ஹாலிவூட்டிற்குள் அதிரடியாய் நுழையும் ஆசிய இயக்குநர்கள்..,

      எல்லா துறைகளை போலவே சினிமாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்பதெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகிலேயே அதிக வசூலான படங்களின் பட்டியலுக்கும் ஹாலிவுட்டில் அதிக வசூலான படங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது அந்த அளவிற்க்கு அவர்களின் களம் பெரிது. அதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ Ameros Perros - க்கு பிறகு Alejandro González Iñárritu , The Lives of Others - க்கு பிறகு Florian Henckel von Donnersmarck ,Pan's Labyrinth - க்கு பிறகு Guillermo del Toro என சமீப காலமாக உலக அளவில் தங்களை நிருபித்த இயக்குநர்கள் ஹாலிவூட் நோக்கி செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

      ஆசியாவில் இருந்தும் John Woo ,  Ang Lee போன்றவர்கள் சொந்த நாட்டில் சிறப்பான படங்களை எடுத்து தங்களை நிருபித்துவிட்டு 20-ம் நூற்றாண்டின் முடிவில் ஹாலிவூட் சென்று அங்கும் குறிப்பிடும்படியான வெற்றியும் பெற்றனர். Brokeback Mountain படத்திற்காக Ang Lee சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வாங்கியது நினைவிருக்கலாம். இப்போது அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கான காலம் போல ஆசியாவின் மிக முக்கியமான நான்கு இயக்குநர்கள் தற்போது ஹாலிவூட்டில் கால்பதிக்கிறார்கள் அந்த படங்கள் பற்றிய சிறிய அறிமுகங்கள்..,

The Flowers of War:

          Raise the Red Lantern , Not One Less , Road Home, TheThe Road Home , House of Flying Daggers உட்பட பல அற்புதமான படங்களை  எடுத்த Zhang Yimou-ன்  லேட்டஸ்ட் படம். இது ஒரு முழுமையான ஹாலிவூட் படம் கிடையாது சீனா மற்றும் ஹாலிவூட் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பு. நம்ம ஊரில் கூட இந்த மாதிரி கூட்டு தயாரிப்பு படங்கள் எடுப்பார்கள் ஆனால் அதில் நடிக்கும் ஆங்கில நடிகர்கள் பெயரை அமெரிக்காவில் இருப்பவர்கள் கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். இந்த படத்தில் அது போல் அல்லாமல் ஹாலிவூட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான Christian Bale நடித்து இருக்கிறார்.     
       இது இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களுள் ஒன்றான "Rape of Nanjing"  பற்றிய படமாகும். ஏற்கனவே வெளியாகிவிட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை :(. இந்த படம் குறித்த எஸ்.ரா வின் விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்..,

Stoker:

        ரொம்பவும் பிரபலமான கொரிய படமான Old Boy படத்தின் இயக்குநர் Park-Chan-wook ன் ஹாலிவூட் பிரவேசம் தான் இந்த படம். பொதுவா அமெரிக்கப்படங்களே துண்டு போட்டு உட்கார்ந்து இருக்கும் பிரபலமான IMDB-ன் சிறந்த 250 படங்கள் பட்டியல்ல 90 வது இடத்துல இருக்கும் அளவுக்கு Old Boy அமெரிக்காவுல ஃபேமஸ். Old boy படம் ஹாலிவூட்ல ரீமேக் செய்ய போறதா ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க முதல்ல ஸ்பீல்பெர்க் தயாரிக்க வில் ஸ்மித் நடிக்கிறதா சொன்னாங்க இப்போ ஸ்பைக் லீ டைரக்ஷன்ல வேற யாரோ நடிக்கிறதா சொல்லுறாங்க. சரி, அது எப்போ வேணாலும் வரட்டும் (ஒரிஜினல் பாத்தாச்சு அப்புறம் ஒரிஜனல் படத்துல இருந்த குரூரத்தை ஆங்கிலத்துல முழுசா கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்ன்னு நினைக்கிறேன்) இந்த படம் இந்த வருஷத்துக்குள்ள ரிலீஸாகிடும் போல இருக்கு.       Nicole Kidaman , Mia Wasikowska (Alice in Wonderland) போன்ற ஹாலிவூட்டின் முன்னணி நடிகைகள் நடிக்க Ridley Scott மற்றும் Tony Scott தயாரிக்கின்றனர். நீங்கள் Prison Break டி.வி. சீரிஸ் பார்த்ததுண்டா ? பிடிக்குமா ? ஆம் எனில் அதில் உடம்பெல்லாம் பச்சை குத்திய படி வரும் அதன் நாயகன் Micheal Scoldfield - யையும் பிடிக்குமல்லவா.., என்னடா சம்பந்தம் இல்லாம பேசுறான்னு பல்லை கடிப்பது தெரிகிறது ஆனால் சம்பந்தம் இருக்கிறது. Scoldfield - ஆக நடித்த Wentworth Miller தான் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார்.ஆக இந்த படத்தை எதிர்ப்பார்க்க மேலும் ஒரு காரணம் கிடைத்து விட்டது :)).

