Showing posts with label உலகசினிமா. Show all posts
Showing posts with label உலகசினிமா. Show all posts

ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 02 - Silver Linings Playbook

            தனிமை மிக கொடுமையானது யாரும் விரும்பாதது யாருக்கும் நிகழக்கூடாதது. எத்தனையோ மனிதர்கள் சுற்றி இருக்கும் போதும் ஒருவன் தனிமையில் இருப்பது என்பது விருப்பம் அல்ல தேர்வு அல்ல அது ஒரு தேடலின் துயர முடிவு மானுடத்தின் பெருந்தோல்வி மொழியும் நாகரீகமும் வெட்கி தலைக்குனியும் தருணம். தனிமையை விரும்புவதாய் சொல்லும் அனைவரும் தங்கள் பாசாங்குகளையும் போலித்தனங்களையும் விலக்கி வைத்த பின் ஏற்படும் உண்மையான உறவை வென்றிடாதவர்கள்.  உண்மையில் யாருக்கும் தனிமை விதிக்கப்படுவதல்ல அனைவரும் பாசாங்கற்ற முகத்தையும் மனதையும் அவர்களுக்கே காட்டிடும் யாரோ ஒருவரை ஒரு முறையேனும் சந்திக்க தான் செய்கிறார்கள். பெரும்பாலும் அந்த சந்திப்புகள் மட்டுமே உறவை ஏற்படுத்துவது இல்லை எதாவது தடையோ காரணமோ கண்டுபிடித்து அதற்கு ஒரு பெயரும் வைத்து ஒதுங்கியே இருக்கிறார்கள். ஒரு புன்னகை மறுக்கப்பட்டிருக்கலாம் ஒரு கடும் பார்வை வீசப்பட்டிருக்கலாம் எப்போதேனும் வார்த்தைகள் கட்டுபாட்டை இழந்திருக்கலாம் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுக்கானவரை நோக்கி செல்லுங்கள் வாழ்கை வசந்தமாகட்டும்..,



    எல்லா ஆஸ்கரிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கறுப்பு குதிரையாக எதாவது ஒரு படம் நிறைய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஆச்சர்யப்படுத்தும். இந்த கறுப்பு குதிரைகள் சில சமயம் பயங்கரமாய் இம்ப்ரஸ் செய்து ஆச்சர்யப்படுத்தும் சில படங்கள் காசு கீசு குடுத்து வந்துருப்பாய்ங்களோன்னு சந்தேகப்படும் அளவிற்கு மொக்கை போடும் அவற்றுள் இந்த திரைப்படம் முதல் வகையை சேர்ந்தது. ஆஸ்கர் விருகளுக்கான பரிந்துரைகளை பார்த்த போது மற்ற படங்களின் பெயரேனும் தெரிந்து இருந்தது  இதன் பெயரே அப்போது தான் கேள்விப்பட்டேன் அதே நேரத்தில் பார்த்த மாத்திரத்தில் பிடித்து போய்விட்டது. மூணு, ஆரோகணம் ஆகிய படங்களின் மூலம் நமக்கு அறிமுகமான Bi-Polar Disorder உள்ள நாயகன் அவருக்கு ஏற்ற(!!) பெண்ணை கண்டு வேற்றுமைகளை கடந்து இணைந்தார் என்பதை படுஜாலியாகவும் சுவாரஸியமாகவும் சொல்லி இருக்கும் படம் தான் Silver Linings Playbook.


          மனைவியுடன் இருந்த ஆணை தாக்கிவிட்டு Bi-Polar Disorder வியாதிக்காக மனநல மருத்துவமனையில் எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் பிராட்லி ஹூப்பர். அவர் முழுமையாக குணமாவதற்க்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வீட்டிற்க்கு அழைத்து வந்துவிடுகிறார் அவருடைய அம்மா. அவருடைய மனைவியை 500 அடிக்கு தூரத்திற்கு குறைவாக நெருங்க கூடாது என்ற Restraining உத்தரவுடன் வீட்டிற்க்கு வரும் பிராட்லி அவருடைய முழுநேர வேலையாக மனைவியை தேடுகிறார். சமீபத்தில் கணவனை இழந்த ஜெனிஃபர் லாரன்ஸை ஒரு விருந்தில் சந்திக்கிறார். கணவன் இழந்த சோகத்தை குறைப்பதற்க்காக டான்ஸ் பயிற்சியில் ஈடுப்படும் ஜெனிஃபருக்கு ஏகப்பட்ட ஆண்களுடன் பழக்கம் இருக்கிறது அதன் காரணமாக வேலையையும் இழக்கிறார். பிராட்லியின் அப்பாவாக வரும் ராபர்ட் டீ நீரோ ஒரு வெறித்தனமாக பெட் கட்ட கூடிய ஃபுட்பால் வெறியராக வருகிறார் அதுமட்டுமில்லாமல் அவருடைய மகன் ஒரு குறிப்பிட்ட சோஃபாவில் உட்கார்ந்து பார்த்தால் அவருடைய அணி வெல்லும் என காமெடியான நம்பிக்கைகள் வேறு உண்டு.

          தன்னுடன் நடன போட்டியில் பங்கு பெறுவதாக இருந்தால் பிராட்லியை அவருடைய மனைவியிடன் சந்திக்க வைப்பதாக சொல்லி  பயிற்சிக்கு வர வைக்கிறார். பயிற்சியில் எப்போதும் இருப்பதால் சரிவர அப்பாவுடன் சேர்ந்து பேட்ச் பார்க்க முடிவதில்லை. பயிற்சி காலத்தில் இருவருக்கு இடையிலும் ஒரு அழகான உறவு ஏற்படத் தொடங்குகிறது. ஒரு முக்கிய போட்டியின் போது மைதானதிற்கு வெளியே சண்டை போட்டதால் மேட்சிற்கு போகாமுடியவில்லை. அன்றுடீ நீரோ நிறைய பணத்தை தோற்கிறார். இழந்த பணத்தை மீட்பதற்க்காக மொத்த சொத்தையும் ஒரு போட்டியில் பந்தயம் கட்டுகிறார். அந்த போட்டியில் அவருடைய அணி வெல்வதோடு பிராட்லியும் ஜெனிஃபரும் கலந்து கொள்ளும் போட்டியில் பத்திற்க்கு ஐந்து மதிப்பெண்ணாவது வாங்கினால் டீ நீரோ இழந்த அத்தனையும் தருவதாக அவரிடம் பெட் கட்டும் நண்பர் வாக்கு கொடுக்கிறார். அந்த முக்கிய போட்டி என்ன ஆனது ? அந்த டான்ஸ் போட்டி என்ன ஆனது என்பதெல்லாம் உங்களுக்கே தெரியுமென்றாலும் படத்தில் பாத்துகோங்க.


        திரைக்கதை தான் எந்தவொரு படத்திற்க்கும் அடிநாதம் என்றாலும் அதை நடிக்கும் நடிகர்களின் நடிப்பே அதன் முழுமையான வடிவத்தை கொடுக்க முடியும். அதற்க்கு உதாரணமாக இந்த படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் கூட சோடை போகாமல் இந்த படத்தில் நடித்த எல்லோருமே பெர்ஃபாமென்ஸில் பின்னி எடுத்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர்  ‘The Fighter’ படத்தை இயக்கிய David O. Russell அந்த படத்துகாக Christian Bale ஆஸ்கர் விருது வாங்கியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் மெல்லிய உரசல்கள் அந்த உரசல்களின் ஊடே வெளிப்படும் அன்பு, அட்டகாசமான உரையாடல்கள் குறிப்பாக ஒன்லைனர்கள் என ஃபைட்டர் படத்தில் எதெல்லாம் ஈர்த்ததோ அதுஎல்லாமும் இந்த படத்திலும் இருக்கிறது ஆனால் அத்தனையும் வேறு மாதிரி இருக்கிறது.

        Bradley Cooper கதையின் நாயகன் (:P) பேட்டாக நடித்து இருக்கிறார். மனைவியை நினைத்து ஏங்குவது, எப்படியேனும் அவரிடம் பேசிவிட வேண்டும் என தவிப்பது, அதீதமாய் கோபப்படுவது என கதாப்பாத்திரத்திற்க்கு எவ்வளவு நியாயக் செய்ய வேண்டுமோ அவ்வளவு நியாயம் செய்து இருக்கிறார் ஆனாலும் ரெண்டு பேர் சுலபாக அவரை ஓவர் டேக் செய்துவிடுகின்றனர் ஒருவர் படத்தின் ஹீரோயின் Jennifer Lawrence மற்றொருவர் அவருடைய அப்பாவாக நடித்து இருக்கும் Robert De Niro. Hunger Games படத்தில் உம்மனாமூச்சி Katniss ஆக நடித்தவர் இதில் அதற்கு 'Perfectly Opposite'  கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். மனிதில் பட்ட எதையும் கொஞ்சமும் தயங்காமல் பேசுகிற, அடுத்தவர்களை அதிகாரம் செய்பவராக எல்லா ஆண்களுடனும் சுற்றி கொண்டிருப்பவராக ஓவர் ஆக்டிங் செய்வதற்க்கான சகல சந்தர்ப்பங்கள் இருந்தும் அப்படி ஏதும் நிகழாமல் நடித்திருக்கிறார்.ஏற்கனவே இந்த 14 விருதுகள் வாங்கிவிட்ட நிலையில் போட்டி கடுமையாக இருந்தாலும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


        உலகின் தலை சிறந்த நடிகர்களுள் ஒருவரான Robert De Niro பிராட்லி ஹூப்பரின் தந்தையாக நடித்து இருக்கிறார். தந்தூரி சிக்கனை தயிர் சாதத்துடம் வைத்து சாப்பிடுவது போல Righteous Kill, New Year's Eve மாதிரியான மொக்கையான படங்களில் தான் சமீபகாலமாக டீ நீரோவை பார்க்க முடிந்த்து. அதுமாதிரி இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் நடிப்பு திறமையை வெளிப்படும் விதமாய் நல்ல கதாப்பாத்திரத்திலும் நல்ல படத்திலும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. Philadelphia Eagles அணியின் (Rugby or American Football) அதிதீவிர ஆதரவாளராக எப்பவும் அதை பற்றியே பேசிக்கோண்டிருக்கும் ஸ்டேடியத்திற்க்குள் நுழைய தடை விதிக்கப்படும் அளவிற்க்கு வெறித்தனமாக தனது அணிக்காக சண்டை போடக்கூடிய கதாப்பாத்திரம் வயசானலும் சிங்கம் தான் மாதிரி அசால்ட்டாக நடித்திருக்கிறார். டீ நீரோ வுக்கும் சிறந்த துணை நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் கடும் போட்டியின் காரணமாக கிடைப்பது கடினம் தான் என்றாலும் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம்.

      சிறந்த திரைப்படம் உட்பட எட்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பரிந்துரையிலையே சில சாதனைகளையும் செய்தும் இருக்கிறது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என நடிப்புக்காக வழங்கப்படும் நான்கு விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது கடந்த முப்பது வருடங்களில் இந்த சாதனையை செய்யும் முதல் திரைப்படம் இது தான் அதுமட்டுமில்லாமல் ஆஸ்கர் வரலாற்றிலேயே எந்த படமும் இந்த இந்த நான்கு விருதுகளையும் வென்றதில்லை ஆகவே இந்த படம்  இந்த நான்கு விருதுகளையும் வாங்கும் பட்சத்தில் அது ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை (Adapted or Original) இந்த ஐந்து விருதுகளையும் சேர்த்து Big Five என்று சொல்லுவார்கள். இந்த ஐந்து விருதுகளையும் ஒரே படம் வெல்லும் அரிய நிகழ்வு மூன்று முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த படமும் இந்த ஐந்து விருதுகளுக்காகவும் நாமிநேட் செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பாக 2004-ல் Million DOllar Baby தான் இந்த 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது ஆனால் மூன்றை தான் வெல்ல முடிந்தது.

             சிறந்த திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வெல்வதற்க்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பரிந்துரை பட்டியலில் கறுப்பு குதிரையாக வந்தது போல் விருது பட்டியலிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வந்து ஆச்சர்யபடுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு இல்லை :).
[ Read More ]

ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 01 - Argo

         ஆயிரம் குறைகள் சொன்னாலும் அதன் உள்ளரசியல் குறித்து விமர்சித்தாலும் வருடா வருடம் ரொம்பவே எதிர்ப்பார்க்க வைக்கும் விஷயமாகவே இருக்கிறது ஆஸ்கர் விருதுகள். எல்லா வருடங்களையும் போலவே எதிர்ப்பார்த்த படங்கள் பரிந்துரைக்கப்படாமலும் அதுவரை பெயர் கூட கேள்விப்படாத படங்கள் பரிந்துரைக்கப்படுவதும் இந்த வருடமும் நடந்தே இருக்கிறது. நான் ஆஸ்கர் பற்றி எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஆஸ்கர் விருது கொடுக்கத்தான் போகிறார்கள் இருந்தாலும் ஒரு ஆர்வ மேலிட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட படங்களை பற்றி எழுதப்போகிறேன் படிச்சிட்டு படத்தை பாருங்க ரொம்ப கஷ்ட்ட்ட்ட்டமா இருந்தா படத்தை மட்டுமாவது பாத்துடுங்க :) .



