Gulaal [ ஹிந்தி ~ 2009 ] - இந்தியாவின் கறுப்பு பக்கங்கள்

        "Divide and Rule" - பிரித்தாளும் தந்திரம். இந்தியா மொத்தத்தையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்க்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரபலமான ராஜதந்திரமாக சரித்திர பக்கங்கள் சொல்கின்றன. சுதந்திரத்திற்க்கு பிறகு "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொல்லாடல் ரூபாய்களிலும் பாடபுத்தகத்திலும் எத்தனை அழுத்தமாய் சொல்ல முனைந்தாலும் ஏனோ மக்கள் மனதில் ஏறவிடாமலே கவனமாக கையாளப்படுகிறது.  சாதி, மதம், இனம், மொழி, பணம், தொழில் என  எண்ணற்ற காரணிகளை கொண்டு கோடிக்கணக்கான மக்களை மிகச்சிறு குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர் அல்லது பிரிக்கப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக வளத்தெடுக்கப்பட்ட இனப்பற்றையும் அடுத்த இனத்தின் மீதான வன்மைத்தையையும் கொஞ்சமாய் தூண்டிவிடுவதன் மூலமாக மட்டுமே எத்தனை கொடூரங்கள் நடத்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது.  வரலாறு முழுவதும் மனிதனுக்கு துணையாய் வந்திருப்பது ரத்த வாடையும் ரத்த வெறியும் தானோ. யாரோ ஒருவனின் அபிலாஷைக்காக யாரோ ஒருவனின் பேராசைக்காக  யாரோ ஒருவரனின் போதாமைக்காக யாரோ பேசிய உண்மைக்காக யாரோ பேச மறுத்த பொய்க்காக யாரோ ஒருவன் கொலை செய்யப்படுகிறான் யாரோ ஒருவன் குருடாக்க படுகிறான் யாரோ ஒருத்தி கற்பழிக்கப்படுகிறாள் யாரோ ஒருவன் கண்ணீர் சிந்துகிறான் யாரோ ஒருவன் புன்னகை பூக்கிறான். சுதந்திரத்துக்கு பிறகு வெள்ளையர்கள் போய்விட்டாலும் எப்படி காபியும் கால்சட்டையும் இங்கேயே தங்கியதோ அப்படியே தான் இந்த அரசியல் தந்திரமும் அப்படியே இருக்கிறது. ஆங்கிலேயர்களின் இடத்தை So-Called தலைவர்கள் எல்லாம் எடுத்து கொண்டு எவ்வளவு தூண்ட முடியுமோ தூண்டி எவ்வளவு பிரிக்க முடியுமோ பிரித்து வைத்திருக்கின்றனர். இப்படி உணர்ச்சியை தூண்டும் So-Called தலைவர்கள் சாதிய உணர்வு தூண்ட பெற்ற இளைஞர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்கின்றனர் என்பதை செவிட்டில் அறைந்த மாதிரி சொல்லும் படம் தான் அனுரக் கஷ்யாப்பின்  இயக்கத்தில் வெளிவந்த ‘Gulaal’.


    வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலான தமிழ்படங்களில் சாதி பெயர் கூட உபயோகப்படுத்தபடுவதில்லை. தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாத ஒருவர் தமிழ் திரைப்படங்களை மட்டும் பார்க்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் யாவரும் தங்கள் சாதிய அடையாளங்களை மறத்து சமத்துவமாக இருப்பதாக எண்ணிவிடும் வாய்ப்புகளே அதிகம். இந்த விஷயத்தில் நம் இயக்குநர்களை குறை சொல்வதற்க்கு ஏதுமில்லை அவர்களுக்கு இருக்கும் Creative Space அவ்வளவு தான். இந்தியில் மட்டும் இதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் அனுரக் கஷ்யாப்க்கு சொல்ல வந்ததை நேராகவே சொல்லும் தைரியம் இருக்கிறது. ராஜஸ்தானில் இருக்கும் முக்கிய சாதிகளுள் ஒன்றான ராஜபுத்திர இனத்தலைவர்கள் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் ஆயுதமாய் கொண்டு தங்கள் சுயலாபங்களுக்காக அரசியல் காய் நகர்த்தல்களுக்காக படித்த இளைஞர்களை கொலைகாரர்களாகவும் சூழ்ச்சி செய்பவர்களாகவும் கொலை செய்யப்படுபவர்களாகவும் சூழ்ச்சியில் சிக்குபவர்களாகவும்எப்படி மாற்றுகின்றனர் என்பதை எந்த சமரசமும் இன்றி படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

      ராஜ புத்திரர்களின் வீரத்தையும் இந்தியாவிற்க்காக அவர்கள் செய்த தியாகங்களையும் பற்றிய வசனங்களோடு தொடங்குகிறது படம். இத்தனை தியாகங்கள் செய்த ராஜபுத்திரர்களுக்கு "மன்னர் மானிய ஒழிப்பு முறை" சட்டத்தின் மூலம் இந்தியா துரோகம் செய்து விட்டதாகவும் அதற்க்காக தனி நாடு வேண்டி போராட்டத்திற்க்கு தயாராகுமாறு துகி பனா அழைப்பு விடுக்கிறார். <ஃப்ளாஷ்பேக்> இந்த கூட்டம் நடப்பதற்க்கு 11 மாதங்களுக்கு முன்னால் திலிப் சிங் அந்த ஊருக்கு வருகிறார். ஹாஸ்டல் கிடைக்காததால் தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும் ராஜ புத்திர இளவரசனான ரன்ஸாவுடன் தங்குகிறார். ஒரு முறை கல்லூரியில் மற்ற மாணவர்களால் அடித்து நிர்வாணமாக்கப்பட்டு பாத்ரூமில் வைத்து பூட்டுகின்றனர். அங்கே அந்த கல்லூரி பேராசிரியர் அனுஜாவும் நிர்வாணமாய் பூட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை அப்படியே விட்டு விடும் படி திலீப்பின் அண்ணன் சொன்னாலும் தட்டி கேட்க வேண்டும் என ரன்ஸா திலீபை மறுபடி கல்லூரிக்கு அழைத்து செல்ல மறுபடியும் தாக்கப்படுகின்றனர். இதற்கு பின்னால் லோக்கல் ராஜ புத்திர தலைவரான துகி பனாவின் உதவியோடு பிரச்சனை தீர்க்கப்படுகிறது.