Last Stand:

              ஆக்சன்(A Bittersweet Life) , ஹாரர்(A Tale of Two Sisters) , காமெடி(The Good, the Bad, the Weird) , சைக்கோ(I saw the Devil) என சகல விதமான படங்களையும்  அருமையாக எடுத்து அசத்திய கொரிய இயக்குநர் Kim Ji-woon ஹாலிவூட்டில் களமிறங்கும் படம். டெர்மினேட்டர் - 3 க்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அர்னால்ட் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் ஆக்சன் பட ரசிகர்களிடம் இப்போதே ஒரு எதிர்ப்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. A Bittersweet Life படத்தில் வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எனக்கு ரொம்ப பிடித்த காட்சிகளுள் ஒன்று ரொம்பவும் ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கும். இதுவும் ஒரு ஆக்சன் படம் என்பதுடன் ஹாலிவூட் பட்ஜெட்டில் அதகளப்படுத்துவார் என்று நம்பியும் எதிர்ப்பார்க்கிறேன் (சொதப்பாமல் இருந்தா சரி).Snowpiercer:


           எனக்கு ரொம்ப பிடித்த சீரியல் கில்லர் படங்களுள் ஒன்றான "Memories of Murder" படத்தை இயக்கிய Bong Joon-ho-வின் முதல் ஆங்கில படமாகும். Le Transperceneige என்ற ஃப்ரன்ச்  நாவலை தழுவி எடுக்கப்படுகிறதாம் பனி சூழ்ந்த உலகத்தில் செல்லும் ரயிலில் நடைபெறும் கதையாம். கேப்டன் அமெரிக்காவாக நடித்த Chris Evans , ஆஸ்கர் வாங்கிய Octavia Spencer ஆகியோர் நடிக்கின்றனர். சென்ற மாதம் தான் படபிடிப்பு தொடங்கியுள்ளது அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.கொசுறு தகவல்கள் :
Akira Kurosawa , Francois truffaut போன்ற பெரிய பெரிய தலைகள் கூட ஹாலிவூட்டில் ஒரு படம் எடுத்து உள்ளனர்.

 Manoj N Shyamalan (SixthSense, Signs),  Jennifer Yuh Nelson(Kung fu Panda 2), Tarsem Singh(Immortals) போன்றவர்கள் ஆசியாவில் பிறந்து அமெரிக்க படிப்பு அல்லது வளர்ப்பு மூலம் ஹாலிவூட் இயக்குநர் ஆனவர்கள்.[ Read More ]

The Hunger Games [English/2012] - ஹாலிவுட்டின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் அல்லது... ???

        நம்மூரில் சென்சார் சான்றிதழ் குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொளவதில்லை பிட்டு படங்கள் ஓட்டும் தியேட்டர்களை தவிர.., வாலி , பாய்ஸ் , துள்ளுவதோ இளமை , மன்மதன் , 7/G ரெயின்போ காலனி என பல படங்கள் 'A' சான்றிதழ் வாங்கி இருந்தாலும் தியேட்டரில் உங்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகி விட்டதா என சரிபார்க்க யாருக்கும் நேரமில்லை விருப்பமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்த படங்கள் யாவும் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பானது அது குறித்தும் யாரும் சட்டை செய்வதில்லை. ஹாலிவுட்டில் கொஞ்சமேனும் இந்த தணிக்கை விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்வார்கள் போலும் அதனால் தான் பெரும்பாலான வணிக படங்கள் குறைந்தப்பட்சம் PG-13 ரேட்டிங்காவது வாங்க முட்டி மோதுகின்றன. அந்த வரிசையில்  R ரேட்டிங்காவது வாங்க வேண்டிய அளவுக்கு வன்முறை மிகுந்த நாவலை ஏதேதோ பல்டி அடித்து PG-13 படமாக்கி இருக்கும் படம் தான் The Hunger Games ..,