         "வரலாறு என்பது உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படும் புனைவு" எம்.ஜி.சுரேஷின் நாவல் ஒன்றில் படித்த வரிகள். இந்த விதியை மிக லாவகமாகவும் அதிகமாகவும் உபயோகப்படுத்தும் மற்றொரு இடம் என்றால் அது நிச்சயம் ஹாலிவூட் தான். ஒரு சம்பவத்தையோ கதையையோ படமாக்க முடிவு செய்யும் பட்சத்தில் அதை திரைக்கதையாக மாற்றி எழுதும் வேளையில் நிறைய மாற்றங்கள் செய்வார்கள். திரைக்கதையை ஹாலிவூட்டிற்க்கே உண்டான வடிவத்திற்க்குள் கொண்டு வரவும் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்க்காகவும் சில காட்சிகள் வெட்டப்படும் சில காட்சிகள் மாற்றப்படும் சில காட்சிகள் சேர்க்கப்படும். இதை தவிர்த்து மிக முக்கியமான விஷயம் அமெரிக்க ஆதரவு கருத்துக்களையும் நாட்டு பற்று சமாச்சாரங்களையும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தூவுவார்கள். மனிதர்களை வில்லனாக காட்டிய படங்களை கூட பார்த்துவிடலாம் ஆனால் அமெரிக்காவை வில்லனாக காட்டிய படங்கள் தேடினாலும் கிடைக்காது. 1979-ல் ஈரானில் அமெரிக்க தூதரகம் சிறைப்பிடிக்கப்பட அதில் இருந்து தப்பிக்கும் ஆறு அமெரிக்கர்களை கனடாவின் உதவியுடன் அமெரிக்க உளவுதுறையான சி.ஐ.ஏ காப்பாற்றிய சம்பவத்தை மேலே சொன்ன விஷயங்களெல்லாம் கலந்து வெளிவந்திருக்கும் படம் தான்  'Argo'.

           படத்தின் கதைகளத்திற்க்கு தேவையான வரலாற்று பின்னணியை வாய்ஸ் ஓவரில் சொல்லியப்படி படம் தொடங்குகிறது. ஈரானின் கடைசி மன்னரான  Mohammad Rezā Shāh Pahlavī ஈரானிய புரட்சியின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்படுகிறார். உயிரை காப்பாற்றி கொள்ளும் பொருட்டு அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறார். அதுவரை வெளிநாட்டில் இருந்து புரட்சியை வழிநடத்திய Ayatollah Khomeini ஈரான் திரும்பி நாட்டின் முதன்மை தலைவராக பதவி ஏற்று கொள்கிறார். ஈரானிய மக்கள் தப்பி ஓடிய மன்னரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு எதிராய் போராடுகின்றனர். டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போரார்ட்டகாரர்கள் அங்கு இருக்கும் 50-க்கும் மேற்ப்பட்ட அமெரிக்கர்களை சிறைப்பிடிக்கின்றனர். இந்த சம்பவத்தின் போது அமெரிக்க தூதரக ஊழியர்கள் ஆறு பேர் தப்பித்து கனட நாட்டு தூதரின் வீட்டில் தஞ்சமைடைகின்றனர்.

         கனட தேச தூதரின் வீட்டில் இருக்கும் அந்த ஆறு அமெரிக்கர்களையும் எப்படி கூட்டி வருவது என சி.ஐ.ஏ அதிகாரி டோனி மெண்டெஸ் மற்றும் அவருடை மேலதிகாரி Jack O'Donnell யோசித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கனட நாட்டு திரைப்படம் எடுப்பதாக சொல்லி லொக்கேஷன் பார்ப்பதற்க்காக ஈரான் போய் அவர்களையும் தங்களுடன் வந்ததாக சொல்லி அழைத்து வந்துவிடலாம் என்று யோசனை சொல்கிறார் டோனி. டோனியின் திட்டத்தை செயல்படுத்த தயாரிப்பாளர் ஒருவரை பிடித்து போலி திரைப்பட தயாரிப்பு நிறுவனம், அவர்களுக்கு போலி பாஸ்போர்ட்,  போஸ்டர் டிசைன், பிரஸ்மீட் என ஒரு திரைப்படத்துக்கான எல்லா வேலையையும் செய்கின்றனர். அந்த போலி படத்துக்கு வைக்கப்படும் பெயர் தான் 'Argo'.

            ஆர்கோவில் துணை தயாரிப்பாளர் என்று போய் சொல்லி டெஹரான் வருகிறார். அங்கு அந்த ஆறு அமெரிக்கர்களையும் சந்தித்து அவர்களுடைய நம்பிக்கையை பெற்று தன்னுடன் வருவதற்க்கு சம்மதிக்க வைக்கிறார். அதன் பின்னால் வரும் தடைகளை எல்லாம் தாண்டி எப்படி அவர்களை ஈரானை விட்டு வெளியே கொண்டு வருகிறார் என்பதையெல்லாம் படத்தில் பாத்துக்கோங்க.
Argo Fuck Yourself :) :)

         அனல் பறக்கும் சண்டைகளோ, அட்டகாசமான ஸ்பெஷல் எஃபெக்ட்டோ இல்லாமலே மொத்த படமும் பரபரவென இருக்கிறது. காமெடி, பரபரப்பு எல்லாம் சமவிகிதத்தில கலந்த படு நேர்த்தியான திரைக்கதை மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. டோனி மெண்டெஸ் ஆக நடித்ததுடன் படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார் Ben Affleck. Breaking Bad டி.வி சீரிஸ் புகழ் Bryan Cranston டோனியில் மேலதிகாரி Jack O'Donnell ஆக நடித்து இருக்கிறார். Ben Affleck தான் முதலில் ஒரு நடிகர் அப்புறம் தான் இயக்குநர் என்றாலும் செம மொக்கையான நடிகர் ஆனால் அவர் இயக்கிய படங்கள் எல்லாம் அதற்கு நேர்மாறானவை. அவர் முதன்முதலாக திரைக்கதை எழுதிய Good Will Hunting எனக்கு ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று அதற்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வாங்கியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பென் தான் இயக்கிய முதல் படமான Gone Baby Gone படத்திலையே விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்கினார் அதை தொடர்ந்து வந்த The Town படத்திலும் நல்ல விமர்சனங்கள் பெற்று நம்பிக்கை தரும் இயக்குநராக கருதப்பட தொடங்கினார். Argo இவருடைய இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது  திரைப்படம். படம் வெளிவந்த உடனே பரவலான கவனத்தை பெற்றதுடன் பென் அஃப்ளெக்கின் சிறந்த படமாகவும் இந்த வருடத்தின் சிறந்த படமாகவும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. 

    முதல் பத்தியில் சொன்னது போல் இந்த படத்திலும் அமெரிக்க ஆதரவு விஷயங்கள் நிறையவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் இந்த ஆப்ரேஷனில் கனடாவுடையே பங்கு ரொம்பவே அதிகம் அமெரிக்கா சும்மா ஆள் அனுப்பி கூட்டி வரும்  வேலையை மட்டுமே செய்தது. ஆனால் படத்தில் சி.ஐ.ஏ தான் எல்லா வேலையையும் செய்து விட்டு கனடாவுக்கு விட்டு கொடுத்தது போல் காட்டி இருப்பார்கள். Pearl Harbour மாதிரி நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தை மாற்றி எடுத்திருந்தால் கடுப்பாய் இருந்திருக்கும் ஆனால் இந்த கனடா மேட்டரெல்லாம் படம் பார்த்துவிட்டு விக்கிபீடியா மேயும் போது கிடைக்கும் தகவல்கள் என்பதால் படம் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இருக்காது.

     சிறந்த திரைப்படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருந்தாலும் Ben Affleck-க்கு சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காதது இந்த வருட ஆஸ்கரின் மிகப்பெரிய ஏமாற்றமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்கான நுழைவு வாயிலாய் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படம் , சிறந்த இயக்குநர் உட்பட பல விருதுகளை பெற்ற போதே இது தான் இந்த வருடம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதை பெறப்போவதாக ஆருடம் சொன்னார்கள் ஆனால் கடைசியில் பிம்பிளாக்கி பிளாபி :) :).  பிரபல இயக்குநர் Queintin சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காததை விட  Ben Affleck-க்கு  கிடைக்காததே வருத்தமளிப்பதாகவும் பரிந்துரை மட்டுமல்ல சிறந்த இயக்குநருக்கான விருதை அவர் தான் வாங்க போவதாகவும் நினைத்திருந்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

Ben Affleck @ Golden Globes

    ஆஸ்கர் விருதுகளில் ஒரு வழக்கம் உண்டு அதாவது எந்த திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதை வாங்குகிறதோ அதுவே சிறந்த படத்திற்க்கான விருதையும் வாங்கும். கடந்த பத்து வருடங்களில்  ஒரு முறை தான் அது தவறி இருக்கிறது , 2005-ம் ஆண்டு சிறந்த படத்திற்க்கன விருதை  Crash வாங்க சிறந்த இயக்குநர் விருதை Brokeback Mountain படத்திற்க்காக Ang Lee வாங்கினார் அந்த வருடம் கூட Crash படத்தின் இயக்குநர் Paul Haggis சிறந்த இயக்குநர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.   சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை கிடைக்காவிட்டாலும் சிறந்த படத்திற்க்கான விருதை வாங்கும் என இணையத்தில் படத்தின் ஆதரவாளர்களும் சில விமர்சகர்களும் எழுதி தள்ளுகின்றனர் என்ன நடக்க போகிறது என்று பிப்ரவரி 24-ம் அன்று தெரிந்து விடும் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

  ஆர்கோவிற்க்கு ஆஸ்கர் கிடைக்கிறதோ இல்லையோ ரசிகனை முட்டாளாக்காத பரபரப்பான படங்கள் பிடிக்குமென்றால் Just Go for it :) :).


       
[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 2


                  சென்னை திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களுள் சிறந்த எட்டு படங்களை பட்டியலிட போன பதிவில் தொடங்கி இந்த பதிவில் முடிக்கிறேன். சென்ற பதிவில் நான்கு படங்களை அறிமுகப்படுத்தி விட்டதால் மிச்சமிருக்கும் நான்கு படங்களை சிறந்த நான்கு படங்களாகவும் கொள்ளலாம்.

சென்ற பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்..,

4. Departures:

             மரணத்தை சூழ்ந்திருக்கும் மர்மமே அதன் மீதான பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. அந்த பயமே மரணத்தை சார்ந்து இருப்பவர்கள் மீதான அசூசையும் வெறுப்பையும் இயல்பாகவே உருவாக்கி விடுகிறது. அப்படி மரணத்தை சார்ந்த ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் ஒரு இசை கலைஞன் மீதான வெறுப்பும் அசூசையும் அன்பாக மாறும் அற்புதம் தான் "Departures". செல்லோ (பெரிய வயலின்) கலைஞனான நாயகனின் இசை குழு கலைக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக இறந்தவர்களுக்கு மேக்கப் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேண்டா வெறுப்புடன் வேலைக்கு சேர்கிறான். இறந்த வீடுகளில் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் அந்த வேலையை வெறுத்த அவனும் மற்றவர்களும் அந்த வேலை மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியை உணர்வது தான் கதை.


       மொத்த படமுமே மரணத்தை சுற்றியே நடக்கிறது ஆனாலும் நம் கண்ணுக்கு க்ளிசெரின் ஊற்ற முயற்சிக்காமல் ஒரு உன்னதமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். தெளிவான தேவையற்ற காட்சிகளற்ற திரைக்கதை, அற்புதமான இசை, பலமான உரையாடல்கள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவு குறைகள் ஏதும் இல்லாத அற்புதமான படம். இந்த படம் 2008-ம் ஆண்டிற்க்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்க்கான ஆஸ்கர் விருதை பெற்றது.

3. Final Cut - Ladies and Gentlemen :

              முதலில் இது ஒரு திரைப்படம் அல்ல, 450-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் காட்சி துணுக்குகளின் தொகுப்பு. என்ன தான் எண்ணற்ற திரைப்படங்களின் கதம்ப மாலை என்றாலும் அவற்றின் துணையோடு ஒரு சின்ன கதையையும் சொல்லி இது வரை இருந்த கதை சொல்லும் பாணியை எல்லாம் அனாயசயமாக தாண்டி இருக்கிறார்கள். பஸ்டர் கீடன் தொடங்கி ராம் சரண் தேஜா வரை, Birth of the Nation தொடங்கி ஓம் ஷாந்தி ஓம் வரை, 2001 தொடங்கி அவதார், Pulp Fiction தொடங்கி Paprika வரை உலகின் அத்தனை கிளாசிக்கிலும் அத்தனை முக்கியமான படங்களையும் தொட்டு செல்கிறது.


              நமக்கு ரொம்ப பிடித்த படத்தின் ஒரு காட்சி எதோ ஒரு படத்தில் வந்தாலே உற்சாகமாய் இருக்குமல்லவா இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த அனைத்து படங்களில் இருந்தும் ஒரு துணுக்கு வந்து விடுவதால் மனதிற்க்குள் ஒரு மாதிரி இதமான உணர்வு ஏற்படுகிறது. படம் மட்டுமல்ல படம் முடிந்த பின்னர் அனைத்து படங்களின் பெயரையும் காட்சிகளின் வரிசையிலையே போடுகின்றனர் பெரும்பாலனவர்கள் அனைத்தையும் நின்று பார்த்துவிட்டு சென்றனர். திரைப்பட காதலர்கள் அனைவரும் நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.

