சந்தியாராகம் [தமிழ்/1989] - பாலு மகேந்திராவுடன் ஒரு நாள்


”யாரும் யாருக்கும் உயர்வுமில்லை தாழ்வுமில்லை அனைவருமே சமம்” இந்த வரியை நீங்கள் படிப்பது நிச்சயமாய் முதல்முறையாக இருக்காது அறிவுரையாகவோ பாடமாகவோ வாழ்வில் ஒரு முறையேனும் கேட்டு இருப்பீர்கள் ஆனால் வாழ்வில் எந்த ஒரு கணத்திலாவது இதை கடைப்பிடித்திருப்போமா என கேட்டால் இல்லை என்பதே நம் அனைவரின் பதிலாக இருக்கும்.  வயது, பணம், அறிவு ஆகிய சமூக மதிப்பீடுகளின் அடிப்படையில் நாம் அனைவரும் பிறரை எப்பவுமே நம்மை விட உயர்வாய் நினைக்க எல்லா தருணங்களிலும் தயாராக இருக்கிறோம் ஆனால் நம் தாத்தாக்கள் முக்கியமாக நினைத்த விஷயங்கள் நமக்கு முக்கியமானதாக இல்லை. சமூக மதிப்பீடுகளின் வடிவங்கள் மாறுகின்றன தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

சென்ற தலைமுறை வயதுக்கு கொடுத்த மரியாதைக்கும் இந்த தலைமுறை கொடுக்கும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசம் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அறுபது வயது வரை நல்ல வேலையில் உள்ள ஒருவருக்கு குடும்பத்திலோ வெளியிலோ கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் ஓய்வுக்கு பிறகும் கிடைக்கப்பெற்றால் அவர்களெல்லாம் நிச்சயமாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆனால் ஆசிர்வாதமோ அதிர்ஷ்டமோ அத்தனை சுலபமாய் கிடைப்பதில்லை. பணமே பிரதான இலக்காக கொண்ட சமூகம் பணம் ஈட்ட இயலாத வயதானவர்களை சுலபமாக தனிமைப்படுத்தி விடுகிறது அல்லது அருவெருப்புடன் சேர்த்துக்கொள்கிறது. தன் தாய் தந்தையரிடம் கூட பேச நேரமின்றி இயந்திர சக்கரத்தின் பல்முனை போல் நிற்க்காமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவதேயில்லை அவர்களுக்கும் வயதாகும் என்று..,  வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமை, தங்களுக்கான மதிப்பு குறைவதால் வரும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம் மற்றும் அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள் அந்த அழுத்தங்களின் தாக்கத்தால் ஏற்படும் உறவு சிக்கல்கள் என 80 வருட தமிழ்சினிமா சரித்திரத்தில் எந்தவொரு திரைப்படமும் தொட்டுப்பார்க்க துணியாத விஷயங்கள் அத்தனையையும் தொட்டு செல்கிறது பாலு மகேந்திராவின் “சந்தியாராகம்”.

கிராமத்தில் வாழ்ந்து வரும் 84 வயதான சொக்கலிங்கம் தன் மனைவி இறந்துவிட்ட காரணத்தால் சென்னையில் இருக்கும் தன் அண்ணன் மகன் வாசுவின் வீட்டிற்க்கு வருகிறார். வாசு அவருடைய கர்ப்பமான மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள மாதம் 20 தேதிக்கு பிறகு கடன் வாங்கி காலத்தை ஓட்டும் வழக்கமான மிடில் கிளாஸ் குடும்பம். வாசுவும் அவரது மனைவியும் சொக்கலிங்கத்தை நன்றாகவே கவனித்து கொள்கின்றனர் ஆனாலும் தவிர்க்க முடியாத ஒரு சமயத்தில் ஏற்படும் சிறு மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுகிறார். அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வாசுவின் மனைவி முயற்சித்து கொண்டே இருக்கிறார். கடைசியாக வந்தாரா இல்லையா என்பதை திரையில் காண்க ..,

