OSCAR - Best Picture : சில அலசல்களும் யூகங்களும்

           இந்தியாவில் தரப்படும் திரைப்பட விருதுகள் அளவுக்கு ஆஸ்கர் விருதுகள் இங்கு புகழ் பெற்று உள்ளது.கமலஹாசனோ மணிரத்னமோ இதோ வாங்க போகிறார் அதோ வாங்க போகிறார் என்று நமது பத்திரிக்கைகள் மாறி மாறி கொடுத்த பில்டப்போ அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதோ காரணமாக இருக்கலாம்.நம்மூரில் இத்தனை பிரபலமாக இருக்கும் ஆஸ்கர் பரிசை வென்ற திரைப்படங்கள் சென்னை தவிர வேறு எங்கும் ரிலீஸானதாக தெரியவில்லை ( Titanic போன்ற சில விதிவிலக்குகள் தவிர) நிச்சயமாய் இது ஒரு Irony.


       ஆரம்பத்தில் சிறந்த படத்திற்க்கான விருதிற்க்காக 5 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு விழா அன்று சிறந்த படம் தேர்ந்தெடுக்கப்படும்.2009-ல் இந்த விதி மாற்றப்பட்டு 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வருடம் 5 முதல் 10 படம் வரை பரிந்துரைக்கலாம் என்று இந்த விதி மறுபடியும் மாற்றப்பட்டுள்ளது.சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆறாயிரத்து சொச்ச உறுப்பினர்களை கொண்ட Academy of Motion Picture Arts and Sciences(ஆஸ்கர் குடுக்குறதே இவுங்க தான்) அமைப்பில் குறைந்தது 5 சதவீத உறுப்பினர்களால் ஓட்டளிக்கப்படும் படங்களே விருதுக்காக பரிந்துரைக்கப்படும்.

  இந்த வருடம் புதிய விதியின் காரணமாக விருதுக்கு The Artist, The Descendants, Extremely Loud & Incredibly Close, The Help, Hugo, Midnight in Paris, Moneyball, The Tree of Life, War Horse ஆகிய 9 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இந்த 9 படங்களில் Hugo மட்டும் பார்க்கவில்லை ஆகவே அது தவிர மற்ற 8 படங்களை பற்றி சிறு அலசலை கீழே பார்க்கலாம்,The Artist :
                             
           என்னை பொறுத்த வரை ஆஸ்கர் பரிந்துரையில் உள்ள படங்களுள் சிறந்த படம் இது தான்.போன பதிவிலேயே இந்த படம் பத்தி  ஓரளவுக்கு அலசிவிட்டதால் இப்போதும் உங்களை இம்சிக்க விரும்பவில்லை.சிறந்த படத்திற்க்கான விருது வாங்குவதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.சிறந்த படம் தவிர்த்து  இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த Jean Dujardin-க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைப்பதற்க்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.இவர் ஏற்கனவே Cannes , Golden Globe (Musical / Comedy) , BAFTA போன்ற முக்கிய விருதுகளை வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.என்னுடைய The Artist விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்.

The Descendants :

        வேலை தான் எல்லாமே என்று இருக்கும் க்ளூனியின் மனைவிக்கு ஏற்படும் விபத்தினால் மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கிறார்.தன் மனைவிக்கு ஒரு காதலன் இருப்பதாய் அறிந்து அவரை தேடுகிறார் க்ளூனி. அதே வேளையில் அவருடைய பரம்பரை சொத்தை விற்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு வருகிறது.இதற்கிடையில் பாசம் இல்லாமல் இருக்கும் தன் குடும்பத்தை எப்படி பிணைப்பை ஏற்படுத்துகிறார் என்பதே கதை.மொத்த படத்தியும் தன் நடிப்பினால் தூக்கி நிறுத்துகிறார் க்ளூனி உண்மையிலையே செம ஆக்டிங்.இவருக்கும் சிறந்த நடிகர் விருது பெறுவதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. என்ன தான் கோல்டன் க்ளோப் விருதை வென்றாலும் இந்த படத்திற்க்கு சிறந்த படத்திற்க்கான விருது கிடைப்பதற்க்கான வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான் என தோன்றுகிறது.ஆனால் Adapted Screenplay பிரிவில் விருது வாங்க அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது.அமெரிக்க குடும்பங்களை பற்றிய அருமையான படம் தவறாமல் பாருங்கள்.