2. Holy Motors:

                பார்ப்பவர்களின் கண்களுக்கும் மூளைக்கும் இடையில் கண்ணாமூச்சு விளையாடும் வித்தியாசமான சர்ரியலிஸ திரைப்படம். ஒரு நடிகனுக்கு ஒரு நாளில் ஒன்பது இடங்களில் நடிப்பதற்க்கான பட்டியல் ஒன்று தரப்படுகிறது. நடிப்பென்றால் நாடகத்திலோ திரைப்படத்திலோ அல்ல நிஜ வாழ்க்கையில் அதாவது கூடு விட்டு கூடு பாய்வது போல் ஒரு வாழ்க்கையில் இருந்து இன்னொரு வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். எது நிஜ வாழ்க்கை ?? எது நடிப்பு என்றெல்லாம் பிரிக்க முடியாத படி அங்காங்கே சில வட்டங்களின் முனைகளை இணைத்து சென்று இருக்கிறார்கள்.


                அரசியல்வாதி, பிச்சைகாரன், சினிமாவில் மோஷன் கேப்சர் ஆர்டிஸ்ட், பைத்தியம், கொலை செய்பவன், கொலை செய்யப்படுபவன், இசை கலைஞர், சாக காத்திருக்கும் கிழவர், குடும்ப தலைவர் என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களை எந்த பிழையும் செய்து இருக்கிறார் நாயகன் Denis Lavant. எந்த தர்க்கத்துக்குள்ளும் அடங்காத கதையாக இருந்தாலும் படம் ஓடும் 100 நிமிடங்களும் தலையை திருப்பாமல் பார்க்க வைக்கின்றனர். படத்தில் ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம் இசை அதிலும் குறிப்பாக அந்த தீம் மியூசிக். நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டு பாருங்க இரத்ததில் ஏதோ ஒரு திரவம் கலந்து இருக்கையில் இருந்து சில மில்லி மீட்டர்கள் மேலே செல்வதை உணர்வீர்கள்.


1. Amour:

              இந்த வருட திரைப்பட விழாவில் நான் பார்த்த முதல் திரைப்படம் சந்தேகமே இல்லாமல் நான் பார்த்த சிறந்த படமும் இதுவே. வாழ்க்கையில் சுகமான முடிவு என்று ஒன்று கிடையவே கிடையாது நமது எல்லா பயணங்களும் ஒரு தோல்வியை நோக்கி ஒரு சூன்யத்தை நோக்கி அல்லது ஒரு மரணத்தை நோக்கியே இருக்கிறது.  வயதான தம்பதிகளான ஜார்ஜ் மற்று ஆன்னி பெரிய வீட்டில் தனியா வசிக்கின்றனர். வயதானாலும் அன்யோன்யமும் காதலும் குறையாமல் இருக்கிறது அதிலும் ஜார்ஜ் எப்போதும் ஆன்னியை விட்டு எப்போதும் விட்டு விலகாமலே இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆன்னி தீவிரமாக உடல்நிலை மோசமாகி கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரிவின் துயரமும் காதலின் கடைசி அத்தியாயமும் தான் படத்தின் களம்.


               படத்தின் தொடக்க காட்சியிலேயே படத்தின் முடிவை யூகித்து விடலாம் ஆனால் படத்தின் பலம் முடிவு ஏற்படுத்தும் அதிர்ச்சி அல்ல அதை நோக்கிய பயணம் ஏற்படுத்து வலியே. படத்தை இயக்கி இருப்பது உலகின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான Micheal Hanake கதாப்பாத்திரங்கள் உணரும் வலியை பார்வையாளர்களுக்கு கணமான காட்சிகளின் மூலம் கட்த்தி இருக்கிறார். படம் பார்த்த பின் ஏற்படும் பாதிப்பு நீங்க நிச்சயம் கொஞ்ச காலமாவது பிடிக்கும். இந்த படம் குறித்து கொஞ்சம் விரிவாக தனி பதிவா எழுதிட விருப்பம். விருப்பத்தை சோம்பேரித்தனம் வென்று விடாமல் இருப்பின் கண்டிப்பாக எழுதுவேன்..


           இந்த படங்கள் தவிர உங்கள் அனைவருக்கும் நன்கு பரிட்சியமான இரண்டு மிக மிக முக்கியமான படங்களை பார்த்தேன் ஒன்று சத்யஜித் ரேவின் "பதேர் பாஞ்சலி"   மற்றொன்று தியாகராஜன் குமாரராஜாவின் "ஆரண்ய காண்டம்". இரண்டு படங்களை பற்றியும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை இருந்தாலும் ஆரண்ய காண்டம் திரையிடப்பட்ட சூழல் குறித்து சொல்ல விரும்புகிறேன்.

           முதலில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ராணி சீதை ஹாலில் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 300 - 400 இருக்கைகள் கொண்ட ராணி சீதை ஹால் வாசலில் கிட்ட தட்ட 1000 பேர் நின்றனர் எப்படியோ அடித்து பிடித்து உட்கார்ந்தால் படச்சுருள் வராததால் திரையிடல் இல்லை என அறிவித்தனர். பின்னர் 8 மணிக்கு சின்ன அரங்கான Woodlands Symphony-ல் திரையிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டு பின்னர் கூட்டம் காரணமாக 1400 இருக்கைகள் கொண்ட Woodlands அரங்கில் திரையிடப்பட்டது. அரங்கு நிறைய கூட்டத்தோடு ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு தீம் இசைக்கும் கைதட்டலால் விருது கொடுத்து கொண்டிருந்தனர்.  தமிழ் சினிமா பற்றி தெரியாத யாரிடமாவது இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த படம் என்று சூடம் அணைத்து சொன்னால் கூட நம்பி இருக்க மாட்டார்கள். சில அலைச்சல்கள் சில ஏமாற்றங்கள் இருந்தாலும் மொத்தமாக ஒரு நல்ல அனுபவத்துடன் திரைப்பட விழா இனிதாய் நிறைவடைந்தது.

     
[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 1

             13-ம் தேதி தொடங்கி எட்டு நாட்களாக நடைப்பெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. எல்லா நாட்களும் செல்ல முடியவில்லை என்றாலும் அப்படி இப்படி என 21 படங்கள் பார்த்தாகி விட்டது.  எதிர்ப்பார்த்திருந்த படங்களுள் பார்த்த வரையில் எல்லாம் திருப்தியாக இருந்தது எதிர்ப்பார்க்காத சில படங்கள் ஆச்சர்யப்படுத்தியது மற்ற படங்கள் மொக்கை போடும் பணியை சிரத்தையுடன் செய்து முடித்தன.

            எதிர்ப்பார்த்திருந்த படங்களுள் பாதுகாப்பு காரணங்களுக்காக  "Rust and Bone", ஆரண்ய காண்டத்திற்க்காக "Once Upon a Time in Anatolia", காரணம் எதுவும் சொல்லாமல் "Antiviral", "Not One Less" ஆகிய படங்கள் திரையிடப்படவில்லை. பார்த்த படங்களுள் சிறந்த படங்களாக நான் கருதும் எட்டு படங்களை பற்றிய சிறு குறிப்பு உங்களுக்காக :)


8. In Another Country:

           ஹோட்டலில் அம்மாவுடன் தங்கி இருக்கும் பெண் கொரியாவுக்கு வரும் மூன்று ஃப்ரஞ்ச் பெண்களை பற்றிய கதை ஒன்றை எழுத தொடங்குகிறார்.  மூன்று கதையிலும் அதே நடிகர்கள் அந்த பெண்ணை தவிர அனைவருக்கும் அதே கதாப்பாத்திரங்கள் சொல்லப்போனால் அந்த பெண்ணுக்கு கூட ஒரே பெயர் தான் ஆனால்  ஃப்ரஞ்ச் இயக்குநர், கணவனுக்கு தெரியாமல் காதலனை பார்க்க வரும் பெண், விவாகரத்தான மனைவி என அவருக்கு மட்டும் வெவ்வேறு கதாப்பாத்திரகள்.



      ஒரே மாதிரியான உரையாடல் அல்லது காட்சிகள் அதே கதாப்பாத்திரங்களுக்குக்கோ அல்லது வேறு கதாப்பாத்திரங்களுக்கோ இடையில் வருவது ரசிக்கும் படி இருக்கிறது. சில சமயங்களில் முதல் கதைகள் விட்டு சென்ற எதோ ஒரு மிச்சத்தை அடுத்த கதைகள் தொடர்வது அல்லது அதற்கு முன்னதாக வந்திருப்பது போல் சில பொருட்களை காட்டுவது சில சமயங்களில் இரண்டும் என சுவாரசியத்திற்க்கு குறைவில்லை. அந்த ஃப்ரஞ்ச் பெண்ணாக நடித்திருப்பவர் பிரபல ஃப்ரஞ்ச் நடிகை Isabelle Huppert பியானோ டீச்சர் ஞாபகம் இருக்குல்ல. படத்தை மொத்தமாக பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமலில்லை என்றாலும் படம் முடிந்தும் படம் பற்றியே நம்மை யோசிக்க வைப்பது தான் அதன் வெற்றி.

7. Pieta:
 
         இருக்கைகள் யாவும் நிறைந்து, நடைப்பாதைகள் யாவும் நிறைந்து,  கதவை கூட சாத்த விடாமல் நின்று கொண்டிருக்கும் கூட்டதிற்க்காக வணிக அம்சங்கள் ஏதுமற்ற கலைப்படம் ஒன்று சென்னையில் திரையிடப்பட்டதென்றால் நம்புவீர்களா ? நம்பாவிட்டாலும் Pieta விற்கு அது தான் நடந்தது கிம்-கி-டுக்கிற்க்கு நம்ம ஊரில் இருக்கும் செல்வாக்கு அப்படி. கொடூரமான முறையில் கடன் வசூலிக்கும் ஒருவனின் வாழ்க்கையில் அம்மா என்று சொல்லி கொண்டு வரும் பெண்ணினால் வரும் மாற்றங்கள் தான் கதை.

       கடன் தாராதவர்களை கை அல்லது கால்களை உடைத்து முடமாக்கும் கொடூரமான காட்சிகளுடன் தொடங்குகிறது படம். நாயகனுடைய அம்மா வந்த பிறகு கொஞ்சம் நல்லவராக மாறி பாசத்துக்கு அடிமையாகும் காட்சிகள் எல்லாம் கிம்-கி-டுக்கை எந்த பிக்காலி பயலோ தமிழ் படம் நிறைய பாக்க வைச்சுட்டானோன்னு நினைக்க வைக்குது அவ்வளவு க்ளேஷேவான காட்சிகள். வந்த பெண் அம்மா தானான்னு கண்டுபிடிக்க வைக்கிற டெஸ்ட்லாம் கொடூரம். இதை கிம்மின் சிறந்த படமென்றெல்லாம் சொல்ல முடியாது என்றாலும் சில காட்சிகளில் மனசை தொடுகிறார் குறிப்பாய் அந்த கடைசி சில நிமிடங்கள். உங்களுக்கு அவரை பிடிக்குமெனில் கண்டிப்பாக இதுவும் பிடிக்கும் இல்லையெனில் மதில் மேல் பூனை தான்.

6. Everybody in Our Family:

                 ஒரு பட்டன் ஸைஸ் கதை வைத்துக்கொண்டு சும்மா பின்னி எடுத்திருக்கும் ரோமனிய திரைப்படம் தான் Everybody in our family. விவாகரத்தான தன் மனைவியிடம் வாழும் தன் ஐந்து வயது மகளை கடற்கரைக்கு கூட்டி செல்வதற்க்காக காலையில் சாதரணமாக  கிளம்பும் மாரியோஸ் எவ்வளவு மாற்றமடைகிறார் என்பது தான் கதை. அப்பாவிடம் கார் வாங்க செல்லும் போது வாக்குவாதம் அதிகமாகி சண்டை வருகிறது. முன்னாள் மனைவியின் வீட்டிற்க்கு அவர் இல்லாத போது செல்கிறார் அங்கே இருக்கும் முன்னாள் மனைவியின் இன்னாள் காதலர் குழந்தையை அழைத்து செல்ல அனுமதி மறுக்கிறார் அவரிடமும் சண்டை போடுகிறார். அப்போது அங்கே வரும் அவர் மனைவி போலிஸுக்கு ஃபோன் செய்ய பெரிதாகிறது சண்டை.  அவ்வளவு தான் படமே ஆனால் அட்டகாசமாய் இருக்கிறது.


                  நாகரிகத்தின் போர்வையில் நம்முள் மறைந்திருக்கும் மிருகம் வெளிவருதற்க்கு அதிக நேரம் பிடிக்காது என்பதை உணர்த்தும் படம். இதை படிச்சதும் எதோ ஹாரர் படம்ன்னு நினைச்சுடாதிங்க கண்ணுல தண்ணி வரும் அளவுக்கு சிரிக்க வைக்கிற காமெடி படம். ஆனா என்ன தான் சிரிச்சாலும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இதுக்கு போய் சிரிச்சோமான்னு உங்களையே ஃபீல் பண்ண வைக்கும் ரகம் அதான் இந்த Dark Comedy-ன்னு சொல்லுவாங்களே அதான். பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளயே எடுத்து இருந்தாலும் ஒரு நாடகதன்மை இல்லாம படு இயல்பா படம் இருக்கு அதற்கு முக்கிய காரணம் கேமரா நாயகன் கூடவே ட்ராவல் ஆகுது. அடுத்த காரணம் நடிப்பு முக்கியமாக ஹீரோ மற்றும் அந்த குழந்தை ரொம்ப க்ளேஷேவா சொல்லனும்ன்னா அவங்க முன்னால கேமரா இருக்கிறா மாதியே இல்ல அதுலையும் அந்த குழந்தை சான்ஸே இல்ல. நண்பர்கள் யாரும் தவறவே விடக்கூடாத படம்.
                


