு பிறகு "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொல்லாடல் ரூபாய்களிலும் பாடபுத்தகத்திலும் எத்தனை அழுத்தமாய் சொல்ல முனைந்தாலும் ஏனோ மக்கள் மனதில் ஏறவிடாமலே கவனமாக கையாளப்படுகிறது.  சாதி, மதம், இனம், மொழி, பணம், தொழில் என  எண்ணற்ற காரணிகளை கொண்டு கோடிக்கணக்கான மக்களை மிகச்சிறு குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர் அல்லது பிரிக்கப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக வளத்தெடுக்கப்பட்ட இனப்பற்றையும் அடுத்த இனத்தின் மீதான வன்மைத்தையையும் கொஞ்சமாய் தூண்டிவிடுவதன் மூலமாக மட்டுமே எத்தனை கொடூரங்கள் நடத்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது.  வரலாறு முழுவதும் மனிதனுக்கு துணையாய் வந்திருப்பது ரத்த வாடையும் ரத்த வெறியும் தானோ. யாரோ ஒருவனின் அபிலாஷைக்காக யாரோ ஒருவனின் பேராசைக்காக  யாரோ ஒருவரனின் போதாமைக்காக யாரோ பேசிய உண்மைக்காக யாரோ பேச மறுத்த பொய்க்காக யாரோ ஒருவன் கொலை செய்யப்படுகிறான் யாரோ ஒருவன் குருடாக்க படுகிறான் யாரோ ஒருத்தி கற்பழிக்கப்படுகிறாள் யாரோ ஒருவன் கண்ணீர் சிந்துகிறான் யாரோ ஒருவன் புன்னகை பூக்கிறான். சுதந்திரத்துக்கு பிறகு வெள்ளையர்கள் போய்விட்டாலும் எப்படி காபியும் கால்சட்டையும் இங்கேயே தங்கியதோ அப்படியே தான் இந்த அரசியல் தந்திரமும் அப்படியே இருக்கிறது. ஆங்கிலேயர்களின் இடத்தை So-Called தலைவர்கள் எல்லாம் எடுத்து கொண்டு எவ்வளவு தூண்ட முடியுமோ தூண்டி எவ்வளவு பிரிக்க முடியுமோ பிரித்து வைத்திருக்கின்றனர். இப்படி உணர்ச்சியை தூண்டும் So-Called தலைவர்கள் சாதிய உணர்வு தூண்ட பெற்ற இளைஞர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்கின்றனர் என்பதை செவிட்டில் அறைந்த மாதிரி சொல்லும் படம் தான் அனுரக் கஷ்யாப்பின்  இயக்கத்தில் வெளிவந்த ‘Gulaal’.


    வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலான தமிழ்படங்களில் சாதி பெயர் கூட உபயோகப்படுத்தபடுவதில்லை. தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாத ஒருவர் தமிழ் திரைப்படங்களை மட்டும் பார்க்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் யாவரும் தங்கள் சாதிய அடையாளங்களை மறத்து சமத்துவமாக இருப்பதாக எண்ணிவிடும் வாய்ப்புகளே அதிகம். இந்த விஷயத்தில் நம் இயக்குநர்களை குறை சொல்வதற்க்கு ஏதுமில்லை அவர்களுக்கு இருக்கும் Creative Space அவ்வளவு தான். இந்தியில் மட்டும் இதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் அனுரக் கஷ்யாப்க்கு சொல்ல வந்ததை நேராகவே சொல்லும் தைரியம் இருக்கிறது. ராஜஸ்தானில் இருக்கும் முக்கிய சாதிகளுள் ஒன்றான ராஜபுத்திர இனத்தலைவர்கள் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் ஆயுதமாய் கொண்டு தங்கள் சுயலாபங்களுக்காக அரசியல் காய் நகர்த்தல்களுக்காக படித்த இளைஞர்களை கொலைகாரர்களாகவும் சூழ்ச்சி செய்பவர்களாகவும் கொலை செய்யப்படுபவர்களாகவும் சூழ்ச்சியில் சிக்குபவர்களாகவும்எப்படி மாற்றுகின்றனர் என்பதை எந்த சமரசமும் இன்றி படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

      ராஜ புத்திரர்களின் வீரத்தையும் இந்தியாவிற்க்காக அவர்கள் செய்த தியாகங்களையும் பற்றிய வசனங்களோடு தொடங்குகிறது படம். இத்தனை தியாகங்கள் செய்த ராஜபுத்திரர்களுக்கு "மன்னர் மானிய ஒழிப்பு முறை" சட்டத்தின் மூலம் இந்தியா துரோகம் செய்து விட்டதாகவும் அதற்க்காக தனி நாடு வேண்டி போராட்டத்திற்க்கு தயாராகுமாறு துகி பனா அழைப்பு விடுக்கிறார். <ஃப்ளாஷ்பேக்> இந்த கூட்டம் நடப்பதற்க்கு 11 மாதங்களுக்கு முன்னால் திலிப் சிங் அந்த ஊருக்கு வருகிறார். ஹாஸ்டல் கிடைக்காததால் தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும் ராஜ புத்திர இளவரசனான ரன்ஸாவுடன் தங்குகிறார். ஒரு முறை கல்லூரியில் மற்ற மாணவர்களால் அடித்து நிர்வாணமாக்கப்பட்டு பாத்ரூமில் வைத்து பூட்டுகின்றனர். அங்கே அந்த கல்லூரி பேராசிரியர் அனுஜாவும் நிர்வாணமாய் பூட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை அப்படியே விட்டு விடும் படி திலீப்பின் அண்ணன் சொன்னாலும் தட்டி கேட்க வேண்டும் என ரன்ஸா திலீபை மறுபடி கல்லூரிக்கு அழைத்து செல்ல மறுபடியும் தாக்கப்படுகின்றனர். இதற்கு பின்னால் லோக்கல் ராஜ புத்திர தலைவரான துகி பனாவின் உதவியோடு பிரச்சனை தீர்க்கப்படுகிறது.

