Princess Mononoke [Japanese / 1997] - மனித போராசையின் இன்னொரு முகம்

          இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் ஊரிலோ அல்லது சுற்று வட்டாரத்திலோ இருந்த என்னவெல்லாம் காணமல் போய் இருக்கிறதென்று யோசித்தது உண்டா ?  ரோட்டை அகலப்படுத்துவதற்க்காக மரங்கள் , ஃப்ளாட் போட்டு விற்கப்பட்ட ஏரிகள் அல்லது குளங்கள் , வீடுகளாக மாறிவிட்ட வயல்வெளிகள் , மணலுக்காக சுறுங்கி போன ஆற்றுப்படுகைகள் , நகரத்தில் இருந்து காணாமல் போய்விட்ட சிட்டுகுருவிகள் இப்படி நீளும் அத்தனையும் மனிதனின் வசதிக்காக சட்டபூர்வமாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ செய்த இயற்க்கை சுரண்டல்களின் நிகழ்கால சாட்சியங்கள். இருபது வருடங்களில் மட்டும் இத்தனை என்றால் இரண்டாயிரம் வருடங்களில் நம் வசதிக்காக என்னவெல்லாம் செய்து இருப்போம். எத்தனை காடுகள் , எத்தனை பழங்குடியினர் , எத்தனை உயிர்கள் நம் வசதிக்காவும் தேவைக்காகவும் ஆசைக்காகவும் அழித்தொழித்துவிட்டோம் இன்னும் நாம் வாழும் காலம் வரை அழிக்கப்போகிறோம்..,


        உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய அனிமேஷன் பட இயக்குநர் Hayao Miyazaki - ன் முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்றாகும். ஒரு காட்டில் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட அங்கே இருக்கும் விலங்கு கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் சண்டை தான் படத்தின் மையக்கரு.  மனிதர்களை வில்லனாக காட்டிய படங்கள் வெகு குறைவு (E.T , Avatar , District 9) மனித பேராசையை காட்டுவதன் மூலம் இந்த  படமும் அந்த சின்ன பட்டியலில் தன்னை இணைத்து கொள்கிறது..,

     ஒரு அழகான காட்டிலுருந்து படம் துவங்குகிறது அமைதியாய் இருக்கும் காட்டில் ஏதோ ஒரு சலனம் தெரிய எல்லோரும் பயந்த படி பார்க்கின்றனர். காட்டில் இருந்து உடலெங்கும் நெளியும் பாம்புகளை கொண்ட விசித்திர மிருகம் வெளிப்பட்டு அந்த கிராமத்தையும் மக்களையும் தாக்குகிறது. அந்த கிராமத்தின் இளவரசன் அஷ்டகா அந்த மிருகத்துடன் சண்டையிட்டு அதை கொன்றுவிடுகிறான் ஆனால் அந்த மிருகத்தின் உடம்பில் இருந்த பாம்பு ஒன்று அவன் கையில் சிக்கி கொண்டு ஒரு அழியாத கருப்பு நிற தழும்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த தழும்பை சோதிக்கும் கிராமத்து கிழவி வந்த மிருகம் ஒரு சபிக்கப்பட்ட பன்றி கடவுள் என்றும் அதன் மூலம் ஏற்பட்ட தழும்பு பெரிதாகி இளவரசனை கொன்றுவிடும் என்றும் கூறுகிறார். இந்த சாபத்தில் இருந்து விடுப்பட மேற்கு நோக்கி பயணம் செய்து மான் கடவுளை சந்தித்தால் சாபம் நீங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

       அஷ்டகா நீண்ட தூரம் பயணம் செய்து லேடி எபோஷி  என்ற பெண் இரும்பு தொழிற்சாலை நடத்தும் மலைக்கு வந்தடைகிறார். அந்த தொழிற்சாலைக்கும் அங்கிருக்கும் மக்களுக்கும் அந்த மலையை சுற்றி உள்ள மிருகங்களால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். குறிப்பாக மோரோ எனப்படும் ஓநாய் கடவுளும் அதன் மகளாக சொல்லப்படும் Princess Mononoke என்று அழைக்கப்படும் ஷானும் தான் லேடி எபோஷியை கொலை செய்வதையே லட்சியமாய் கொண்டுள்ளனர். அதே சமயம் லேடி எபோஷி தன்னுடைய தொழிற்சாலையில் விபச்சாரிகளுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வேலை கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிறார். அதனால் அங்கு வேலை செய்யும் அனைவரும் அதிக விசுவாசத்தோடு இருக்கின்றனர். ஷான் அந்த தொழிற்சாலைக்குள் புகுந்து லேடி எபோஷியை கொலை செய்ய முயற்சி செய்கிறார் அப்போது அஷ்டகாவின் தழும்பு ஷானை காப்பாற்றுமாறு கட்டாயப்படுத்துகிறது. ஷானை காப்பாற்றும் முயற்சியில் அஷ்டகாவுக்கும் அவனுடைய குதிரை யக்ரூவுக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது.