சொக்கலிங்கமாக நடித்துள்ள சொக்கலிங்க பாகவதர் அவரது மருமகளாக நடித்துள்ள அர்ச்சனா இருவருமே கொஞ்சமும் கூட குறைய இல்லாமல் நடித்து இருக்கின்றனர். குறிப்பாய் சொக்கலிங்க பாகவதர் சின்ன சின்ன ரியாக்ஸன்களில் கூட அசத்துகிறார் பல இடங்களில் உங்கள் தாத்தாவை ஞாபக படுத்தலாம். இத்தனை சிறந்த நடிகரை பாலு மகேந்திராவை தவிர யாரும் பயன்படுத்தியதாய் தெரியவில்லை. கறுப்பு வெள்ளையிலும் கூட பாலு மகேந்திராவின் கேமரா ஆளுமை நிறைய இடங்களில் பளிச்சிடுகிறது. வழக்கமாய் தமிழ்சினிமாவில் வைக்காத பல ஷாட்கள் படத்தில் உள்ளது குறிப்பாக படம் முடியும் போது வைக்கப்படும் கடைசி ஷாட் .., சும்மா புகழ வேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை நிஜமாகவே அற்புதமான ஷாட். Tree of Life போன்ற படங்களில் இந்த மாதிரி ஷாட் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அந்த படங்கள் ஹாலிவூட் பட்ஜெட்டில் வண்ண கலவையோடு கொண்டு வந்த அழகியலை பத்து லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கறுப்பு வெள்ளையிலையே கொண்டு வந்துள்ளார். 


சில வருடங்களுக்கு முன்பு தமிழின் மிக முக்கியமான படங்கள் என்று விமர்சகர்களால் எடுத்தாளப்படும் படங்களை பார்க்கலாம் என சிறுப்பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருந்தேன். அந்த படங்களை டி.வி.டி-யாக வாங்கவோ இணையத்தில் தரவிறக்கவோ முயற்சி செய்த போது கடும் ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலன படங்கள் எந்த வடிவத்திலும் கிடைக்கவே இல்லை சரியாக சொல்ல வேண்டுமென்றால் கிடைப்பதற்க்கான வாய்ப்புகளே இல்லை. அப்படி இனி பார்க்கவே முடியாது என நினைத்திருந்த படங்களில் சந்தியா ராகமும் ஒன்றாம் ஆனால் பார்க்கவே முடியாது என நினைத்திருந்த இந்த படத்தை தமிழ் ஸ்டூடியோ குழுவினர் நடத்திய அரிய திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வில் தான் காண நேர்ந்தது அதுவும் சாதாரணமாக அல்ல படத்தின் இயக்குநர் திரு, பாலு மகேந்திரா அவர்களுடன் ஒரே அரங்த்தில்.., சில சமயங்களில் காத்திருப்பதற்க்கும் ஒரு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இந்த திரைப்படம் இணையத்திலோ பர்மா பஜாரிலோ கிடைக்கவில்லை. இந்த திரையிடல் கூட பாலு மகேந்திரா அவர்களின் தனி சேமிப்பில் இருந்த குறுந்தகடு மூலமாக தான் நடைப்பெற்றது.

படம் முடிந்த பின்னர் ஒரு சிறு கருத்து பரிமாற்றம் நடைபெற்றது அதன் பின்னர் பாலு மகேந்திரா பேசினார் எதிர்ப்பார்த்ததை விட இயல்பாகவும்  சமயங்களில் உணர்ச்சிகரமாகவும் பேசினார்.

வணிக நோக்கங்கள் ஏதுமில்லாமல் நல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழ் ஸ்டூடியோ குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ் ஸ்டூடியோவின் இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக்கவும்.

மொத்ததில், தமிழில் இப்படியும் ஒரு திரைப்படம் வந்து இருக்கிறதா என ஆச்சர்யப்படும் வகையில் இருக்கிறது சந்தியாராகம். எப்போதாவது தமிழின் சிறந்த படங்களை நான் பட்டியலிட நேர்ந்தால் சந்தியாராகமும் தவறாமல் முக்கிய இடத்தில் இருக்கும்.தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களில் இந்த படத்தை திரையிடுவதாக மேடையில் கூறினார்கள் அப்படி உங்கள் ஊரில் திரையிட்டால் தயங்காமல் குடும்பத்துடன் சென்று பாருங்கள்.

Post Comment


Follow Us in Facebook

9 Responses so far.

 1. கொடுத்து வச்ச ஆளுங்க நீங்க...
  கோவையில் திரையிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

 2. நல்லதொரு விமர்சனம் மட்டுமல்லாமல் நல்லதொரு திரைப்படத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அவசியம் பார்க்கிறேன்

 3. பாலுமகேந்திராவின் வீடு திரைப்படத்தில் சொக்கலிங்க பாகவதர் நன்றாக நடித்திருப்பார்...!அவர் பாலுமகேந்திரா படத்தை தவிர எந்தப்படத்திலும் பயன்படுத்தவில்லை என்கிற குறையும் எனக்கு உண்டு! நான் பாலுமகேந்திராவின் தீவிர ரசிகன்..கண்டிப்பாக இந்தியாவில் தமிழகத்தில் திரையிட்டால் பார்க்கிறேன் நண்பரே!

