Moonrise Kingdom [English ~ 2012] - அற்புதத்தின் சாளரம்


          குழந்தைகள் மற்றும் குழந்தை பருவம் குறித்தான திரைப்படங்கள் பெரும்பாலும் அவர்கள் குறித்தான  பெரியவர்களின் பகற்கனவுகளாக தான் இருக்கிறது. குழந்தைகளை அதிக பிரசங்கிகளாக, காதலுக்கு புத்தி சொல்பவர்களாக அல்லது தூது செல்பவர்களாக, தேசிய கீதத்திற்க்கு எழுந்து நிற்ப்பவர்களாக, எதிர்ப்பாலினம் மேலான ஈர்ப்போ சந்தேகமோ இல்லாதவர்களாக என நமக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ நாம் என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கிறோமோ அதெல்லாம் எடுத்து குழந்தைகள் படம் என்கிறோம். குழந்தைகள் இதை தான் செய்வார்கள் என சௌகரியமாக முடிவெடுத்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் அப்படி தான் இருக்கிறார்களா என்ன அதுமட்டுமில்லாமல் குழந்தைதனம் என்று நீங்கள் நினைக்கும் அவர்களுக்கு சீரியஸான விஷயம் என்பதயும் யாரும் நினைப்பதில்லை. குழந்தைகளுக்கென ஒரு உலகம் இருக்கிறது இத்தனை ஆண்டு ஓட்டத்தில் நாம் மறந்துவிட்ட உலகம் அவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள கூடிய அவர்களால் மட்டுமே சிருஷ்டிக்க கூடிய அற்புத உலகம். எந்த கோட்பாடுகளும் தர்க்கங்களும் இல்லாமல்  அவர்கள் சொல்லும் கதைகள் மட்டுமே அவ்வுலகங்களின் சாளரங்களை நமக்கு திறக்கின்றன. அத்தகைய கதைகளை அந்த குழந்தைகளே சொல்வது போல் படமெடுப்பது சாத்தியமென்று இதற்க்கு முன்னால் நினைத்ததேயில்லை இந்த படத்தை பார்க்கும் வரை. பிரபல இயக்குநர் Wes Anderson இயக்கத்தில் வெளியான சமீபத்திய படமான "Moonrise Kingdom" குறித்து தான் சொல்லிகொண்டிருக்கிறேன்.

           1965-ம் ஆண்டு நியூ இங்லாந்தின் ஒரு பகுதியாக சொல்லப்படும் New Penzance தீவு ஒரு சூறாவளிக்காக காத்திருக்கிறது. 12 வயதான சாம் அவன் இருக்கும் சாரணர் இயக்கத்தில் இருந்து "ராஜினாமா" கடிதம் எழுதிவைத்து விட்டு தப்பித்து  போகிறான். அதே நேரத்தில் அந்த தீவில் வாழும் வழக்கறிஞரின் மகளான சூசியும் மிகப்பெரிய புத்தக பெட்டியுடன் தப்பித்து போகிறாள். போலிஸ் விசாரணையில் சாம் ஒரு அனாதை என்ற விஷயம் மறைக்கப்பட்டு சாரணர் இயக்கத்தில் சேர்த்திருப்பது தெரிய வருகிறது. சாமும் சூசியும் சந்தித்து கொள்கின்றனர் அவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பும் இருவரும் சேர்ந்தே திட்டம் போட்டு ஓடி வந்திருப்பதும் நமக்கு ஃப்ளாஷ்பேக்கில் தெரிகிறது. இருவரும் மூன்ரைஸ் கிங்டம் என்று அவர்கள் பெயர் வைத்த மலைகுகை ஒன்றில் சேர்ந்து வாழ முடிவெடுத்து காட்டுக்குள் பயணப்படுகின்றனர். போலீஸ் கேப்டன் ஷார்ப் (ப்ரூஸ் வில்லிஸ்) மற்றும் ஸ்கவுட் மாஸ்டர் (எட்வர்ட் நார்டன்) இருவரும் அளுக்கொரு புறம் தேட தொடங்குகின்றனர். அதன் பின்னால் நடக்கும் கூத்துக்களை எல்லாம் நீங்களே பார்த்து என்ஸாய் பண்ணுங்க..,

        படத்தின கதையை படிக்கும் போது பால்யத்தின்  வாயிலில் இருக்கும் மாணவர்களின் அகம் சார்ந்த பிரச்சனைகளை கூறும் படு சீரியஸான படமென்று நினைத்தால் நீங்க நவம்பர் ஃபூல் தான் :). படம் முழுவதும் குழந்தை தனம் நிரம்பி இருக்கிறது வெஸ் ஆண்டர்சன்னின் மேல் 12 வயது ஆவி பிடித்து கொண்டதோ என சந்தேகப்படும் அளவுக்கு படத்தின் எந்த முனையிலும் பெரிய மனுஷத்தனமே இல்லை. 12 வயது குழந்தைகள் கத்தியால் குத்தி கொள்வதையும் , உதட்டில் முத்தமிட்டு கொள்வதையும், திருமணம் செய்து கொள்வதையும் கூட மெல்லிய புன்னகையோடு ரசிக்க முடியுமளவுக்கு எடுத்திருக்கிறார். அந்த காட்சிகள் மட்டுமல்ல படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஒரு புன்னகை இல்லாமல் கடக்க முடியாது.