5.Kuma:

       படத்தின் தொடக்கத்தில் துருக்கிய கிராமம் ஒன்றில் ஆயிஷாவுக்கும் ஹசனுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்க்கு செல்வதற்க்காக வியன்னா நோக்கி புறப்படுகிறாள். வியன்னா வந்ததும் நடந்தது ஒரு பொம்மை திருமணம் என்பது நமக்கு தெரிகிறது உண்மையில் அயிஷாவுக்கு ஹசனுடன் நடந்த திருமணம் ஊருக்காக செய்யப்பட்டது ஆனால் அவள் வாழப்போவது ஹசனின் தந்தை முஸ்தஃபாவுக்கும் இரண்டாம் மனைவியாக இப்படி ஒரு அதிர்ச்சியான தொடக்கத்துடன் துவங்குகிறது படம்.


         ஒரு கட்டத்தில் முஸ்தஃபா இரந்து விட குடும்ப பாரம் ஆயிஷா மேல் விழுகிறது. குடும்பத்தை தாங்கும் காதலுக்கு ஏங்கும் இளம்தாய் ஆயிஷாவின் கதை தான் படம். Kuma என்றால் இரண்டாம் மனைவி என்று அர்த்தமாம். மெதுவாக நகரும் குழப்பமான திரைக்கதையில் சின்ன சின்ன ட்விஸ்ட்கள், சில சுவாரசியங்கள், கொஞ்சம் அழகியல் என நம்மை சோர்வடைய வைக்காமல் கடைசி வரை அழைத்து செல்கின்றனர். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அந்த ஆயிஷாவா நடிச்சு இருக்கிற பொண்ணு செம அழகு :). இந்த படத்தை குடும்ப அமைப்புனால் பெண்களுக்கு எற்படும் பிரச்சனைகளை பற்றியதாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் கதையாகவும் கொள்ளலாம் எப்படி எடுத்து கொண்டாலும் பரவாயில்லை தவறாமல் படத்தை பாருங்கள்.

                                                                                                                       (தொடரும்..,)




[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு முன்னோட்டம்

                    வருகின்ற 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை எட்டு நாட்கள் சென்னையில் 10-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். 57 நாடுகளை சேர்ந்த 175 படங்கள் திரையிடப்பட இருக்கிறது என்றாலும் எவ்வளவு முயன்றாலும் இதில் பாதி படத்தை கூட பார்க்கமுடியாது அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 படம் வீதமாக 40 படங்கள் பார்க்கலாம் அதுவும் எட்டு நாட்களும் விடுப்பு எடுத்தால் மட்டுமே சாத்தியம்.

Ciff 2012 Poster

                சென்ற வருடம் தான் முதல்முறையாக பெரும் எதிர்ப்பார்ப்புடன் முதல்முறையாக திரைப்பட விழாவுக்கு சென்றேன் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். நான் பார்த்த படங்களுள் பாதி படங்கள் வெகு சுமாரான அல்லது மொக்கை படங்கள். வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான் பெரும்பாலான படங்களை பார்த்தேன் அங்கே பகலில் படம் பார்க்கும் போது நிறைய இடைஞ்சல்கள் இருந்தது. சராசரியாக 5 நிமிடத்திற்க்கு ஒரு முறை கதவு திறக்கப்பட்டு கொண்டே இருந்தது யாராவது வந்து கொண்டோ போய் கொண்டோ இருந்தார்கள் மாலை மற்றும் இரவு காட்சிகளில் இந்த பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை. சத்யம்,ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் அங்கு சீட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும். இவ்வளவு இருந்தாலும் ரொம்ப பிடித்த திரைப்படமொன்றை பெரிய திரையில் காணும் போது கிடைக்கிற அனுபவத்திற்க்காவே கலந்து கொள்ள வேண்டும். சென்ற வருடம் A Separation திரைப்படத்தை விழாவில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகள் இன்னமும் நினைவிருக்கிறது அப்படி ஒரு அனுபவத்தை எதிர்ப்பார்த்தே இவ்வருடமும் செல்கிறேன். சென்ற வருடத்தை விட இந்த வருட திரைப்பட பட்டியலில் பெயர் தெரிந்த பார்க்க விரும்பிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது அந்த படங்களுள் முக்கியமான படங்கள் சிலவற்றை பற்றிய சின்ன அறிமுகம்..,

Amour :

          தற்கால இயக்குநர்களுள் மிக முக்கியமானவரான Micheal Hanke-ன் சமீபத்திய திரைப்படம். உலகின் மிக பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சிறந்த திரைப்படத்திற்க்கான தங்கப்பனை விருதையும் பெற்று இருக்கிறது. இதுவே இந்த படத்தை பெரும்பாலன ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக மாற்றி இருக்கிறது.  Micheal Hanke-ன் முந்தைய படமான The White Ribbon படமும் தங்கப்பனை விருது பெற்றது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

Pieta :

           தமிழ் இணைய உலகில் மிக பிரபலான இயக்குநரான கிந்கி-டுக்கின் சமீபத்திய திரைப்படம். உலகம் முழுதும் நிறைய ரசிகர்கள் இருந்தாலும் பெரிய அளவில் அங்கிகாரம் எதுவும் கிடைக்காததால் பெரும்பாலும் சர்ச்சைகுரிய இயக்குநராய் மட்டுமே அடையாளப் படுத்தபட்டார். இப்போது முக்கியமான திரைப்பட விழாவான வெனிஸில் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதின் மூலம் மிக பெரிய அங்கிகாரத்தை பெற்றுள்ளார். இந்த விழாவில் நிறைய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதர்க்கான காரணம் இந்த விருதல்ல அவரின் பெயர் மட்டுமே.

CIFF 2012 Films


Not One Less :
               
           சீனாவின் அழகியலையும் கலாச்சார பின்னணியையும் கலந்து அற்புதமான படங்களை எடுக்கும் Zhang Yimou  1999-ல் எடுத்த படம். சீன அரசு 90-களில் கல்வியை கட்டாயமாகி மிக தீவிரமாக அமல் படுத்தியது ஆனாலும் கிராமப்புற பள்ளிகள் ஒற்றை ஆசிரியரை வைத்து கொண்டு மாண்வர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு மாதக்காலம் பயிற்சி ஆசியராய் வரும் 13 வயது பெண்ணின் கதை தான் படம். பார்ப்பவர்களின் ஆன்மாவை தொடும் அற்புதமான படம். இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

Holy Motors :

           ஒரு பத்து நாளைக்கு முன்பு வரை இப்படி ஒரு படம் வந்து இருப்பதே தெரியாது. பிரபலமான ஃப்ரஞ்ச் சினிமா பத்திரிக்கையான Cahiers Du Cinema இந்த படத்தை இந்த வருடத்தின் சிறந்த படமாக தேர்ந்தெடுத்ததும் ஒரு மாதிரி ஆர்வம் தொற்றிக்கொண்டது. த்ருபோ, கோதார் போன்ற ஃப்ரஞ்ச் புதிய அலையின் ஆளுமைகள் எல்லாம் இந்த பத்திரிக்கையில் தான் ஆரம்ப காலத்தில் விமர்சனம் எழுதி கொண்டிருந்தார்கள். படத்தின் டிரைலரை  படித்ததும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன். திரைப்பட விழாவில் தவறாமல் பாக்கனும் மிஸ் பண்ணுனா டவுன்லோடு தான் :).

Pather Panchali :

             இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் விதமாக இந்த விழாவிலும் சில முக்கியமான இந்திய படங்கள் திரையிடப்பட இருக்கிறது அதிலும் முக்கியமாக இந்தியாவின் ஆக சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படும் பதேர் பாஞ்சலி திரையிட இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏற்கனவே பார்த்து இருந்தாலும் திரையரங்கில் பார்க்க விருப்பமாக இருக்கிறது அதுவும் விடுமுறையன்று திரையிட இருப்பதால் கண்டிப்பாக பார்த்து விடுவேன் என்றே நினைக்கிறேன். மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான ஜி.அரவிந்தனின் “வசுந்தரா”-வும் திரையிட இருக்கிறார்கள்.
       
Like Someone in Love:

             பிரபலமான ஈரானிய இயக்குநர்  Abbas Kiarostami இயக்கி இருக்கும் ஜப்பானிய மொழி திரைப்படம். பெரிய அளவில் நல்ல விமர்சனங்களையோ பெரிய விருதுகளையோ வாங்கவில்லை என்றாலும்  Abbas Kiarostami-ன் பெயருக்காகவே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

              இவற்றுடன்  Melancholia ( இயக்கம் : Lars von Trier), Cosmopolis ( இயக்கம் :David Cronenberg ), Zorba the Greek, Departures  ( 2009 சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது), Antiviral, Beasts of the Southern Wild , Once Upon a Time in Anatolia  ஆகிய படங்களையும் தவறவிடாமல் பார்த்து விட விருப்பம். நண்பர்களுக்கும் தங்கள் அட்டவணையில் இந்த படங்களை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன்.  இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் நான்கு நாட்களுக்கான அட்டவணையில் இடம் பெறவில்லை ஆகையால் முக்கியமான படங்கள் யாவும் கடைசி நான்கு நாட்களில் தான் திரையிடுவார்கள்  என நினைக்கிறேன் அதனால் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே விடுப்பு எடுக்க முடிந்தவர்கள்  அடுத்த வாரத்தில் விடுப்பு எடுத்தால் நிறைய நல்ல படங்கள் பார்க்கலாம் :).

பின் இணைப்புகள்:

  •  விழாவில் திரையிட இருக்கும் மொத்த படங்களின் பட்டியலுக்கு இங்கே க்ளிக்கவும்.

  • முதல் நான்கு நாட்களுக்கான பட்டியலை இங்கே க்ளிக்கி பார்க்கலாம். 

  •  பெங்களூர் உலக திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் படங்களின் பட்டியலை காண நேர்ந்தது. சென்னை விழாவை விட ஏகப்பட்ட நல்ல படங்கள், பிரபலமான படங்கள் என்று அசத்துகின்றனர். இங்கே க்ளிக்கி அந்த பட்டியலை பார்த்து கொஞ்சமாய் பொறாமைப்பட்டு கொள்ளுங்கள்.


[ Read More ]

5 Centimeters Per Second [ Japanese/2007 ] - நிரம்பி வழியும் காதல்..,

         யாரோ ஒருவருடன் பேசுவதற்க்காக மட்டுமே பள்ளிகூடத்திற்க்கோ கல்லூரிக்கோ போவதாக உணர்ந்து இருக்கிறீர்களா ? யாரோ கொடுத்த சாக்லேட்டின் ரேப்பர்களை பத்திரப்படுத்தி இருக்கிறீர்களா ?  ஷாப்பிங் மாலிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ யாரையேனும் எதிர்பார்க்கமல் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறீர்களா? தூரத்தில் நடக்கும் ஒரு பெண் அவள் போல் இருக்க ஆசையுடன் அருகில் போய் ஏமாந்து இருக்கிறீர்களா ? வாழ்க்கையில் ஒருமுறையேனும் காதலித்து இருக்கிறீர்களா ?
            இந்த கேள்விகளுக்கு ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் பதில் ஆம்  எனில இது உங்களுக்கான படம்...,


        இது எப்படிப்பட்ட படம் என்று மேலே இருக்கும் பத்தியை படிக்கும் போதே ஒருவாறாக கற்பனை செய்து இருப்பிர்கள் ஆனால் இது ஒரு அனிமேஷன் படமாக இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா.., Yes it is :) . 5 Centimeters Per Second என்ற படத்தின் தலைப்பு செர்ரி பூக்களின் இதழ்கள் உதிர்ந்து விழும் வேகமாகும். இந்த தலைப்பு மனித வாழ்க்கையின் மந்த தன்மையையும் ஒன்றாய் இருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலக தத்தம் வாழ்க்கைகாய் விலகி செல்வதின் குறியீடு அப்புடின்னு நா ஒண்ணும் கண்டுபிடிக்கல விக்கிபீடியா சொல்லுது :).  62 நிமிடங்கள் மட்டுமே ஓட கூடிய மிக சிறிய படமான இது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது..,

Episode I : Chasing Cherry Blossoms

     மத்திய தொண்ணூறுகளில் படத்தின் முதல் பகுதி நடக்கிறது. ஆரம்ப பள்ளியின் இறுதி நாளில் நெருங்கிய நண்பர்களான டகாகி மற்றும் அகாரி பள்ளி முடிந்து வருகின்றனர். அகாரியின் பெற்றோர் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் இனி பார்க்க முடியாது என்றாலும் அடுத்த வருடம் இதே காலத்தில் அவனுடன் இருக்க விரும்புவதாகவும் கூறி செல்கிறாள் அதன் பிறகு  இருவரும் கடிதம் மூலமே உரையாடி கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அவளை பார்ப்பதற்க்காக டகாகி ரயிலில் அகாரி ஊரை நோக்கி செல்கிறான். அன்று இரவு 7 மணிக்கு சந்திப்பதாக அகாரியை சந்திப்பதாக போட்ட ப்ளான் கடும் பனி பொழிவினால் ரொம்பவே சொதப்பி விடுகிறது. 8.30 மணிக்கு பாதி தூரம் மட்டுமே சென்று இருக்கிறான். இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை நீங்களே பாருங்கள்.