Extremely Loud & Incredibly Close :

         9/11 விபத்தை பற்றி எடுக்கப்பட்டுள்ள மற்றொரு படம் என்பது தான் இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை பட்டியலில் வந்தற்க்கான முக்கிய தகுதியாக படுகிறது.9/11 விபத்தில் இறந்து போகும் Tom Hanks- ஐ பற்றிய நினைவுகளோடு  படம் தொடங்குகிறது.அவர் ஒரு சாவியை மறைத்து வைத்து விட்டு இறந்து போகிறார்  அதற்க்கான பூட்டை தேடி கண்டுபிடிக்கிறார் அவருடைய மகன் ஆஸ்கர்.ஆஸ்கர் பூட்டை தேடி வகைவகையான மனிதர்களை சந்திப்பதும் அவருக்கும் அந்த வாய் திறந்து பேசாமல் எல்லாவற்றையும் எழுதிக்காட்டும் தாத்தாவுக்கும் ஏற்படும் நட்பும் அழகாக பதிவு செய்யபட்டுள்ளது.சில அருமையான காட்சிகளும் பல மொக்கையான காட்சிகளின் கலவையாய் இருக்கிறது படம்.விருது வாங்கும் வாய்ப்பெல்லாம் இல்லை என்று நினைக்கிறேன். தவற விடக்கூடாத படமெல்லாம் இல்லை நேரம் இருப்பின் பார்க்கவும்.The Help : 

        ஆஸ்கர் கமிட்டியில் இருப்பவர்கள் தங்களை Secularist-ஆக காட்டிக்கொள்ள கறுப்பர்களை பற்றிய படம் ஒன்றை பரிந்துரை பட்டியலில் சேர்த்து விடுவார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. இந்த படம் அப்படி தான் கோட்டாவில் வந்திருக்கும் என்று நானாக முடிவு செய்து கொண்டு ரொம்ப நாள் டவுன்லோட் பண்ணி பார்க்காமல் இருந்தேன் அது எவ்வளவு பெரிய தப்புன்னு படம் பாக்கும் போது தான் தெரிஞ்சது.

         1960-களில் மிசிசியில் ஜாக்ஸன் நகரத்தில் உள்ளவெள்ளைக்காரர்களின் வீட்டு வேலைப்பார்க்கும் கறுப்பின பெண்களை பற்றிய படம்.அப்போது சம உரிமை பற்றி பேசுவது கூட சட்டப்படி குற்றமாகும் அந்த காலகட்டதில் அவர்களின் வாழ்க்கை நிலை , ஊதியம் பற்றி ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு நாவல் எழுதுகிறார். அந்த கதைகளும் நாவலினால் ஏற்படும் விளைவுகளும் தான் படத்தின் கதை. ஏராளமான ஹாலிவூட் க்ளேஷேக்கள் நிறைந்த படம் தான் என்றாலும் நிறைய அருமையான காட்சிகளின் மூலமாய் மனதை தொடுகிறார்கள்.அனைவருமே பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள்.சிறந்த படத்திற்க்கான விருது வாங்குவது கடினம் தான் என்றாலும் சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருதுகள் வாங்குவதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.நிச்சயமாய் உங்கள் மனதை தொடக்கூடிய படம் தவறாமல் பாருங்கள்.

Midnight in Paris :

           Woody Allen-ன் லேட்டஸ்ட் படம்.மனுஷனால் எப்படி முப்பது நாப்பது வருஷமா வருஷத்துக்கும் ஒரு படம்ன்னு எடுத்தாலும் நல்ல படமாவே எடுக்க முடியுதோ. ஹாலிவூட் திரைக்கதை ஆசிரியரான ஓவன் வில்சன் வருங்கால மனைவின் குடும்பத்தோடு பாரிஸ் போகிறார் ஆனால் அங்கு அவர்கள் செல்லும் பார்ட்டிகளில் ஒன்றமுடியாமல் சுற்றுகிறார். ஒரு விசித்திரமான வண்டியின் மூலம் 1920-களுக்கு போகிறார் அங்கு Ernest Hemingway , F. Scott Fitzgerald ,Pablo Picasso ,Salvador Dalí, Man Ray, Luis Buñuel என்று பல கலை இலக்கிய ஜாம்பவான்களை சந்திக்கிறார் அதனால் வரும் விளைவுகளே கதை.ஓவன் வில்சன் சின்ன வயது வூட்டி போலவே இன்டெலக்டுவலாக பேசுவது ரசிக்கும்ப்படி உள்ளது. சிறந்த படத்திற்க்கான விருது வாங்குவது கடினம் தான் என்றாலும் சிறந்த திரைக்கதைக்கான விருது வாங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே படுகிறது.