      பேனம் என்ற நாட்டில் வருடம் குறிப்பிடாத எதிர்காலத்தில் துவங்குகிறது படம். அந்த நாட்டில் உள்ள 12 மாவட்டங்கள் அரசாங்கத்தை எதிர்த்து புரட்சி செய்து தோற்று விடுகின்றன். அதனால் வருடத்திற்க்கு ஒரு முறை 12 முதல் 18 வரை வயதுடைய ஒரு ஆணையும் பெண்ணையும் விளையாட்டு போட்டிக்கு அனுப்ப வேண்டும். 12 மாவட்டங்களுக்கு ரெண்டு பேர் வீதம் 24 பேர் கலந்து கொள்ளும் அந்த விளையாட்டின் பெயர் தான் Hunger Games. விளையாட்டு என்றதும் எதோ ஓட்ட பந்தயமோ இல்ல லாங் ஜம்ப்போ என்று நினைத்து விட வேண்டாம்.  இந்த போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்ப்டும் 24 பேரும் ஒரு காட்டில் விடப்படுவார்கள் அவர்களுக்குள் சண்டையிட வேண்டும் சண்டை என்றால் சாதரணாமாக அல்ல சாகும் வரை சண்டையிட வேண்டும். கடைசியாக உயிருடன் இருக்கும் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

     12-ம் மாவட்டத்தில் 74-வது Hunger Games போட்டிக்கு அனுப்புவதற்க்கான ஜோடியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெறுகிறது. அதில் பெண்கள் பிரிவில் 12 வயதே ஆன Katniss Everdeen-ன் தங்கை தேர்ந்த்டுக்கப்படுகிறார் ஆனால் தன் தங்கையை காப்பாற்றும் பொருட்டு அவர் வாலண்டியராக  போட்டியில் பங்கேற்ப்பதாக சொல்லவும் அவரே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆண்கள் பிரிவில் Peeta Mellark என்ற இளைஞனும் நேர்தெடுக்கப்படுகிறார்.இவர்கள் இருவரோடு ஏற்கனவே ஒரு முறை இந்த போட்டியில் வெற்றி பெற்ற Haymitch உடன் கேப்பிடல் (The Capitol) நோக்கி பயணமாகின்றனர். வறுமை தாண்டவமாடும் District 12 போல் இல்லாமல் கேப்பிடல் ரொம்பவும் செல்வ செழிப்புடும் இருக்கிறது. அறிமுக அணிவகுப்பிலும் ஆரம்ப சுற்றுகளிலும் அனைவரையும் கவர்ந்து அதிக மதிப்பெண் பெறுகிறார் Katniss . அதன் பிறகு போட்டி தொடங்குகிறது ஒருவரை ஒருவர் கொல்கின்றனர் , சிலர் நட்பு பாராட்டுகின்றனர் , சிலர் துரோகம் செய்கின்றனர்,  Katniss-ம் Peeta - வும் காதலர்கள் என மீடியா சென்ஷேசனுக்காக சொல்லப்படுகிறது  அதுமட்டுமல்லாமல் அத்தனையும் டி.வி ல் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. Katniss-ம் Peeta - வும் உண்மையில் காதலிக்க தொடங்கினார்களா , ஒருவர் மட்டுமே உயிருடன் திரும்பும் வாய்ப்புள்ள போட்டியில் யார் வென்றார் போன்ற விஷயங்களை வெள்ளி திரையில் காண்க..,

       படத்தின் கதையை படிக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் நிறைய கொலை நடக்கும் படமென்று அதனால் ரத்த ஆறு ஓடும் என்று எதிர்ப்பார்த்து சென்றால் நிச்சயம் ஏப்ரல் ஃபூல் தான். "எத்தன பேர வேணும்னாலும் போட்டு தள்ளிக்கோ ஆனா PG 13 மட்டும் வாங்கிடுன்னு" டைரக்டர் கழுத்துல கத்தி வைச்சுடாங்க போல. நெத்தில ப்ளேடு கிழிப்பது , காலில் கல் குத்துவது போன்ற சம்பவங்களின் போது மட்டுமே சிவப்பு கலரில் ஒரு திரவம் காட்டப்படுகிறது மற்றபடி ஈட்டியால் நெஞ்சில் குத்துவது , வாளால் வெட்டுவது போன்ற காட்சிகளில் எல்லாம் ஸ்லோமோஷனில் விழுகிறார்கள் அதுவும் துளி ரத்தமில்லாமல். 5 பேர் கொலை செய்யப்படும் காட்சியில் கேமராவை மட்டுமே ஆட்டி கொலைவெறியை காட்டி இருக்கிறார்கள்.