Episode II :Cosmonaut

          செல் ஃபோனும் இன்டர்நெட்டும் அறிமுகமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் படத்தின் இரண்டாம் பகுதி நடக்கிறது. காலப்போக்கில் அகாரி உடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்ட டகாகி புதிய பள்ளியில் யாருடனும் ஒட்டாமல் தனியாகவே இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் சுமேடா டகாகியை பார்த்த நாள் முதலே காதலிக்க தொடங்கிவிடுகிறார் ஆனாலும் தன் காதலை வெளிப்படுத்த தைரியமின்றி இருக்கிறாள். கொஞ்ச காலத்தில் இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு உருவாகிறது ஆனாலும் அதற்கு மேல் அவளால் நெருங்க முடியவில்லை. இருவரும் தனியாக இருக்கும் சமயத்தில் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து தோற்று போகிறாள்.



Episode III : 5 Centimeters Per Second

          சில வருடங்களுக்கு பிறகு., டகாகி கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக டோக்கியோவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். சுமேடா இன்னும் உன்னை காதலிக்கிறேன் என டகாகிக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார்.  திருமணத்திற்க்கும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் வேலை காரணமாக டோக்கியோவுக்கு பயணமாகிறார் அகாரி. ஒரு முறை ரெயில்வே கிராஸிங்கை தாண்டி செல்லும் போது எதிரில் வந்த பெண் அகாரியாக இருக்குமோ என திரும்பும் போது சரியாக அதே நொடியில் ஒரு ரெயில் வந்து பார்க்க விடாமல் செய்கிறது. அப்போது ரொம்ப ரொம்ப அழகான பாடல் வருகிறது. அப்பாடல் முடிந்ததும் அந்த பெண் அகாரியா ? இருவரும் இணைந்தார்களா ?  போன்ற விஷயங்களை எல்லாம் திரையில் காண்க..,

     இந்த கதையை படிக்கும் போது இது ரொம்பவும் சாதாரணமாக இருப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் திரையில் இந்த படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் ரொம்பவே அதிகம். காதலை பிரிந்ததால் ஏற்படும் தனிமையையும் , பழைய காதலை நினைக்கும் போது ஏற்படும் துக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த கலைவையான உணர்ச்சியையும் அழகான காட்சிகளின் மூலம் வெகுசுலபமாக பார்வையாளனுக்கு கடத்தி விடுகிறது. சிறுவயதில்  நெருக்கமாய் இருந்தவர்கள் செல்ஃபோனும் இணையமும் இல்லாமல் கால ஓட்டத்தில் காணாமல் போனதை எந்தவிதமான மிகையும் இல்லாமல் காட்டுகிறது. படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு முக்கிய பாத்திரங்கள் மூவரும் அவர்கள் மனதுக்குள் நினைப்பதே வசனங்களாக வருகிறது. பெரும்பாலான வசனங்கள் க்யூட்டான கவிதையாக இருக்கின்றன.


          படம் முழுவதுமே நட்பு, பிரிவு, தனிமை,  ஏக்கம், காதலை நோக்கி பயனித்தல், காதலுக்காக காத்திருத்தல் என காதலின் அத்தனை உணர்வுகளையும் கொண்டு காட்சிகளை நிரப்பி படம் முழுவதுமே படுரொமாண்டிக்காக இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததை போல் வருகிறது அந்த கிளைமேக்ஸ் பாடல் அதுவரை படம் ஏற்படுத்திய உணர்வுகளை இன்னொரு லெவலுக்கு இந்த பாடல் எடுத்து செல்கிறது அதிலும் அந்த பாடல் வரிகள் அற்புதம் (அந்த மொழி தெரியுமான்னு கேக்க கூடாது எல்லாம் சப்டைட்டில் தான் :) ). முதன்முறையாக என் கம்ப்யூட்டரில் ஒரு ஜப்பானிய பாடல் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருக்கிறது. அந்த அற்புதமான பாடல் உங்களுக்காக..,


படத்தின் இன்னுமொரு முக்கிய ப்ளஸ் இதில் வரும் அனிமேஷன் அதுவும் ரொம்பவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. ரொம்பவே டெம்ப்ளேட்டாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே நாம் மறக்கும் அளவிற்க்கு இருக்கிறது. நான் பார்த்த மிக சிறந்த 2D அனிமேஷன்களில் இந்த படத்தின் அனிமேஷனையும் எந்த யோசனையுமின்றி சேர்த்து கொள்வேன். இந்த படத்தை எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் Makoto Shinkai என்ற ஜப்பானிய இயக்குநர். ஜப்பானிய விமர்சகர்கள் இவரை அடுத்த மியாசாகி என்றுழக்கும் அளவிற்க்கு நம்பிக்கை தருபவராக இருக்கிறார்.

    எவ்வளவோ யோசித்தும் குறையென்று எதுவும் சொல்ல தோன்றவில்லை அவ்வளவு பிடித்துவிட்டது. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் ஒரு மணிநேரம் மட்டும் செலவு செய்து இந்த படத்தை பாருங்கள் அட்லீஸ்ட் ஒரு நாளுக்காவது அந்த பாதிப்பு இருக்கும் நிச்சயமாக...


     
          
[ Read More ]

சந்தியாராகம் [தமிழ்/1989] - பாலு மகேந்திராவுடன் ஒரு நாள்


”யாரும் யாருக்கும் உயர்வுமில்லை தாழ்வுமில்லை அனைவருமே சமம்” இந்த வரியை நீங்கள் படிப்பது நிச்சயமாய் முதல்முறையாக இருக்காது அறிவுரையாகவோ பாடமாகவோ வாழ்வில் ஒரு முறையேனும் கேட்டு இருப்பீர்கள் ஆனால் வாழ்வில் எந்த ஒரு கணத்திலாவது இதை கடைப்பிடித்திருப்போமா என கேட்டால் இல்லை என்பதே நம் அனைவரின் பதிலாக இருக்கும்.  வயது, பணம், அறிவு ஆகிய சமூக மதிப்பீடுகளின் அடிப்படையில் நாம் அனைவரும் பிறரை எப்பவுமே நம்மை விட உயர்வாய் நினைக்க எல்லா தருணங்களிலும் தயாராக இருக்கிறோம் ஆனால் நம் தாத்தாக்கள் முக்கியமாக நினைத்த விஷயங்கள் நமக்கு முக்கியமானதாக இல்லை. சமூக மதிப்பீடுகளின் வடிவங்கள் மாறுகின்றன தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

சென்ற தலைமுறை வயதுக்கு கொடுத்த மரியாதைக்கும் இந்த தலைமுறை கொடுக்கும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசம் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அறுபது வயது வரை நல்ல வேலையில் உள்ள ஒருவருக்கு குடும்பத்திலோ வெளியிலோ கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் ஓய்வுக்கு பிறகும் கிடைக்கப்பெற்றால் அவர்களெல்லாம் நிச்சயமாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆனால் ஆசிர்வாதமோ அதிர்ஷ்டமோ அத்தனை சுலபமாய் கிடைப்பதில்லை. பணமே பிரதான இலக்காக கொண்ட சமூகம் பணம் ஈட்ட இயலாத வயதானவர்களை சுலபமாக தனிமைப்படுத்தி விடுகிறது அல்லது அருவெருப்புடன் சேர்த்துக்கொள்கிறது. தன் தாய் தந்தையரிடம் கூட பேச நேரமின்றி இயந்திர சக்கரத்தின் பல்முனை போல் நிற்க்காமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவதேயில்லை அவர்களுக்கும் வயதாகும் என்று..,



  வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமை, தங்களுக்கான மதிப்பு குறைவதால் வரும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம் மற்றும் அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள் அந்த அழுத்தங்களின் தாக்கத்தால் ஏற்படும் உறவு சிக்கல்கள் என 80 வருட தமிழ்சினிமா சரித்திரத்தில் எந்தவொரு திரைப்படமும் தொட்டுப்பார்க்க துணியாத விஷயங்கள் அத்தனையையும் தொட்டு செல்கிறது பாலு மகேந்திராவின் “சந்தியாராகம்”.

கிராமத்தில் வாழ்ந்து வரும் 84 வயதான சொக்கலிங்கம் தன் மனைவி இறந்துவிட்ட காரணத்தால் சென்னையில் இருக்கும் தன் அண்ணன் மகன் வாசுவின் வீட்டிற்க்கு வருகிறார். வாசு அவருடைய கர்ப்பமான மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள மாதம் 20 தேதிக்கு பிறகு கடன் வாங்கி காலத்தை ஓட்டும் வழக்கமான மிடில் கிளாஸ் குடும்பம். வாசுவும் அவரது மனைவியும் சொக்கலிங்கத்தை நன்றாகவே கவனித்து கொள்கின்றனர் ஆனாலும் தவிர்க்க முடியாத ஒரு சமயத்தில் ஏற்படும் சிறு மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுகிறார். அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வாசுவின் மனைவி முயற்சித்து கொண்டே இருக்கிறார். கடைசியாக வந்தாரா இல்லையா என்பதை திரையில் காண்க ..,

சொக்கலிங்கமாக நடித்துள்ள சொக்கலிங்க பாகவதர் அவரது மருமகளாக நடித்துள்ள அர்ச்சனா இருவருமே கொஞ்சமும் கூட குறைய இல்லாமல் நடித்து இருக்கின்றனர். குறிப்பாய் சொக்கலிங்க பாகவதர் சின்ன சின்ன ரியாக்ஸன்களில் கூட அசத்துகிறார் பல இடங்களில் உங்கள் தாத்தாவை ஞாபக படுத்தலாம். இத்தனை சிறந்த நடிகரை பாலு மகேந்திராவை தவிர யாரும் பயன்படுத்தியதாய் தெரியவில்லை. கறுப்பு வெள்ளையிலும் கூட பாலு மகேந்திராவின் கேமரா ஆளுமை நிறைய இடங்களில் பளிச்சிடுகிறது. வழக்கமாய் தமிழ்சினிமாவில் வைக்காத பல ஷாட்கள் படத்தில் உள்ளது குறிப்பாக படம் முடியும் போது வைக்கப்படும் கடைசி ஷாட் .., சும்மா புகழ வேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை நிஜமாகவே அற்புதமான ஷாட். Tree of Life போன்ற படங்களில் இந்த மாதிரி ஷாட் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அந்த படங்கள் ஹாலிவூட் பட்ஜெட்டில் வண்ண கலவையோடு கொண்டு வந்த அழகியலை பத்து லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கறுப்பு வெள்ளையிலையே கொண்டு வந்துள்ளார். 


சில வருடங்களுக்கு முன்பு தமிழின் மிக முக்கியமான படங்கள் என்று விமர்சகர்களால் எடுத்தாளப்படும் படங்களை பார்க்கலாம் என சிறுப்பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருந்தேன். அந்த படங்களை டி.வி.டி-யாக வாங்கவோ இணையத்தில் தரவிறக்கவோ முயற்சி செய்த போது கடும் ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலன படங்கள் எந்த வடிவத்திலும் கிடைக்கவே இல்லை சரியாக சொல்ல வேண்டுமென்றால் கிடைப்பதற்க்கான வாய்ப்புகளே இல்லை. அப்படி இனி பார்க்கவே முடியாது என நினைத்திருந்த படங்களில் சந்தியா ராகமும் ஒன்றாம் ஆனால் பார்க்கவே முடியாது என நினைத்திருந்த இந்த படத்தை தமிழ் ஸ்டூடியோ குழுவினர் நடத்திய அரிய திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வில் தான் காண நேர்ந்தது அதுவும் சாதாரணமாக அல்ல படத்தின் இயக்குநர் திரு, பாலு மகேந்திரா அவர்களுடன் ஒரே அரங்த்தில்.., சில சமயங்களில் காத்திருப்பதற்க்கும் ஒரு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இந்த திரைப்படம் இணையத்திலோ பர்மா பஜாரிலோ கிடைக்கவில்லை. இந்த திரையிடல் கூட பாலு மகேந்திரா அவர்களின் தனி சேமிப்பில் இருந்த குறுந்தகடு மூலமாக தான் நடைப்பெற்றது.

படம் முடிந்த பின்னர் ஒரு சிறு கருத்து பரிமாற்றம் நடைபெற்றது அதன் பின்னர் பாலு மகேந்திரா பேசினார் எதிர்ப்பார்த்ததை விட இயல்பாகவும்  சமயங்களில் உணர்ச்சிகரமாகவும் பேசினார்.

வணிக நோக்கங்கள் ஏதுமில்லாமல் நல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழ் ஸ்டூடியோ குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ் ஸ்டூடியோவின் இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக்கவும்.