        கல்லூரி தேர்தலில் ரன்ஸா நிற்கிறான் அவனுக்கு போட்டியாக அவனுடைய தந்தையின் அங்கிகரிக்கப்படாத மகளான கிரண் நிற்க்கிறார். தேர்தலில் வரும் பிரச்சனையில் கிரணின் அண்ணனால் ரன்ஸா கொலை செய்யப்படுகிறார். ரன்ஸாவின் இடத்தில் அவருடைய நண்பரான திலீப் தேர்தலில் போட்டியிட்டு பனாவின் ஆதரவோடு ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்து வெற்றி பெறுகிறார். தேர்தலில் தோல்வி அடைந்த கிரண் அண்ணனின் அறிவுரையின் பேரில் திலிப்புடன் நெருங்கி பழகுகிறார். இதற்க்கிடையில் கல்லூரி விரிவுரையாளர் அனுஜா திலிப்புடன் வந்து தங்கி கொள்கிறார். கிரணின் தூண்டுதலினால் பனாவை எதிர்க்க ஆரம்பிக்கிறார் திலிப் கல்லூரி விழாவுக்காக திரட்டிய பணத்தை ராஜபுத்திரர்களின் போரார்ட்டத்திற்க்கு தர மறுக்கிறார்.


       திலீப்புடன் இருந்த பழக்கத்தின் காரணமாக கிரண் கர்ப்பமாகிறார். கர்பத்தை கலைப்பதுடன் திலீப்பை பார்ப்பதையே சுத்தமாக தவிர்க்கிறார் கிரண். மனமுடைந்த திலீப் கல்லூரி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கிரண் அந்த பொறுப்பை ஏற்கிறார். கடைசியாக கிரணை திலீப் சந்திக்கும் போது அந்த பதவிக்காக தான் பழகியதாக சொல்லி திலீப்பை அனுப்பிவிடுகிறார். மறுபடி அண்ணனின் அறிவுரைப்படி பனாவுடன் கிரண் நெருக்கமாக திலீப் என்ன செய்தார்..,  அரசியல் ஆட்டத்தில் யார் தலையெல்லம் சாய்க்கப்பட்டது.., தனி நாடு போராட்டம் என்ன ஆனது.., என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,

        படத்தின் மிகப்பெரிய பலம் துகி பனவாக நடித்திருக்கும் கே.கே.மேனனின் நடிப்பு. உடல் மொழியிலும் வசன உச்சரிப்புகளிலும் மிக சரியா அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். கதைக்கு பெரிதாய் தொடர்பு இல்லாவிட்டாலும் படம் நெடுகிலும் துகி பனாவின் அண்ணனாக வந்து அவரின் செயல்களை கிண்டல் அடித்து பாட்டு பாடும் ப்யூஸ் மிஸ்ராவின் கதாப்பாத்திரம் முக்கியமானது. ப்யூஸ் மிஸ்ராவுடன் அர்த்தநாரீஸ்வரர் போல் உடலில் வண்ணமிட்டபடி ஒருவர் வருகிறார், ஜான் லென்னன், பாப் மார்லி படங்களெல்லாம் ப்யூஸ் மிஸ்ரா, ரன்ஸா ஆகிய வித்தியாசமானவர்களின் வீட்டில் இருப்பதெல்லாம் எதோ குறியீடு போல இருக்கிறது யாராவது குறியீடு சித்தர்கள் விளக்கினால் நலம்.
 
        படத்தின் இயக்குநர் அனுரக் கஷ்யாப் தமிழ் இணைய உலகில் பரவலாக அறிமுகமானவர். இந்திய இண்டிபென்டன்ட் சினிமாவின் முகமாகவே மாறி வருபவர் (ஃபேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல் இண்டிபென்டன்ட் சினிமாவை சுதந்திர திரைப்படம் என்று சொல்லலாமா ? ?). 2001 திரைக்கதை எழுத தொடங்கி பட்ஜெட் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளால் 2009-ல் தான் வெளிவந்தது. விமர்சகர்களால் புகழப்பட்டாலும் வழக்கம் போல் பாக்ஸ் ஆஃபிஸில் ஊத்தி கொண்டது. படம் என்னவோ ராஜஸ்தானையும் ராஜ புத்திரர்களையும் பற்றி இருந்தாலும் இதில் காட்டப்படும் சம்பவங்கள் எல்லா மாநிலங்களிலும் எல்லா சாதிகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

        
        மாணவர்களை மையமாக கொண்ட அரசியல் படங்கள் என்றாலே அவர்கள் ஆட்சியை ஃபேன்டஸி கனவுகளை படங்களையே பார்த்த நமக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தருகிறது. அதே போல் அரசியல் பிரச்சனைகளை இந்த அளவு சிறப்பாக கையாண்ட வேறொரு இந்திய படத்தை நான் பார்த்ததில்லை. நண்பர்கள் அனைவரும் தவற விடாமல் பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
[ Read More ]