 
     படம் முழுவதும் மஞ்சள் நிறம் ஒரு கதாப்பாத்திரம் போலவே வருகிறது. அதுவும் அவர்கள் ஓடிப்போகும் காடு ஏதோ ஒரு கனவு பிரதேசம் போலவே இருக்கிறது. பிடித்த பெண்ணுடன் பிடித்த நிறங்கொண்ட பிரதேசத்தில் தொந்தரவுகளற்ற நீண்டதொரு பயணம் யாருக்கு தான் இப்படி ஒரு கனவு இல்லாமல் இருக்கும்.


      எட்வர்ட் நார்டன் , ப்ரூஸ் வில்லிஸ் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் உறவுகள் குறித்து அத்தனை ஆழமாக போகாமல் மேலோட்டமாகவே சொல்லி இருக்கிறார்கள் அதுவும் கூட திட்டமிட்டு செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. நாம் குழந்தைகளாக இருந்த போது நாம் பெரியவர்களை பற்றியோ அவர்களின் உறவு சிக்கல்களை பற்றியோ அத்தனை யோசித்தோமா என்ன ??.

        தொண்ணூறுகளின் இறுதியில் அறிமுகமான Christopher Nolan, Darren Aronofsky, Wes Anderson, Guy Ritche  போன்றவர்கள்  தொடர்ச்சியான சிறந்த படங்களின் மூலம் ஹாலிவூட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தனர். மூளையை திருகும் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை, நெஞ்சை உலுக்கும் காட்சிகள், கெட்ட வார்த்தைகள் மிகுந்த அட்டகாசமான வசனங்கள் என அடுத்தவர்கள் சென்று கொண்டிருக்க Wes Anderson ஒரு தனித்துவமான பாதையை தேர்ந்தெடுத்தார். ஆண்டர்சென்னின் படங்கள் ஹாலிவூட் அதிகம் விரும்பாத மனிதர்களின் (sometimes மிருகங்கள்)  அகத்தை மையமாய் கொண்டே எடுக்கப்படுகிறது.மிக பெரிய வசூல் சாதனைகளையோ பெரிய விருதுகளையோ வென்றதில்லை என்றாலும் விமர்சகர்களின் செல்லக் குழந்தையாகவும் சிறிய அளவில் என்றாலும் பலமான Fan Base-ம் இருக்கிறது அதற்க்கான காரணம் அவர் எந்த காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாத அந்த தனித்துவம் மட்டுமே.

    
        "Wes Anderson flirts with Surrealism" அப்படின்னு ஒரு தளத்தின் விமர்சனத்தில் எழுதி இருந்தார்கள். நான் இவ்வளவு நேரம் டைப் பண்ணிட்டு இருக்கிறத ஒரே லைன்ல அசால்ட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க :(. படம் ஒரு முழுமையான எதார்த்த தளத்திலும் இல்லாமல் சர்ரியலிஸ தன்மையிலும் இல்லாமலும் இரண்டுக்கும் இடையிலான நூலிழையில் மொத்த படத்தையும் எடுத்து சென்று இருக்கிறார். ஆண்டர்சன் தன்னுடைய முந்தைய படங்களில் கூட இத்தகயை தன்மைகளை பயன்படுத்தி இருந்தாலும் இதில் அசால்ட்டாக அதன் உச்சத்தை தொட்டிருக்கிறார். நிச்சயமாக இந்த வருடத்தின் மிக சிறந்த படங்களுள் ஒன்றாக சொல்லலாம்.

       குழந்தைகளை விரும்புவர்களுக்கு, பயணங்களை நேசிப்பவர்களுக்கு, மஞ்சளை காதலிப்பவர்களுக்கு மற்றும் இந்த வரிசையில் வராதவர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

எக்ஸ்ட்ரா பிட்டு :
       12 வயது பையனுக்கும் நீண்ட காலமாக 12 வயதாகும் Vampire பொண்ணுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் ஸ்வீடன் நாட்டு படமான "Let the Right One In" திரைப்படத்தையும் அப்ப்டியே சேர்த்து பார்த்து விடுங்கள். ரத்தமும், காதலும், குழந்தைத்தனமும் கலந்து எடுக்கப்பட்ட அற்புதமான படம். Twilight Series போன்ற மொக்கையான Vampire படங்களை நினைத்து கொண்டு ஒதுக்கிடாதீங்க இது செமையா இருக்கும்.

[ Read More ]