       படம் பொருளாதார ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரைப்பட வரலாற்றிலேயே மூன்றாவது மிக பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. Harry Potter and the Deathly Hallows – Part 2  மற்றும் The Dark Knight மட்டுமே இதை விட பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளன. விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரே வாங்கி இருக்கிறது. ஓரளவுக்கு நம்பிக்கையான ரேட்டிங் தரும் Rotten Tomatoes தளத்தில் 85% ரேட்டிங் வாங்கி உள்ளது. இந்த இரண்டு மேட்டரிலும் இம்ப்ரஸ் ஆகி தான் வழக்கமாக சனிக்கிழமை 11 மணிக்கு எழுந்திருக்கும் வழக்கும் உள்ள நான் 6.45க்கே அலாரம் வைத்து எழுந்து 9 மணி ஷோவுக்கு 8.30 க்கே சத்யம் தியேட்டரில் தஞ்சம் புகுந்தேன்.

பதிவிற்க்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லையே நெற்றி சுறுக்குவது தெரிகிறது. தொடர்க.., :)
         இந்த பதிவின் இரண்டாம் பத்தியை படித்துக்கொண்டிருக்கும் போதே எங்கோ பார்த்த மாதிரியே இருக்கேன்னு உங்களுக்கு தோன்றி  இருந்தால் நீங்கள் ஏற்கனவே ஜப்பானிய படமான "Battle Royale" படத்தை பார்த்துவிட்டீர்கள் என்று அர்த்தம். என் சிற்றறிவுகு எட்டியவரை இரண்டு படங்களின் கதையும் ஒன்று போலவே தான் தெரிகிறது. அந்த ஜப்பானிய படத்தின் கதை என்னவென்றால்..,9-B வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களும் ராணுவத்தின் ஒரு ப்ராஜக்ட்டிற்காக தேர்ந்தெடுக்கப்ப்டுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு காட்டில் விடப்படுகின்றனர் அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்ய வேண்டும் கடைசியில் உயிரோடு இருக்கும் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். என்ன ஒரே மாதிரி இருக்கா ??


   படம் ஆரம்பித்து  20 நிமிஷத்துலையே "Battle Royale" போல் தான் இருக்க போகிறது என்று தெரிந்து விட்டது. இரண்டு படங்களுக்கும் உள்ள மிக முக்கயமான வித்தியாசம் வன்முறை தான். நான் முன்னரே கூறியது போல் The Hunger Games-ல் எப்படி ரத்ததையே காட்டவில்லையோ அதற்கு நேரெதிர் "Battle Royale" நம்ம சட்டை மேல கூட ரத்தம் தெரிச்சு இருக்குமோன்னு சந்தேகப்படும் அளவுக்கு வன்முறையாக இருக்கும். ஆனாலும் இரண்டு படங்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் ஒன்று தான் கிளைமேக்ஸ் கூட கிட்டதட்ட ஒன்று போலவே இருந்தது கடுப்பாக இருந்தது.இது பற்றி கேட்டால் Battle Royale -க்கும் இதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது , அந்த படம் வன்முறையை மட்டுமே காட்டியது ஆனால் Hunger Games-ல் போரின் கொடுரம் , வறுமை போன்ற விஷயங்களை காட்டி உள்ளதாக ஜல்லி அடிக்கின்றனர் The Hunger Games படக்குழுவினர்.

   என்னை பொருத்த வரை இது காப்பியாகவே படுகிறது , நீங்கள் இன்ஸ்பிரேஷன் என்றோ அல்லது உங்களுக்கு பிடித்த வேறு பெயரையோ இட்டுக்கொள்ளலாம். இப்படி சுட்டிகாட்டுவதின் நோக்கம் தமிழில் காப்பி அடிக்கும் உலக மகா நாயகர்களுக்கும் அதி மேதாவி இயக்குநர்களுக்கும் சொம்படிப்பதல்ல அங்கேயும் இப்படி செய்கிறார்கள் என சுட்டிக்காட்டுவது மட்டுமே யார் செய்தாலும் அறிவு திருட்டு குற்றமே.., ஹாலிவுட்காரர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனெவே அகிரா குராசேவாவின் பல படங்களையும் தொழில்நுட்பங்களையும் அவருக்கே தெரியாமல் சுட்டவர்கள் தான்.

   மொத்ததில் The Hunger Games படம் விறுவிறுப்பாக சொல்லப்பட்ட பொழுதுபோக்கு படம் தான். நீங்கள் "Battle Royale" பார்க்காமல் இருந்தால் நிச்சயம் ரசிக்க முடியும்..,

கொசுறு தகவல்கள் :

Battle Royale படத்தில் பிரபல் இயக்குநர் டகிஷோ கிடானோ (மிஷ்கின் புகழ்) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

PG 13 ரேட்டிங்  என்றால் 13 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.

R ரேட்டிங் என்றால்  17 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.

     
   
[ Read More ]