Moneyball :

        குறைந்த பட்ஜெட்டில் ஒரு வெற்றிகரமான பேஸ்பால் டீமை ஸ்டார் வீரர்கள் இல்லாமல் ஒரு புதுமையான முறையில் உருவாக்கிய பில்லி பேனின் வாழ்வில் நடந்த உண்மை சம்ந்ததை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படம்.தோல்விக்கு பின் மீண்டு வரும் சின்ன டீம் என்ற வழக்கமான ஸ்போர்ட்ஸ் படத்துக்கான கதை தான் எனினும் எடுத்த விதத்தில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்கள்.பிராட் பிட் சிறப்பாக ந்டித்துள்ளார்.சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார் எனினும் விருது கிடைப்பது கடினம் தான்.ஆகா ஓகோ படமும் ஆல்ல மொக்கை படமும் அல்ல நல்ல படம் அவ்வளவு தான்.

 ( Tree of Life - ஒளிப்பதிவு என்னமா இருக்கு பாத்திங்களா )

Tree of Life :

        வணிக நோக்கத்திற்க்காக எந்த சமரசமும் செய்யாமல் திரைப்படங்களை எப்போதும் ஒரு கலைப்படைப்பாகவே எடுப்பவரான Terrence Malik-ன் படம்.குப்ரிக்கின் 2001 படத்துக்கு இணையாக சில விமர்சகர்களால் புகழப்படும் படம். குறிப்பாக 2001-ல் வரும் குரங்கிலிருந்து நவீன இயந்திரங்கள் வரும் வரை பரிணாம வளர்ச்சியை காட்டும் காட்சியோடு இந்த படத்தில் பெருவெடிப்பில் பிரபஞ்சம் தொடங்கியதில் இருந்து பிராட் பிட்டின் மகன் பிறக்கும் வரை வரும் காட்சிகளோடு ஓப்பிடமுடியும்.படத்தில தனியாக கதையெல்லாம் இல்லை இறந்து போன பையனை பற்றி அம்மா மற்றும் இன்னொரு மகனின் நினைவுகள் தான் படம்.

      அப்பா கதாபாத்திரத்தில் பிராட் பிட் சிறப்பாக நடித்து இருப்பார் அட்லீஸ்ட் சிறந்த நடிகருக்குக்கான பரிந்துரையாவது கிடைத்து இருக்க வேண்டும் ஆனால் கிடைக்கவில்லை (இவர் தான் Moneyball-க்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்).ஏனோ என்னால் இதை ஒரு அற்புதமான படைப்பாக உணர முடியவில்லை நிச்சயம் இன்னொரு முறை பார்க்க வேண்டும் அதற்கு அப்புறம் என்னளவில் காவிய படைப்பாகலாம் அல்லது சாதாரண படமாகலாம் அல்லது அப்பவும் இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரியலாம்.சிறந்த படத்திற்க்கான விருது கிடைப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.அது கிடைக்கிறதோ இல்லையோ சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது நிச்சயம்(மேல போட்டு இருக்குற படத்தை பாத்திங்கள்ல).

War Horse :

           ஸ்பீல் பெர்க்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்.படம் வருவதற்க்கு முன்னரே ஆஸ்கர் வாங்கும் என்று சொல்லும் அளவுக்கு அதற்க்காகவே எடுத்த படம்.முதல் உலகப்போர் நடக்கும் சமயத்தில் பாசமாக இருக்கும் குதிரையும் ஹீரோவும் பிரிகிறார்கள் பிறகு எப்படி சேர்கிறார்கள் எனபதே கதை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படத்தில் நிறைய செயர்க்கையான சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து இருந்தது மற்றும் ரொம்ப சுமாராக இருந்ததாக உணர்தேன். எனக்கு பிடிக்கவில்லையே தவிர சிலருக்கு பிடித்து இருந்தது விருப்பம் இருந்தால் பாருங்கள்.