        கல்லூரி தேர்தலில் ரன்ஸா நிற்கிறான் அவனுக்கு போட்டியாக அவனுடைய தந்தையின் அங்கிகரிக்கப்படாத மகளான கிரண் நிற்க்கிறார். தேர்தலில் வரும் பிரச்சனையில் கிரணின் அண்ணனால் ரன்ஸா கொலை செய்யப்படுகிறார். ரன்ஸாவின் இடத்தில் அவருடைய நண்பரான திலீப் தேர்தலில் போட்டியிட்டு பனாவின் ஆதரவோடு ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்து வெற்றி பெறுகிறார். தேர்தலில் தோல்வி அடைந்த கிரண் அண்ணனின் அறிவுரையின் பேரில் திலிப்புடன் நெருங்கி பழகுகிறார். இதற்க்கிடையில் கல்லூரி விரிவுரையாளர் அனுஜா திலிப்புடன் வந்து தங்கி கொள்கிறார். கிரணின் தூண்டுதலினால் பனாவை எதிர்க்க ஆரம்பிக்கிறார் திலிப் கல்லூரி விழாவுக்காக திரட்டிய பணத்தை ராஜபுத்திரர்களின் போரார்ட்டத்திற்க்கு தர மறுக்கிறார்.


       திலீப்புடன் இருந்த பழக்கத்தின் காரணமாக கிரண் கர்ப்பமாகிறார். கர்பத்தை கலைப்பதுடன் திலீப்பை பார்ப்பதையே சுத்தமாக தவிர்க்கிறார் கிரண். மனமுடைந்த திலீப் கல்லூரி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கிரண் அந்த பொறுப்பை ஏற்கிறார். கடைசியாக கிரணை திலீப் சந்திக்கும் போது அந்த பதவிக்காக தான் பழகியதாக சொல்லி திலீப்பை அனுப்பிவிடுகிறார். மறுபடி அண்ணனின் அறிவுரைப்படி பனாவுடன் கிரண் நெருக்கமாக திலீப் என்ன செய்தார்..,  அரசியல் ஆட்டத்தில் யார் தலையெல்லம் சாய்க்கப்பட்டது.., தனி நாடு போராட்டம் என்ன ஆனது.., என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,

        படத்தின் மிகப்பெரிய பலம் துகி பனவாக நடித்திருக்கும் கே.கே.மேனனின் நடிப்பு. உடல் மொழியிலும் வசன உச்சரிப்புகளிலும் மிக சரியா அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். கதைக்கு பெரிதாய் தொடர்பு இல்லாவிட்டாலும் படம் நெடுகிலும் துகி பனாவின் அண்ணனாக வந்து அவரின் செயல்களை கிண்டல் அடித்து பாட்டு பாடும் ப்யூஸ் மிஸ்ராவின் கதாப்பாத்திரம் முக்கியமானது. ப்யூஸ் மிஸ்ராவுடன் அர்த்தநாரீஸ்வரர் போல் உடலில் வண்ணமிட்டபடி ஒருவர் வருகிறார், ஜான் லென்னன், பாப் மார்லி படங்களெல்லாம் ப்யூஸ் மிஸ்ரா, ரன்ஸா ஆகிய வித்தியாசமானவர்களின் வீட்டில் இருப்பதெல்லாம் எதோ குறியீடு போல இருக்கிறது யாராவது குறியீடு சித்தர்கள் விளக்கினால் நலம்.
 
        படத்தின் இயக்குநர் அனுரக் கஷ்யாப் தமிழ் இணைய உலகில் பரவலாக அறிமுகமானவர். இந்திய இண்டிபென்டன்ட் சினிமாவின் முகமாகவே மாறி வருபவர் (ஃபேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல் இண்டிபென்டன்ட் சினிமாவை சுதந்திர திரைப்படம் என்று சொல்லலாமா ? ?). 2001 திரைக்கதை எழுத தொடங்கி பட்ஜெட் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளால் 2009-ல் தான் வெளிவந்தது. விமர்சகர்களால் புகழப்பட்டாலும் வழக்கம் போல் பாக்ஸ் ஆஃபிஸில் ஊத்தி கொண்டது. படம் என்னவோ ராஜஸ்தானையும் ராஜ புத்திரர்களையும் பற்றி இருந்தாலும் இதில் காட்டப்படும் சம்பவங்கள் எல்லா மாநிலங்களிலும் எல்லா சாதிகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

        
        மாணவர்களை மையமாக கொண்ட அரசியல் படங்கள் என்றாலே அவர்கள் ஆட்சியை ஃபேன்டஸி கனவுகளை படங்களையே பார்த்த நமக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தருகிறது. அதே போல் அரசியல் பிரச்சனைகளை இந்த அளவு சிறப்பாக கையாண்ட வேறொரு இந்திய படத்தை நான் பார்த்ததில்லை. நண்பர்கள் அனைவரும் தவற விடாமல் பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

Post Comment


Follow Us in Facebook

One Response so far.

  1. //கணிணி திரையில் காண்க//
    என்னா ஒரு தீர்க்க தரிசனம்.

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...