 4. ரொம்ப அருமையா எழுதி இருக்கேங்க ...வீடு படம் நான் பார்த்து இருக்கேன் ..அற்புதமான படம் .. “சந்தியாராகம்”. படம் பார்த்தது இல்லை...வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பார்கிறேன் ..

 5. அது எப்புடி நல்ல நல்ல படத்த எல்லாம் என்ன விட்டுட்டு போய் பாக்கறது.. அப்புறம் அத பத்தி பதிவு போட்டு கடுபெதறது.. இதே வேலைய போச்சுயா.. உங்களுக்கு படம் எவ்வளவு புடிசிருகுன்னு படிக்கும் போதே தெரியுது..

 6. திரையுலகின்
  புதுமைச் சித்தர்
  ஒளி ஓவியத்தை
  நிதர்சனமாக
  கண்முன்னே கொண்டு வந்தவர்..
  அன்றைய திரைப்பட சூத்திரங்களை
  அறுத்து எறிந்தவர்
  என்று பல காரணங்களால்
  பாலு மகேந்திரா அவர்கள்
  மனதில் நிலைத்து நின்றவர்...
  அருமையானதொரு கலைஞனின்
  காவியத்தை பதிவாக்கியமைக்கு
  நன்றிகள் பல...

 7. Dear anand
  very good review. i had earlier enjoyed sandhya ragam and came for the 2nd time enjoyment on that day. totally enthralled. i am a big fan of balu sir and on that day i want to share my thoughts on the film as a last person ( usually i will break the ice as first person or end the program with nice summary -- tamil studio friends knows this ) but on that day arun informed me because of balu sir's speech so i was not able to share.
  anyhow your review complimented that point.
  story written by smt. akila balu mahendra. postman cameo by director bala
  everybody should learn " how to write screenplay " ( + editing, direction and cinematography ) for a simple story from this moving movie. it is a definitely appreciative ( for learning ) film. genius like balu sir only knows how to handle natural light, how to frame a composition (shot) etc.,
  incidents like rs.50 borrowing ( upto that point bagavathar played a submissive act and while returning rs.50 to house owner the way he acts is like a bold and non-losing dignity -- oru gambheeramaga oru mithappudan-- body language, running for a seat in cycle rickshaw looking an oldman after "paandi" game, the kannada accent tamil speaking old man, 10rs. vadai and the following illness, about old age home subtlely inserted (in the dialogues where the movie is heading if you are shrewd ) while coming back after milk purchase, thatha and paethi walking backshots in sunlight waah sollikonde pogalam superb film. thanks for the 2nd chance to tamil studio.
  vikatan madan once told to hindu that " genius is arrived in indian cinema after he watched balu sir's 1st kannada movie kokila recommended by kamalhasan " i am still trying to find kokila. let me hope that too will happen one day.
  and about film archives balu sir's speech was worth rethinking for all film buffs and for those in the admin powers. thanks again for the review.
  would like to meet you. had i known to you i would have met you in the screening itself. thanks for widespreading a good review on the wonderful movie.
  anbudan
  sundar g chennai rasanai.

 8. @உலக சினிமா ரசிகன்
  ஆமா சார்.., பாப்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல

  @சிட்டுக்குருவி
  நன்றி தலைவா..,

  @வீடு சுரேஸ்குமார்
  கண்டிப்பா பாருங்க பாஸ்..,

  @ராஜ்
  வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாருங்க..,

 9. @Castro Karthi
  ஊருக்கு போனவங்களெல்லாம் கூட்டிட்டு போக முடியாது :)

  @மகேந்திரன்
  உஙக்ளுக்கும் நன்றிகள் பாஸ்..,

  @Sundar
  I would be pleasure if u shared some of ur thoughts on that Gr8 day..., As i mentioned in the posted i'm stunned with the last shot of the film. actually i never thought that it would end in that place.., People who are telling that they are taking some realistic cinema should see this film and atleast this film can give them some confidence about making film asbout something around as not a same old crappy love stories.., I'm glad to meet u.., u can connect to me anytime through my fb profile which right next to the post.., thanks a lot for such a valuable comment :)

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...