      War Horse , Extremely Loud & Incredibly Close போன்ற வெகு சுமாரான படங்களுக்கு பதிலாக Drive , The Warrior ,Tinker Tailor Soldier Spy போன்ற நல்ல படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தால் முழுமையான லிஸ்டாக இருந்திருக்கும். மொத்ததில் The Artist , Hugo & Tree of Life ஆகிய மூன்று படங்களில் ஏதோ ஒன்று தான் சிறந்த படத்துக்கான விருதை வாங்கும் என்று தெரிகிறது. என்னுடைய விருப்ப தேர்வு முன்னர் சொன்னது போல் The Artist தான். அமெரிக்க நேரப்படி ஞாயிற்று கிழமை மாலையும் இந்திய நேரப்படி திங்கட்கிழமை விடியற்காலையும் முடிவுகள் தெரிந்து விடும் பார்க்கலாம் எந்த படம் வாங்குகறது என்று.

      என்னை பெரிய பதிவு எழுத சொன்ன Castro கார்த்திக்கும் கொழந்த கணேஷுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் :).
[ Read More ]

The Artist [2011] - கலப்படமற்ற சினிமாவின் மொழி

"The Artist was made as a love letter to cinema"
                                                                        - Michel Hazanavicius 

             117 வருடங்களுக்கு முன்பு லூயி லூமியும் அகஸ்தா லூமியும் பாரிஸில் முதல் முறையாக அசையும் படத்தை திரையிட்டு காட்டிய போது ஏற்படுத்திய வியப்பில் முழுமையாக இல்லை என்றாலும் ஒரு குறிப்பிடும்படியான அளவையேனும் இன்றும் ஏற்படுத்துவது தான் சினிமா.இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சினிமா காலாவதி ஆகாமல் இருப்பதற்க்கான பெருங்காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அன்று அசைய தொடங்கிய சினிமா பின்னர் கதை சொல்ல தொடங்கியது,பேச தொடங்கியது, வண்ணமாகியது இன்னும் பல மாயங்கள் புரிய தொடங்கியது.இந்த பரிமாண வளர்ச்சியில் மௌன திரைப்படங்கள் வேறொரு காலத்தின் கலாச்சார பதிவுகளாகவும் , கலை பொக்கிஷங்களாகவும் எஞ்சி நிற்கின்றன.


          நீங்கள் Charlie Chaplin-யும் Buster  Keaton-யும் உங்கள் கணிணி திரையிலோ டி.வி.யிலோ பார்த்து இருக்கலாம் சிரித்தும் ரசித்தும் கூட இருக்கலாம் ஆனால் அன்றைய மக்களிடம் அது ஏற்படுத்திய உணர்வுகளை உங்களால் அனுபவிக்கவே முடியாது.ஜாலியன் வாலா பாக்கில் வெடித்த துப்பாக்கியை இன்று மியூசியத்தில் பார்ப்பவனுக்கும் அன்று வெடிக்கும் போது பார்த்தவனுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்.இப்படி கால சக்கரத்தில் பின்னால் சென்றால் மட்டுமே நிகழ கூடிய அதிசியத்தை நிகழ்காலத்திலேயே நடத்தி காட்டும் ஒரு முக்கியமான முயற்சி தான் "The Artist".

        1927 , மௌன பட சூப்பர் ஸ்டாரான ஜார்ஜ் வாலண்டின் அவருடைய ஒரு படத்தின் ப்ரீமியர் காட்சியை முடித்து விட்டு வரும் போது ஒரு ரசிகையால் முத்தமிடப்படுகிறார். அது  "Who's That Girl ?" என்ற தலைப்போடு முதல் பக்க செய்தியாகிறது.மறுநாள் அந்த ரசிகை சினிமா வாய்ப்பு தேடி வருகிறார் ஒரு சிறு வாய்ப்பு கிடைக்கிறது அப்போதுஅவர் பெயர் பெப்பி மில்லர் என்று தெரிய வருகிறது.அப்போது ஜார்ஜை மறுபடி சந்திக்கிறார் அவர்களுக்கு இடையில் ஒரு நட்பு உண்டாகிறது.பெப்பி மில்லர் கொஞ்சம் கொஞ்சமாக திரை உலகில் முன்னேறி கொண்டு இருக்கிறார்.


