சென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு முன்னோட்டம்

                    வருகின்ற 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை எட்டு நாட்கள் சென்னையில் 10-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். 57 நாடுகளை சேர்ந்த 175 படங்கள் திரையிடப்பட இருக்கிறது என்றாலும் எவ்வளவு முயன்றாலும் இதில் பாதி படத்தை கூட பார்க்கமுடியாது அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 படம் வீதமாக 40 படங்கள் பார்க்கலாம் அதுவும் எட்டு நாட்களும் விடுப்பு எடுத்தால் மட்டுமே சாத்தியம்.

Ciff 2012 Poster

                சென்ற வருடம் தான் முதல்முறையாக பெரும் எதிர்ப்பார்ப்புடன் முதல்முறையாக திரைப்பட விழாவுக்கு சென்றேன் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். நான் பார்த்த படங்களுள் பாதி படங்கள் வெகு சுமாரான அல்லது மொக்கை படங்கள். வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான் பெரும்பாலான படங்களை பார்த்தேன் அங்கே பகலில் படம் பார்க்கும் போது நிறைய இடைஞ்சல்கள் இருந்தது. சராசரியாக 5 நிமிடத்திற்க்கு ஒரு முறை கதவு திறக்கப்பட்டு கொண்டே இருந்தது யாராவது வந்து கொண்டோ போய் கொண்டோ இருந்தார்கள் மாலை மற்றும் இரவு காட்சிகளில் இந்த பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை. சத்யம்,ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் அங்கு சீட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும். இவ்வளவு இருந்தாலும் ரொம்ப பிடித்த திரைப்படமொன்றை பெரிய திரையில் காணும் போது கிடைக்கிற அனுபவத்திற்க்காவே கலந்து கொள்ள வேண்டும். சென்ற வருடம் A Separation திரைப்படத்தை விழாவில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகள் இன்னமும் நினைவிருக்கிறது அப்படி ஒரு அனுபவத்தை எதிர்ப்பார்த்தே இவ்வருடமும் செல்கிறேன். சென்ற வருடத்தை விட இந்த வருட திரைப்பட பட்டியலில் பெயர் தெரிந்த பார்க்க விரும்பிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது அந்த படங்களுள் முக்கியமான படங்கள் சிலவற்றை பற்றிய சின்ன அறிமுகம்..,

Amour :

          தற்கால இயக்குநர்களுள் மிக முக்கியமானவரான Micheal Hanke-ன் சமீபத்திய திரைப்படம். உலகின் மிக பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சிறந்த திரைப்படத்திற்க்கான தங்கப்பனை விருதையும் பெற்று இருக்கிறது. இதுவே இந்த படத்தை பெரும்பாலன ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக மாற்றி இருக்கிறது.  Micheal Hanke-ன் முந்தைய படமான The White Ribbon படமும் தங்கப்பனை விருது பெற்றது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

Pieta :

           தமிழ் இணைய உலகில் மிக பிரபலான இயக்குநரான கிந்கி-டுக்கின் சமீபத்திய திரைப்படம். உலகம் முழுதும் நிறைய ரசிகர்கள் இருந்தாலும் பெரிய அளவில் அங்கிகாரம் எதுவும் கிடைக்காததால் பெரும்பாலும் சர்ச்சைகுரிய இயக்குநராய் மட்டுமே அடையாளப் படுத்தபட்டார். இப்போது முக்கியமான திரைப்பட விழாவான வெனிஸில் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதின் மூலம் மிக பெரிய அங்கிகாரத்தை பெற்றுள்ளார். இந்த விழாவில் நிறைய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதர்க்கான காரணம் இந்த விருதல்ல அவரின் பெயர் மட்டுமே.