       காயம்ப்பட்ட  அஷ்டகாவையும் குதிரையும் புனித குளத்திற்கு தூக்கி சென்று அங்கே மான் கடவுளிடம் பிராத்தனை செய்து  காப்பாற்றுகிறார் ஷான். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அஷ்டகாவுக்கும் ஷானுக்கும் ஒரு பிணைப்பு உண்டாகிறது. மான் கடவுளை கொலை செய்வதற்க்காக லேடி எபோஷி அரசப்படையுடன் இணைந்து காட்ட்டிற்க்குள் செல்கின்றனர் அதேசமயம் அரசப்படையினர் லேடி எபோஷி இல்லாத சமயத்தில் அவருடைய தொழிற்சாலையை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அஷ்டகாவின் சாபம் நீங்கியதா ? மான் கடவுள் கொல்லப்பட்டாரா ? லேடி எபோஷி தொழிற்சாலையை காப்பாற்றினாரா ? ஷானும் அஷ்டகாவும் இணைந்தார்களா என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,

    தொழிற்சாலையை காப்பாற்றுவதற்க்காக காட்டில் உள்ள அனைத்து உயிர்களையும் கொல்வதற்க்கும் யாரும் தயங்குவதில்லை கடவுளே ஆனாலும் இதே நிலைதான் மனிதர்கள் தாங்கள் விரும்பியதை செய்வதற்க்காக எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை உணர்த்துவதாக இந்த  காட்சிகள் இருக்கும். படம் வெறும் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமான சண்டையாக இல்லாமல் அனைவருமே தங்கள் இருப்பை காப்பாற்றுவதற்க்கான போராட்டமாகவே அனைத்தும் காட்டப்பட்டிருக்கும் குறிப்பாக லேடி எபோஷியின் கதாபாத்திரம் . லேடி எபோஷி தன்னுடைய தொழிற்சாலையை காப்பாற்ற கடவுளையே கொல்லவும் தயாராய் இருக்கிறார் ஆனால் விபச்சார விடுதிகளில் இருந்து பெண்களை காப்பாற்றி நல்வாழ்வளிக்கிறார் இப்படி முழுக்க நல்லவருமல்லாமல் கெட்டவ்ருமல்லாமல் சாதாரண மனித இயல்புகளோடு வருகிறார்.

       வண்ணங்கள் குழைத்து தீட்டப்பட்ட ஓவியங்களாய் கண்முன்னே காட்சிகள் அனைத்தும் விரிகின்றது. அஷ்டகா பயணம் மேற்கொள்ளும் காட்சி, மெல்ல மழை பொழிய தொடங்கும் காட்சி , தொடக்கத்தில் நெளியும் பாம்புகளோடு வரும் மிருகம் என  படத்தின் நிறைய காட்சிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன அவ்வளவு அழகு. இந்த கதையையும் கதாபாத்திரங்களையும் மொத்தமாக உருவாக்க இயக்குநர் மியசாகிக்கு 16 ஆண்டுகள் பிடித்ததாம். படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் கையால் வரையப்பட்ட பழைய வகை அனிமேஷன் ஆகும் எனவே ஒவ்வொரு ஃப்ரேமும் வரையப்பட வேண்டும். இந்த படத்துக்குகாக வரையப்பட்ட 1,44,000 ஃப்ரேம்களையும் தனிப்பட்ட முறையில் சரிபார்த்ததோடு 80,000 ஃப்ரேம்களை திரும்ப வரையவும் சொல்லிவிட்டாராம். அவர் எதிர்பார்த்த பெர்ஃபெக்ஷன் கிடைத்தப்பின்னர் தான் படத்தை வெளியிடவும் சம்மதித்தாராம்.

       இயக்குநர் மியசாகி தன்னுடைய படங்களில்  வெறும் பொழுதுபோக்கோடு ஏதேனும் நல்ல கருத்துக்களை சொல்ல விரும்புபவர். இதிலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதர்கள் இயற்கைக்கு எதிரி ஆகாமல் இரண்டும் இணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று கூறி இருக்கிறார்.மற்றைய படங்களை போலவே கருத்து திணிப்பாக இல்லாமல் கதையின் ஊடே சொல்ல நினைத்த கருத்துக்களை அழகாய் சொல்லி செல்கிறார்.

     மொத்ததில் இரண்டு மணிநேரம் தரமான பொழுதுபோக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்களுக்கு சரியான சாய்ஸ் இந்த படம்.

Princess Mononoke : A nice adventerous journey in the Land of Beauty.
My Rating : 8.5 / 10.

[ Read More ]