மொத்ததில், தமிழில் இப்படியும் ஒரு திரைப்படம் வந்து இருக்கிறதா என ஆச்சர்யப்படும் வகையில் இருக்கிறது சந்தியாராகம். எப்போதாவது தமிழின் சிறந்த படங்களை நான் பட்டியலிட நேர்ந்தால் சந்தியாராகமும் தவறாமல் முக்கிய இடத்தில் இருக்கும்.தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களில் இந்த படத்தை திரையிடுவதாக மேடையில் கூறினார்கள் அப்படி உங்கள் ஊரில் திரையிட்டால் தயங்காமல் குடும்பத்துடன் சென்று பாருங்கள்.
[ Read More ]

Princess Mononoke [Japanese / 1997] - மனித போராசையின் இன்னொரு முகம்

          இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் ஊரிலோ அல்லது சுற்று வட்டாரத்திலோ இருந்த என்னவெல்லாம் காணமல் போய் இருக்கிறதென்று யோசித்தது உண்டா ?  ரோட்டை அகலப்படுத்துவதற்க்காக மரங்கள் , ஃப்ளாட் போட்டு விற்கப்பட்ட ஏரிகள் அல்லது குளங்கள் , வீடுகளாக மாறிவிட்ட வயல்வெளிகள் , மணலுக்காக சுறுங்கி போன ஆற்றுப்படுகைகள் , நகரத்தில் இருந்து காணாமல் போய்விட்ட சிட்டுகுருவிகள் இப்படி நீளும் அத்தனையும் மனிதனின் வசதிக்காக சட்டபூர்வமாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ செய்த இயற்க்கை சுரண்டல்களின் நிகழ்கால சாட்சியங்கள். இருபது வருடங்களில் மட்டும் இத்தனை என்றால் இரண்டாயிரம் வருடங்களில் நம் வசதிக்காக என்னவெல்லாம் செய்து இருப்போம். எத்தனை காடுகள் , எத்தனை பழங்குடியினர் , எத்தனை உயிர்கள் நம் வசதிக்காவும் தேவைக்காகவும் ஆசைக்காகவும் அழித்தொழித்துவிட்டோம் இன்னும் நாம் வாழும் காலம் வரை அழிக்கப்போகிறோம்..,


        உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய அனிமேஷன் பட இயக்குநர் Hayao Miyazaki - ன் முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்றாகும். ஒரு காட்டில் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட அங்கே இருக்கும் விலங்கு கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் சண்டை தான் படத்தின் மையக்கரு.  மனிதர்களை வில்லனாக காட்டிய படங்கள் வெகு குறைவு (E.T , Avatar , District 9) மனித பேராசையை காட்டுவதன் மூலம் இந்த  படமும் அந்த சின்ன பட்டியலில் தன்னை இணைத்து கொள்கிறது..,

     ஒரு அழகான காட்டிலுருந்து படம் துவங்குகிறது அமைதியாய் இருக்கும் காட்டில் ஏதோ ஒரு சலனம் தெரிய எல்லோரும் பயந்த படி பார்க்கின்றனர். காட்டில் இருந்து உடலெங்கும் நெளியும் பாம்புகளை கொண்ட விசித்திர மிருகம் வெளிப்பட்டு அந்த கிராமத்தையும் மக்களையும் தாக்குகிறது. அந்த கிராமத்தின் இளவரசன் அஷ்டகா அந்த மிருகத்துடன் சண்டையிட்டு அதை கொன்றுவிடுகிறான் ஆனால் அந்த மிருகத்தின் உடம்பில் இருந்த பாம்பு ஒன்று அவன் கையில் சிக்கி கொண்டு ஒரு அழியாத கருப்பு நிற தழும்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த தழும்பை சோதிக்கும் கிராமத்து கிழவி வந்த மிருகம் ஒரு சபிக்கப்பட்ட பன்றி கடவுள் என்றும் அதன் மூலம் ஏற்பட்ட தழும்பு பெரிதாகி இளவரசனை கொன்றுவிடும் என்றும் கூறுகிறார். இந்த சாபத்தில் இருந்து விடுப்பட மேற்கு நோக்கி பயணம் செய்து மான் கடவுளை சந்தித்தால் சாபம் நீங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

       அஷ்டகா நீண்ட தூரம் பயணம் செய்து லேடி எபோஷி  என்ற பெண் இரும்பு தொழிற்சாலை நடத்தும் மலைக்கு வந்தடைகிறார். அந்த தொழிற்சாலைக்கும் அங்கிருக்கும் மக்களுக்கும் அந்த மலையை சுற்றி உள்ள மிருகங்களால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். குறிப்பாக மோரோ எனப்படும் ஓநாய் கடவுளும் அதன் மகளாக சொல்லப்படும் Princess Mononoke என்று அழைக்கப்படும் ஷானும் தான் லேடி எபோஷியை கொலை செய்வதையே லட்சியமாய் கொண்டுள்ளனர். அதே சமயம் லேடி எபோஷி தன்னுடைய தொழிற்சாலையில் விபச்சாரிகளுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வேலை கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிறார். அதனால் அங்கு வேலை செய்யும் அனைவரும் அதிக விசுவாசத்தோடு இருக்கின்றனர். ஷான் அந்த தொழிற்சாலைக்குள் புகுந்து லேடி எபோஷியை கொலை செய்ய முயற்சி செய்கிறார் அப்போது அஷ்டகாவின் தழும்பு ஷானை காப்பாற்றுமாறு கட்டாயப்படுத்துகிறது. ஷானை காப்பாற்றும் முயற்சியில் அஷ்டகாவுக்கும் அவனுடைய குதிரை யக்ரூவுக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது.

       காயம்ப்பட்ட  அஷ்டகாவையும் குதிரையும் புனித குளத்திற்கு தூக்கி சென்று அங்கே மான் கடவுளிடம் பிராத்தனை செய்து  காப்பாற்றுகிறார் ஷான். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அஷ்டகாவுக்கும் ஷானுக்கும் ஒரு பிணைப்பு உண்டாகிறது. மான் கடவுளை கொலை செய்வதற்க்காக லேடி எபோஷி அரசப்படையுடன் இணைந்து காட்ட்டிற்க்குள் செல்கின்றனர் அதேசமயம் அரசப்படையினர் லேடி எபோஷி இல்லாத சமயத்தில் அவருடைய தொழிற்சாலையை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அஷ்டகாவின் சாபம் நீங்கியதா ? மான் கடவுள் கொல்லப்பட்டாரா ? லேடி எபோஷி தொழிற்சாலையை காப்பாற்றினாரா ? ஷானும் அஷ்டகாவும் இணைந்தார்களா என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,

    தொழிற்சாலையை காப்பாற்றுவதற்க்காக காட்டில் உள்ள அனைத்து உயிர்களையும் கொல்வதற்க்கும் யாரும் தயங்குவதில்லை கடவுளே ஆனாலும் இதே நிலைதான் மனிதர்கள் தாங்கள் விரும்பியதை செய்வதற்க்காக எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை உணர்த்துவதாக இந்த  காட்சிகள் இருக்கும். படம் வெறும் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமான சண்டையாக இல்லாமல் அனைவருமே தங்கள் இருப்பை காப்பாற்றுவதற்க்கான போராட்டமாகவே அனைத்தும் காட்டப்பட்டிருக்கும் குறிப்பாக லேடி எபோஷியின் கதாபாத்திரம் . லேடி எபோஷி தன்னுடைய தொழிற்சாலையை காப்பாற்ற கடவுளையே கொல்லவும் தயாராய் இருக்கிறார் ஆனால் விபச்சார விடுதிகளில் இருந்து பெண்களை காப்பாற்றி நல்வாழ்வளிக்கிறார் இப்படி முழுக்க நல்லவருமல்லாமல் கெட்டவ்ருமல்லாமல் சாதாரண மனித இயல்புகளோடு வருகிறார்.

       வண்ணங்கள் குழைத்து தீட்டப்பட்ட ஓவியங்களாய் கண்முன்னே காட்சிகள் அனைத்தும் விரிகின்றது. அஷ்டகா பயணம் மேற்கொள்ளும் காட்சி, மெல்ல மழை பொழிய தொடங்கும் காட்சி , தொடக்கத்தில் நெளியும் பாம்புகளோடு வரும் மிருகம் என  படத்தின் நிறைய காட்சிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன அவ்வளவு அழகு. இந்த கதையையும் கதாபாத்திரங்களையும் மொத்தமாக உருவாக்க இயக்குநர் மியசாகிக்கு 16 ஆண்டுகள் பிடித்ததாம். படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் கையால் வரையப்பட்ட பழைய வகை அனிமேஷன் ஆகும் எனவே ஒவ்வொரு ஃப்ரேமும் வரையப்பட வேண்டும். இந்த படத்துக்குகாக வரையப்பட்ட 1,44,000 ஃப்ரேம்களையும் தனிப்பட்ட முறையில் சரிபார்த்ததோடு 80,000 ஃப்ரேம்களை திரும்ப வரையவும் சொல்லிவிட்டாராம். அவர் எதிர்பார்த்த பெர்ஃபெக்ஷன் கிடைத்தப்பின்னர் தான் படத்தை வெளியிடவும் சம்மதித்தாராம்.

       இயக்குநர் மியசாகி தன்னுடைய படங்களில்  வெறும் பொழுதுபோக்கோடு ஏதேனும் நல்ல கருத்துக்களை சொல்ல விரும்புபவர். இதிலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதர்கள் இயற்கைக்கு எதிரி ஆகாமல் இரண்டும் இணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று கூறி இருக்கிறார்.மற்றைய படங்களை போலவே கருத்து திணிப்பாக இல்லாமல் கதையின் ஊடே சொல்ல நினைத்த கருத்துக்களை அழகாய் சொல்லி செல்கிறார்.

     மொத்ததில் இரண்டு மணிநேரம் தரமான பொழுதுபோக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்களுக்கு சரியான சாய்ஸ் இந்த படம்.

Princess Mononoke : A nice adventerous journey in the Land of Beauty.
My Rating : 8.5 / 10.

[ Read More ]

ஹாலிவூட்டிற்குள் அதிரடியாய் நுழையும் ஆசிய இயக்குநர்கள்..,

      எல்லா துறைகளை போலவே சினிமாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்பதெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகிலேயே அதிக வசூலான படங்களின் பட்டியலுக்கும் ஹாலிவுட்டில் அதிக வசூலான படங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது அந்த அளவிற்க்கு அவர்களின் களம் பெரிது. அதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ Ameros Perros - க்கு பிறகு Alejandro González Iñárritu , The Lives of Others - க்கு பிறகு Florian Henckel von Donnersmarck ,Pan's Labyrinth - க்கு பிறகு Guillermo del Toro என சமீப காலமாக உலக அளவில் தங்களை நிருபித்த இயக்குநர்கள் ஹாலிவூட் நோக்கி செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

      ஆசியாவில் இருந்தும் John Woo ,  Ang Lee போன்றவர்கள் சொந்த நாட்டில் சிறப்பான படங்களை எடுத்து தங்களை நிருபித்துவிட்டு 20-ம் நூற்றாண்டின் முடிவில் ஹாலிவூட் சென்று அங்கும் குறிப்பிடும்படியான வெற்றியும் பெற்றனர். Brokeback Mountain படத்திற்காக Ang Lee சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வாங்கியது நினைவிருக்கலாம். இப்போது அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கான காலம் போல ஆசியாவின் மிக முக்கியமான நான்கு இயக்குநர்கள் தற்போது ஹாலிவூட்டில் கால்பதிக்கிறார்கள் அந்த படங்கள் பற்றிய சிறிய அறிமுகங்கள்..,

The Flowers of War:

          Raise the Red Lantern , Not One Less , Road Home, TheThe Road Home , House of Flying Daggers உட்பட பல அற்புதமான படங்களை  எடுத்த Zhang Yimou-ன்  லேட்டஸ்ட் படம். இது ஒரு முழுமையான ஹாலிவூட் படம் கிடையாது சீனா மற்றும் ஹாலிவூட் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பு. நம்ம ஊரில் கூட இந்த மாதிரி கூட்டு தயாரிப்பு படங்கள் எடுப்பார்கள் ஆனால் அதில் நடிக்கும் ஆங்கில நடிகர்கள் பெயரை அமெரிக்காவில் இருப்பவர்கள் கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். இந்த படத்தில் அது போல் அல்லாமல் ஹாலிவூட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான Christian Bale நடித்து இருக்கிறார். 



    
       இது இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களுள் ஒன்றான "Rape of Nanjing"  பற்றிய படமாகும். ஏற்கனவே வெளியாகிவிட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை :(. இந்த படம் குறித்த எஸ்.ரா வின் விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்..,

Stoker:

        ரொம்பவும் பிரபலமான கொரிய படமான Old Boy படத்தின் இயக்குநர் Park-Chan-wook ன் ஹாலிவூட் பிரவேசம் தான் இந்த படம். பொதுவா அமெரிக்கப்படங்களே துண்டு போட்டு உட்கார்ந்து இருக்கும் பிரபலமான IMDB-ன் சிறந்த 250 படங்கள் பட்டியல்ல 90 வது இடத்துல இருக்கும் அளவுக்கு Old Boy அமெரிக்காவுல ஃபேமஸ். Old boy படம் ஹாலிவூட்ல ரீமேக் செய்ய போறதா ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க முதல்ல ஸ்பீல்பெர்க் தயாரிக்க வில் ஸ்மித் நடிக்கிறதா சொன்னாங்க இப்போ ஸ்பைக் லீ டைரக்ஷன்ல வேற யாரோ நடிக்கிறதா சொல்லுறாங்க. சரி, அது எப்போ வேணாலும் வரட்டும் (ஒரிஜினல் பாத்தாச்சு அப்புறம் ஒரிஜனல் படத்துல இருந்த குரூரத்தை ஆங்கிலத்துல முழுசா கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்ன்னு நினைக்கிறேன்) இந்த படம் இந்த வருஷத்துக்குள்ள ரிலீஸாகிடும் போல இருக்கு. 



      Nicole Kidaman , Mia Wasikowska (Alice in Wonderland) போன்ற ஹாலிவூட்டின் முன்னணி நடிகைகள் நடிக்க Ridley Scott மற்றும் Tony Scott தயாரிக்கின்றனர். நீங்கள் Prison Break டி.வி. சீரிஸ் பார்த்ததுண்டா ? பிடிக்குமா ? ஆம் எனில் அதில் உடம்பெல்லாம் பச்சை குத்திய படி வரும் அதன் நாயகன் Micheal Scoldfield - யையும் பிடிக்குமல்லவா.., என்னடா சம்பந்தம் இல்லாம பேசுறான்னு பல்லை கடிப்பது தெரிகிறது ஆனால் சம்பந்தம் இருக்கிறது. Scoldfield - ஆக நடித்த Wentworth Miller தான் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார்.ஆக இந்த படத்தை எதிர்ப்பார்க்க மேலும் ஒரு காரணம் கிடைத்து விட்டது :)).