CIFF 2012 Films


Not One Less :
               
           சீனாவின் அழகியலையும் கலாச்சார பின்னணியையும் கலந்து அற்புதமான படங்களை எடுக்கும் Zhang Yimou  1999-ல் எடுத்த படம். சீன அரசு 90-களில் கல்வியை கட்டாயமாகி மிக தீவிரமாக அமல் படுத்தியது ஆனாலும் கிராமப்புற பள்ளிகள் ஒற்றை ஆசிரியரை வைத்து கொண்டு மாண்வர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு மாதக்காலம் பயிற்சி ஆசியராய் வரும் 13 வயது பெண்ணின் கதை தான் படம். பார்ப்பவர்களின் ஆன்மாவை தொடும் அற்புதமான படம். இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

Holy Motors :

           ஒரு பத்து நாளைக்கு முன்பு வரை இப்படி ஒரு படம் வந்து இருப்பதே தெரியாது. பிரபலமான ஃப்ரஞ்ச் சினிமா பத்திரிக்கையான Cahiers Du Cinema இந்த படத்தை இந்த வருடத்தின் சிறந்த படமாக தேர்ந்தெடுத்ததும் ஒரு மாதிரி ஆர்வம் தொற்றிக்கொண்டது. த்ருபோ, கோதார் போன்ற ஃப்ரஞ்ச் புதிய அலையின் ஆளுமைகள் எல்லாம் இந்த பத்திரிக்கையில் தான் ஆரம்ப காலத்தில் விமர்சனம் எழுதி கொண்டிருந்தார்கள். படத்தின் டிரைலரை  படித்ததும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன். திரைப்பட விழாவில் தவறாமல் பாக்கனும் மிஸ் பண்ணுனா டவுன்லோடு தான் :).

Pather Panchali :

             இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் விதமாக இந்த விழாவிலும் சில முக்கியமான இந்திய படங்கள் திரையிடப்பட இருக்கிறது அதிலும் முக்கியமாக இந்தியாவின் ஆக சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படும் பதேர் பாஞ்சலி திரையிட இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏற்கனவே பார்த்து இருந்தாலும் திரையரங்கில் பார்க்க விருப்பமாக இருக்கிறது அதுவும் விடுமுறையன்று திரையிட இருப்பதால் கண்டிப்பாக பார்த்து விடுவேன் என்றே நினைக்கிறேன். மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான ஜி.அரவிந்தனின் “வசுந்தரா”-வும் திரையிட இருக்கிறார்கள்.
       
Like Someone in Love:

             பிரபலமான ஈரானிய இயக்குநர்  Abbas Kiarostami இயக்கி இருக்கும் ஜப்பானிய மொழி திரைப்படம். பெரிய அளவில் நல்ல விமர்சனங்களையோ பெரிய விருதுகளையோ வாங்கவில்லை என்றாலும்  Abbas Kiarostami-ன் பெயருக்காகவே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

              இவற்றுடன்  Melancholia ( இயக்கம் : Lars von Trier), Cosmopolis ( இயக்கம் :David Cronenberg ), Zorba the Greek, Departures  ( 2009 சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது), Antiviral, Beasts of the Southern Wild , Once Upon a Time in Anatolia  ஆகிய படங்களையும் தவறவிடாமல் பார்த்து விட விருப்பம். நண்பர்களுக்கும் தங்கள் அட்டவணையில் இந்த படங்களை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன்.  இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் நான்கு நாட்களுக்கான அட்டவணையில் இடம் பெறவில்லை ஆகையால் முக்கியமான படங்கள் யாவும் கடைசி நான்கு நாட்களில் தான் திரையிடுவார்கள்  என நினைக்கிறேன் அதனால் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே விடுப்பு எடுக்க முடிந்தவர்கள்  அடுத்த வாரத்தில் விடுப்பு எடுத்தால் நிறைய நல்ல படங்கள் பார்க்கலாம் :).

பின் இணைப்புகள்:

  •  விழாவில் திரையிட இருக்கும் மொத்த படங்களின் பட்டியலுக்கு இங்கே க்ளிக்கவும்.

  • முதல் நான்கு நாட்களுக்கான பட்டியலை இங்கே க்ளிக்கி பார்க்கலாம். 

  •  பெங்களூர் உலக திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் படங்களின் பட்டியலை காண நேர்ந்தது. சென்னை விழாவை விட ஏகப்பட்ட நல்ல படங்கள், பிரபலமான படங்கள் என்று அசத்துகின்றனர். இங்கே க்ளிக்கி அந்த பட்டியலை பார்த்து கொஞ்சமாய் பொறாமைப்பட்டு கொள்ளுங்கள்.


Post Comment


Follow Us in Facebook

2 Responses so far.

  1. நல்ல தகவல் + பரிந்துரை + ஆலோசனை

  2. Raja says:

    இந்த விழாவுக்கு எல்லோருக்கும் அனுமதி கிடைக்குமா???

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...