Last Stand:

              ஆக்சன்(A Bittersweet Life) , ஹாரர்(A Tale of Two Sisters) , காமெடி(The Good, the Bad, the Weird) , சைக்கோ(I saw the Devil) என சகல விதமான படங்களையும்  அருமையாக எடுத்து அசத்திய கொரிய இயக்குநர் Kim Ji-woon ஹாலிவூட்டில் களமிறங்கும் படம். டெர்மினேட்டர் - 3 க்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அர்னால்ட் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் ஆக்சன் பட ரசிகர்களிடம் இப்போதே ஒரு எதிர்ப்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. A Bittersweet Life படத்தில் வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எனக்கு ரொம்ப பிடித்த காட்சிகளுள் ஒன்று ரொம்பவும் ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கும். இதுவும் ஒரு ஆக்சன் படம் என்பதுடன் ஹாலிவூட் பட்ஜெட்டில் அதகளப்படுத்துவார் என்று நம்பியும் எதிர்ப்பார்க்கிறேன் (சொதப்பாமல் இருந்தா சரி).



Snowpiercer:


           எனக்கு ரொம்ப பிடித்த சீரியல் கில்லர் படங்களுள் ஒன்றான "Memories of Murder" படத்தை இயக்கிய Bong Joon-ho-வின் முதல் ஆங்கில படமாகும். Le Transperceneige என்ற ஃப்ரன்ச்  நாவலை தழுவி எடுக்கப்படுகிறதாம் பனி சூழ்ந்த உலகத்தில் செல்லும் ரயிலில் நடைபெறும் கதையாம். கேப்டன் அமெரிக்காவாக நடித்த Chris Evans , ஆஸ்கர் வாங்கிய Octavia Spencer ஆகியோர் நடிக்கின்றனர். சென்ற மாதம் தான் படபிடிப்பு தொடங்கியுள்ளது அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.



கொசுறு தகவல்கள் :
Akira Kurosawa , Francois truffaut போன்ற பெரிய பெரிய தலைகள் கூட ஹாலிவூட்டில் ஒரு படம் எடுத்து உள்ளனர்.

 Manoj N Shyamalan (SixthSense, Signs),  Jennifer Yuh Nelson(Kung fu Panda 2), Tarsem Singh(Immortals) போன்றவர்கள் ஆசியாவில் பிறந்து அமெரிக்க படிப்பு அல்லது வளர்ப்பு மூலம் ஹாலிவூட் இயக்குநர் ஆனவர்கள்.



[ Read More ]

Elena [Russian / 2011] - எது தர்மம் ?

எது தர்மம் ?
எது தேவையோ அதுவே தர்மம். 
                                                     - சாணக்கியர்

             
மேற்கூறிய வாசகத்தை தங்களை போலவே நானும் ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் தான் பார்த்தேன். ஆரண்ய காண்டம் படம் வந்த சமயத்தில் அதன் மீது வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனம் அது எந்தவிதமான அறத்தையும் முன்வைக்கவில்லை என்பதாகும். அது மட்டுமல்லாமல் அப்படி அறத்தை போதிக்காதாத எந்த ஒரு திரைப்படமோ புத்தகமோ நிச்சயமாக கலைப்படைப்பாக முடியாது என்றும் சொல்லப்பட்டது. Elena படத்தை பார்த்த போதும் எனக்கு மேற்கூறிய வாசகமும் இந்த விமர்சனங்களும் தான் ஞாபகம் வந்தது. ஆரண்ய காண்டத்தை விட மிக மோசமான விஷயத்தை இந்த படம் முன்வைக்கிறது அதை விட முக்கியமாக அந்த விஷயத்தை நியாயப்படுத்துவதற்க்கான சிறு முயற்சி கூட செய்யவில்லை. இந்த இரண்டு படங்களுமே எனக்கு பிடித்த படங்கள் தான் ஒரு கலை படைப்பு கட்டாயமாக ஒரு அறத்தை போதிக்க வேண்டுமா என்ன.. ??


          ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை அதற்கு பின்னால் இருக்கும் வீடு நமக்கு காண்பிக்கப்படுகிறது அதுவும் சலனமே இல்லாமல் ஒரு புகைப்படம் போல சில நிமிஷங்களுக்கு (கவனிக்க.. நொடிகள் அல்ல நிமிஷங்கள் ) காண்பிக்கப்படுகிறது. அதன் பின் அந்த பறவை பறக்கும் சிறு சலத்தோடு தொடங்குகிறது படம். அறுபதுகளில் இருக்கும் தம்பதிகளான விளாடிமிர் மற்றும் எலினா இருவரும் வெவ்வேறு பொருளாதார பிண்ணனிகளை சேர்ந்தவர்கள். விளாடிமிர் பெரும் பணக்காரர் அதே வேளை எலினா அவ்வளவு பொருளாதார வசதிகள் இல்லாதவர். விளாடிமர் தனக்கு நர்ஸாக வந்த எலினாவை தன்னை கவனித்து கொள்வதற்க்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

       இருவருக்கும் முந்தைய திருமணங்கள் மூலமாக ஆளுக்கு ஒரு பிள்ளை இருக்கிறார்கள். விளாடிமரின் மகள் கேத்ரினா தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும் , ஊர் சுற்றும் , முற்போக்கு பேசும் வழக்கமான பணக்கார பெண். எலினாவின் மகன் வேலையில்லாதவர் தன் குடும்பத்தை நடத்துவதற்க்கே சிரமப்படுகிறார். அவரது குடும்ப செலவுக்கு கூட எலினாவின் பெனஷனையே நம்பி இருக்கிறார். சரியாக பென்ஷன் வரும் நாளன்று விளாடிமரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி (அவருக்கு தெரியாமல்) மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு பென்ஷன் பணத்தை கொடுக்க போகிறார் எலினா. அப்போது அவருடைய பேரனை கல்லூரியில் சேர்க்க பணமில்லை என்றும் விளாடிமரிடம் உதவி கேட்க வேண்டும் என்றும் அவருடைய மகன் கேட்கிறார். 


        சமயம் பார்த்து விளாடிமரிடம் தன் மகனுக்கு உதவுமாறு எலினா கேட்க ஏற்கனவே கொடுத்தது போதும் இனி முடியாது என்று மறுத்து விடுகிறார். அன்றே விளாடிமருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது ஆனால் உயிர் பிழைத்து விடுகிறார். தான் உயிருடன் இருக்கும் போதே உயில் எழுத முடிவு செய்கிறார் விளாடிமர். இதுக்கும் மேல கதைய சொன்ன படம் பாக்கும் போது சுவாரசியம் சுத்தமா போய்டும் ., ஆகவே இதுக்கு மேல நீங்களே  பாத்துக்கங்க..,


     படத்தில் ரொம்ப பிடிச்ச விஷயம் அதன் ஆரம்ப காட்சி தான். ஒரு புகைப்படத்தை சில நிமிஷம் காட்டுவது போல இருக்கும் அந்த காட்சியே படத்தின் தன்மையை சொல்லிவிடுவதுடன் பார்வையாளனை அதற்கு தயார் செய்து விடுகிறது. உங்களுக்கு அந்த காட்சி பிடிக்கவில்லை என்றாலோ போர் அடித்தாலோ நிச்சயம் இது உங்களுக்கான படம் இல்லை எனவே படத்தை நிறுத்தி விட்டு வேறு ஏதேனும் உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம். அதே போல படத்தின் கடைசி காட்சியிலும் ஒரு குடும்பத்தின் வழக்கமான மாலை நேர தேநீர் உரையாடலுடன் தொடங்கும் காட்சி படம் தொடங்கிய அதே ஃப்ரேமில் முடியும் ஆனால் அவர்கள் சகஜமாக சிரித்து பேசி கொண்டிருப்பது நமக்கு எரிச்சலாக இருக்கும் படத்தின் வெற்றியும் இது தான்.



     படத்தின் திரைக்கதை தேவையில்லாமல் எதையும் சேர்க்காமல் இராணுவ ஒழுங்குடன் எழுதப்பட்டு இருக்கிறது. குறைவான அளவிலையே வசனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் எல்லா வசங்களும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. நிறைய விஷயங்கள் வசனமாக சொல்லப்படாமல் காட்சியின் வழியாக சொல்லப்படிகிறது. விளாடிமரும் எலினாவும் திருமணம் செய்து கொண்டாலும் வெவ்வேறு படுக்கை அறைகளையே பயன்படுத்துகின்றனர் அதிலும் விளாடிமரின் அறை நட்சத்திர ஓட்டல் போல இருக்கிறது ஆனால் எலினாவின் அறை சமையல் கட்டுக்கு பக்கத்திலையே இருக்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் எலினாவை ஒரு வேலைக்காரியாகவே இன்னமும் பார்க்கிறார் என்பது தெரிகிறது. அப்புறம் , மகன் வீட்டிற்கு போகும் எலினாவை விட அவர்களுக்கு அவள் கொண்டு வரும் பணமும் பொருளுமே முக்கியமாகிறது. 


       படத்தை பற்றி நெட்டில் நோண்டிய போது கிடைத்த ஒரு முக்கியமான விஷயம் , ஒரு மென்மையான குடும்ப டிராமா போல இருந்தாலும் சோசியலிஷத்தின் விழ்ச்சிக்கு பிறகான ரஷ்ய மக்களின் நிலையை பூடகமாக சொல்கிறது இந்த படம். ரஷ்யாவில் பணக்காரர்களுக்கும் ஏழைக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து விட்டதையும் உறவுகளை விட பணத்திற்க்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டனர் போன்ற விஷயங்கள் தான் படத்தின் உள்ளடக்கம் என்று இயக்குநர் Andrei Zvyagintsev கூறி உள்ளார்.

     இந்த படத்தின் இயக்குநர் Andrei Zvyagintsev -ன் முதல் படமான "The Return" படமும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. ஆகவே மக்கள் அந்த படத்தையும் பார்க்குமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்ளப்படுகின்றனர் :)) .


Elena : A simple family drama which can shake u for a moment.
My rating : 8.5 /10

[ Read More ]

The Artist [2011] - கலப்படமற்ற சினிமாவின் மொழி

"The Artist was made as a love letter to cinema"
                                                                        - Michel Hazanavicius 

             117 வருடங்களுக்கு முன்பு லூயி லூமியும் அகஸ்தா லூமியும் பாரிஸில் முதல் முறையாக அசையும் படத்தை திரையிட்டு காட்டிய போது ஏற்படுத்திய வியப்பில் முழுமையாக இல்லை என்றாலும் ஒரு குறிப்பிடும்படியான அளவையேனும் இன்றும் ஏற்படுத்துவது தான் சினிமா.இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சினிமா காலாவதி ஆகாமல் இருப்பதற்க்கான பெருங்காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அன்று அசைய தொடங்கிய சினிமா பின்னர் கதை சொல்ல தொடங்கியது,பேச தொடங்கியது, வண்ணமாகியது இன்னும் பல மாயங்கள் புரிய தொடங்கியது.இந்த பரிமாண வளர்ச்சியில் மௌன திரைப்படங்கள் வேறொரு காலத்தின் கலாச்சார பதிவுகளாகவும் , கலை பொக்கிஷங்களாகவும் எஞ்சி நிற்கின்றன.


          நீங்கள் Charlie Chaplin-யும் Buster  Keaton-யும் உங்கள் கணிணி திரையிலோ டி.வி.யிலோ பார்த்து இருக்கலாம் சிரித்தும் ரசித்தும் கூட இருக்கலாம் ஆனால் அன்றைய மக்களிடம் அது ஏற்படுத்திய உணர்வுகளை உங்களால் அனுபவிக்கவே முடியாது.ஜாலியன் வாலா பாக்கில் வெடித்த துப்பாக்கியை இன்று மியூசியத்தில் பார்ப்பவனுக்கும் அன்று வெடிக்கும் போது பார்த்தவனுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்.இப்படி கால சக்கரத்தில் பின்னால் சென்றால் மட்டுமே நிகழ கூடிய அதிசியத்தை நிகழ்காலத்திலேயே நடத்தி காட்டும் ஒரு முக்கியமான முயற்சி தான் "The Artist".

        1927 , மௌன பட சூப்பர் ஸ்டாரான ஜார்ஜ் வாலண்டின் அவருடைய ஒரு படத்தின் ப்ரீமியர் காட்சியை முடித்து விட்டு வரும் போது ஒரு ரசிகையால் முத்தமிடப்படுகிறார். அது  "Who's That Girl ?" என்ற தலைப்போடு முதல் பக்க செய்தியாகிறது.மறுநாள் அந்த ரசிகை சினிமா வாய்ப்பு தேடி வருகிறார் ஒரு சிறு வாய்ப்பு கிடைக்கிறது அப்போதுஅவர் பெயர் பெப்பி மில்லர் என்று தெரிய வருகிறது.அப்போது ஜார்ஜை மறுபடி சந்திக்கிறார் அவர்களுக்கு இடையில் ஒரு நட்பு உண்டாகிறது.பெப்பி மில்லர் கொஞ்சம் கொஞ்சமாக திரை உலகில் முன்னேறி கொண்டு இருக்கிறார்.


      1929,சினிமா பேச தொடங்குகிறது ஆதலால் இதுவரை ஜார்ஜை வைத்து படமெடுத்து கொண்டிருந்த ஸ்டூடியோ மௌன படங்களை இனி தயாரிக்க போவதில்லை  என அறிவிக்கிறது.கோபமடைந்த ஜார்ஜ் சொந்தமாக ஒரு மௌன படம் தயாரிக்கிறார் அதே நேரத்தில் ஸ்டூடியோ பெப்பியை கதாநாயகியாக போட்டு பேசும் படம் ஒன்றை தயாரிக்கிறது.இரண்டும் ஒரே நாளில் ரிலீசாகிறது.பெப்பியின் பேசும் படம் பெரும் வெற்றி பெற ஜார்ஜின் மௌனப்படம் படுதோல்வி அடைகிறது.அதே நேரத்தில் வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தை கடும் பின்னடைவை சந்திப்பதால் மொத்தமாக திவாலாகிறார் ஜார்ஜ்.



       ஜார்ஜின் நிலைமை மேலும் மோசமாகி கொண்டே போகிறது. மனைவி பிரிகிறார் , சொத்துக்கள் அனைத்தும் ஏலத்தில் போகிறது , விசுவாசமான டிரைவரை சம்பளம் கொடுக்க முடியாமல் நிறுத்துகிறார் , ஒரு தீ விபத்தில் சிக்கி மயிரிழையில் தன் நாயின் உதவியால் உயிர் தப்புகிறார்.அதற்கு நேர்மாறாக தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து ஹாலிவுட்டின் உச்ச நட்சதிரமாகிறார் பெப்பி.இருவரும் சந்திதார்களா , ஜார்ஜ் மீண்டும் உச்சத்தை அடைந்தாரா என்பதையெல்லாம் வெள்ளி திரையிலோ கணிணி திரையிலோ காண்க..,
   
         கதையை படிக்கும் போது வெகுசாதாரணமான படம் போல தோன்றலாம் ஆனால் எடுக்கப்பட்ட விதம் அசாத்தியமானது.முழுபடத்தையும் மௌன படமாக எடுத்தோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் இருந்த டெக்னிக்கல் விஷ்யங்களும் (4:3 Aspect ratio , 22fps etc..,) பயன்ப்டுத்த பட்டு உள்ளது.தான் பெரிதும் மதிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு Homage-ஆக இந்த படத்தை இயக்கி உள்ளதாக இயக்குநர் Michel Hazanavicius கூறியுள்ளார்.ஜார்ஜாக நடித்துள்ள Jean Dujardin -க்கு இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்குவதற்க்காக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.படத்தில் முக்கியமான மற்ற மூன்று பேர் ஒளிபதிவாளர் Guillaume Schiffman , இசையமைப்பாளர் Ludovic Bource மற்றும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நாய்.

       படத்தில ரசிக்கத்தக்க விஷயங்கள்   நிறைய இருக்கின்றன .காட்சியின் தன்மைக்கேற்ப்ப அவ்வப்போது சில போஸ்டர்கள் திரையின் எங்காவது ஒட்ட பட்டிருக்கும் உதாரணமாக ஜார்ஜுக்கும் பெப்பிக்கும் நட்பு ஏற்படும் காட்சியில் "Thief of the Hearts" போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும் இழந்து விட்டு ஜார்ஜ் நடந்து வரும் போது "The Lonely Star"  என்ற போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும் இன்னுன் பல இடங்களில் வரும் நீங்களே பார்த்து கண்டுபிடிங்க..படத்தின் துவக்கத்தில் ஜார்ஜ் பிரீமியர் காட்சியை பார்க்கும் படத்தின் பெயர் "A Russian Affair" அதற்கு அடுத்த காட்சியில் அவர் நடிக்கும் படத்தின் பெயர் "A German Affair" ஹாலிவுட்டின் Sequel கலாச்சாரத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இந்த காட்சிகள் அமைந்திருக்கும்.

   இந்த படத்திற்க்கு சிறந்த படத்திற்க்கான ஆஸ்கர் கிடைப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது ஆனால் ஆஸ்கர் விருதே அரசியல்களால் ஆனது எனவே Tree of Life - க்கோ அல்லது மொக்கை படமான War Horse - க்கோ கூட விருது கொடுக்கப்படலாம்.விருது கொடுக்கப்பட்டாலும் கொடுக்காவிட்டாலும் இது ஒரு அற்புதமான படம் தவறாமல் பாருங்கள்.

The Artist : A Rare Film which take us back to the days of our their Great Grandfathers.
My rating  : 9.5 / 10.

[ Read More ]

Days of Being Wild [1990] - அலைபாயும் வாழ்க்கை

    எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதையோ நினைத்து ஏங்கி கொண்டே இருக்கிறோம். யார் மீதோ அன்பு செலுத்தியே சாவடிக்கிறோம். யாருடைய அன்புக்கோ ஏங்கி ஏங்கி சாகிறோம்.நினைத்ததை செய்ய முடியாமலும் செய்ததை பொறுக்க முடியாமலும் நாட்களை கடத்தி கொண்டிருக்கிறோம்.இவை அத்தனையும் ஓயும் ஓர் கணத்தில் நாமும் மொத்தமாய் ஓய்ந்து போகிறோம்.


     Days of Being Wild - உலக புகழ் பெற்ற ஹாங்காங் இயக்குநர் Wong Kar Wai - ன் ஆரம்ப கால திரைப்படங்களுள் ஒன்று சரியாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது படம்.தெற்கு சீனாவில் பேசப்படும் கேண்டோனீஸ் (Cantonese) மொழியில் எடுக்க பட்டதாகும்.


    ” நல்ல படம் எடுக்க நல்ல கதை கிடைப்பதில்லை ” - அப்புடின்னு டகில் விடறவங்க எல்லாம் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.ஒரு நல்ல படம் எடுக்க ஒரு நல்ல கான்செப்ட் போதுமானது முன்னுரையில் தொடங்கி பொருளுரை எழுதி முடிவுரையில் முடிக்க படும் கதையல்ல என்ற கோட்பாட்டிற்கு சரியான உதாரணம் இந்த திரைப்படம்.



     மூன்று ஆண்கள் , மூன்று பெண்கள் மொத்தம் ஆறே ஆறு பேர் அவர்களுக்கு இடையிலான உறவுகள் , அதன் சிக்கல்கள் , ஏமாற்றங்கள் , காதல்கள் , துரோகங்கள் , எதிர்ப்பார்ப்புகள் மிகமுக்கியமாய் இவர்களின் தேடல்கள் இவைகளின் மொத்த கலைவையே   " Days of Being Wild ".


     1960  , ஏப்ரல் 16 , சரியாக அதிகாலை 2.59 முதல் 3.00 வரையிலான இந்த ஒரு நிமிடத்திற்க்கு மட்டும் நட்பாய் இருக்குமாறு ஸ்டேடியத்தில் வேலை பார்க்கும் பெண்ணான லி ஜின்னிடம் கேட்கிறான் யட்டி.அதை தொடர்ந்து தினமும் ஒரு நிமிடம் சந்திப்பதாக சொல்லி செல்கிறான்.அந்த ஒரு நிமிடம் பல மணிநேரங்களாக வளர்ந்து ஸ்டேடியத்தில் இருந்து படுக்கை அறை வரைக்கும் செல்கிறது.கல்யாணம் பற்றி அவள் பேச தொடங்கியவுடன் அவளிடம் சண்டை போடுகிறான்.அதன் பின் அவளை பார்ப்பதை நிறுத்தி கொள்கிறான்.முன்னாள் விபச்சாரியான யட்டியின் வளர்ப்பு தாய் அமெரிக்கா போவதாக அவனிடம் சொல்கிறாள்.தன்னுடைய பெற்றோர் பற்றி தெரியாதவரை அவள் எங்கும் போக கூடாதென கடுமையாய் சொல்லி விடுகிறான்.


        லி ஜின்னை கழட்டிவிட்டப்பின் கேப்ரே டான்ஸரான மிமியுடன் சுற்ற தொடங்குகிறான் யட்டி.முந்தைய உறவை போலவே படுக்கை வரை செல்கிறது.யட்டியை மறக்க முடியாத லி ஜின் அடிக்கடி அவனை பார்க்க வருகிறாள் ஆனால் அவன் ஒரு முறை கூட மதித்து பேசவே இல்லை.ஒரு முரை மிமிக்கும் லி ஜின்னுக்கும் சண்டை வந்து விடுகிறது அதனால் மனமுடைந்து செல்லும் லி ஜின்னுக்கும் அந்த ஏரியா போலீஸான டைட்க்கும் ஒரு நட்பு உருவாகிறது.டைட் கப்பல் மாலுமி ஆக ஆசைபட்டு தன் தந்தைக்காக போலிஸ் வேலையில் இருப்பதாக சொல்கிறான். யட்டியை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தவள் டைட் - ஐ பார்ப்பதற்காகவும் வர தொடங்குகிறாள்.தன்னுடன் பேச விரும்பினால் தெரு ஓரத்தில் இருக்கும் பொதுதொலைபேசிக்கு அழைக்குமாறு சொல்லி நம்பர் தருகிறான்.இதற்கிடையில் மிமியையும் கழட்டி விடுகிறான் யட்டி அதன்பின் தன் உண்மையான பெற்றோர் பிலிபைன்ஸில் இருப்பதாய் தெரிய வர அங்கே செல்கிறான்.யட்டி உண்மையான பெற்றோர்களை பார்த்தானா , லி ஜின் போ செய்தாளா , டைட் மாலுமி ஆனான என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,


      படத்தில் வரும்  எல்லா கதாபாத்திரங்களும் பிரிவையும் , ஏமாற்றத்தையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே நம் முன் காட்சியாக விரிகிறது.பல வசனங்கள் கவிதையாய் படம் முடிந்த பிறகும் ஞாபகத்தில் இருக்கின்றது.குறிப்பாக யட்டி அடிக்கடி கூறும் அந்த பறவை கதை.படத்தில் அழகான காட்சிகள் நிறையவே உண்டு.குறிப்பாக யட்டிக்கும் லி ஜின்னுக்கும் இடையேயான அந்த "ஒரு நிமிட நட்பு" காட்சி.இதுவரை எந்த தமிழ் படத்திலும் இந்த காட்சியை சுடாமல் இருப்பது ஆச்சர்யமே..,அந்த அழகான காட்சி கிழே ..,





     Wong Kar Wai - ன் படங்கள் அனைத்திலும் இருக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள் சுண்டி இழுக்கும் ஒளிப்பதிவு , கிறங்கடிக்க்கும் இசை , திரைக்கதையில் ஒரு சின்ன மேஜிக். Wong Kar Kai படங்கள் அனைத்தும் ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Christopher Doyle.இவர்கள் இருவரும் இணைந்த முதல் திரைப்படம் இதுவாகும் இதன் பின்னர் இவர்கள் இணைந்த படங்களை போல் வண்ணங்கள் வழியும் காட்சிகளாக இல்லாமல் படம் நெடுகிலும் உலர்ந்த நிறங்களே பயன்படுத்த பட்டு உள்ளது.கவர்ந்திழுக்கும் வண்ணங்கள் ஏதுமில்லாமல் வெறும் கேமராவை மட்டும் வைத்து கொண்டு கலக்கி இருப்பார்கள்.


         Wong Kar Wai - ன் திரைக்கதைகள் தனித்துவமானவை பெரும்பாலும் மனித மனங்களை காட்சி களங்களாய் கொண்டவை.மற்ற இயக்குனர்களை போல் இவர் படபிடிப்பு தொடங்குவதற்க்கு முன்னால் திரைக்கதையை எழுதி முடிப்பதில்லை சில காட்சிகள் எழுதியதுமே படப்பிடிப்பை தொடங்கிவிடுகிறார். அந்த காட்சியை எடுக்கும் போது கிடைக்கும் அனுபவங்களை கொண்டே மற்ற காட்சிகளை எழுதுகிறார்.சில சமயங்களில் கடைசி காட்சியை மட்டும் எழுதிவிட்டு படப்பிடிப்புக்கு போய் இருக்கிறார்.சில சமயங்களில் ஒரு படத்திற்க்காக எடுத்த காட்சிகளை வெட்டி இரண்டு படங்களாக மாற்றி இருக்கிறார்(Fallen Angels and  Chungking Express).

       இவர் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படங்கள் பார்த்து இருக்கிறேன் (இது தவிர Chungking Express மற்றும் In the Mood for Love ). இந்த மூன்று படங்களிலும் திரைக்கதையில் எதாவது ஒரு மேஜிக் இருக்கும்.In the Mood for Love படத்தில் எந்த ஒரு காட்சியும் எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என பார்வையாளனால் கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமாக காட்சியை கடத்தி போய் இருப்பார்.இரண்டு கதைகளை கொண்ட படமான chungking express-ல் ஒரு கதையில் இருந்து இன்னொரு கதைக்கு மாறுவது செம்ம்ம கியூட்டாக இருக்கும்.அதே போல் இந்த படத்திலும் ஒரு மேஜிக் உண்டு  அது படத்தின் கதையை யாராவது ஒரு கேரக்டர் வாய்ஸ் ஓவரில் சொல்ல தொடங்கும் அப்படியே அதன் போக்கிலேயே போய் வேறு யாடராவது அந்த கதையை முடிப்பார்கள்.

படத்தில் அறிவுரையோ , அழுகை காட்சிகளையோ எதிர்பார்க்காமல் பார்க்க தொடங்கினால் நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்.

Days of Being Wild : A film which make a place in your heart without any permission.
My rating : 9/10



[ Read More ]