      1929,சினிமா பேச தொடங்குகிறது ஆதலால் இதுவரை ஜார்ஜை வைத்து படமெடுத்து கொண்டிருந்த ஸ்டூடியோ மௌன படங்களை இனி தயாரிக்க போவதில்லை  என அறிவிக்கிறது.கோபமடைந்த ஜார்ஜ் சொந்தமாக ஒரு மௌன படம் தயாரிக்கிறார் அதே நேரத்தில் ஸ்டூடியோ பெப்பியை கதாநாயகியாக போட்டு பேசும் படம் ஒன்றை தயாரிக்கிறது.இரண்டும் ஒரே நாளில் ரிலீசாகிறது.பெப்பியின் பேசும் படம் பெரும் வெற்றி பெற ஜார்ஜின் மௌனப்படம் படுதோல்வி அடைகிறது.அதே நேரத்தில் வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தை கடும் பின்னடைவை சந்திப்பதால் மொத்தமாக திவாலாகிறார் ஜார்ஜ்.       ஜார்ஜின் நிலைமை மேலும் மோசமாகி கொண்டே போகிறது. மனைவி பிரிகிறார் , சொத்துக்கள் அனைத்தும் ஏலத்தில் போகிறது , விசுவாசமான டிரைவரை சம்பளம் கொடுக்க முடியாமல் நிறுத்துகிறார் , ஒரு தீ விபத்தில் சிக்கி மயிரிழையில் தன் நாயின் உதவியால் உயிர் தப்புகிறார்.அதற்கு நேர்மாறாக தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து ஹாலிவுட்டின் உச்ச நட்சதிரமாகிறார் பெப்பி.இருவரும் சந்திதார்களா , ஜார்ஜ் மீண்டும் உச்சத்தை அடைந்தாரா என்பதையெல்லாம் வெள்ளி திரையிலோ கணிணி திரையிலோ காண்க..,
   
         கதையை படிக்கும் போது வெகுசாதாரணமான படம் போல தோன்றலாம் ஆனால் எடுக்கப்பட்ட விதம் அசாத்தியமானது.முழுபடத்தையும் மௌன படமாக எடுத்தோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் இருந்த டெக்னிக்கல் விஷ்யங்களும் (4:3 Aspect ratio , 22fps etc..,) பயன்ப்டுத்த பட்டு உள்ளது.தான் பெரிதும் மதிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு Homage-ஆக இந்த படத்தை இயக்கி உள்ளதாக இயக்குநர் Michel Hazanavicius கூறியுள்ளார்.ஜார்ஜாக நடித்துள்ள Jean Dujardin -க்கு இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்குவதற்க்காக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.படத்தில் முக்கியமான மற்ற மூன்று பேர் ஒளிபதிவாளர் Guillaume Schiffman , இசையமைப்பாளர் Ludovic Bource மற்றும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நாய்.

       படத்தில ரசிக்கத்தக்க விஷயங்கள்   நிறைய இருக்கின்றன .காட்சியின் தன்மைக்கேற்ப்ப அவ்வப்போது சில போஸ்டர்கள் திரையின் எங்காவது ஒட்ட பட்டிருக்கும் உதாரணமாக ஜார்ஜுக்கும் பெப்பிக்கும் நட்பு ஏற்படும் காட்சியில் "Thief of the Hearts" போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும் இழந்து விட்டு ஜார்ஜ் நடந்து வரும் போது "The Lonely Star"  என்ற போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும் இன்னுன் பல இடங்களில் வரும் நீங்களே பார்த்து கண்டுபிடிங்க..படத்தின் துவக்கத்தில் ஜார்ஜ் பிரீமியர் காட்சியை பார்க்கும் படத்தின் பெயர் "A Russian Affair" அதற்கு அடுத்த காட்சியில் அவர் நடிக்கும் படத்தின் பெயர் "A German Affair" ஹாலிவுட்டின் Sequel கலாச்சாரத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இந்த காட்சிகள் அமைந்திருக்கும்.

   இந்த படத்திற்க்கு சிறந்த படத்திற்க்கான ஆஸ்கர் கிடைப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது ஆனால் ஆஸ்கர் விருதே அரசியல்களால் ஆனது எனவே Tree of Life - க்கோ அல்லது மொக்கை படமான War Horse - க்கோ கூட விருது கொடுக்கப்படலாம்.விருது கொடுக்கப்பட்டாலும் கொடுக்காவிட்டாலும் இது ஒரு அற்புதமான படம் தவறாமல் பாருங்கள்.

The Artist : A Rare Film which take us back to the days of our their Great Grandfathers.
My rating  : 9.5 / 10.

[ Read More ]

Days of Being Wild [1990] - அலைபாயும் வாழ்க்கை

    எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதையோ நினைத்து ஏங்கி கொண்டே இருக்கிறோம். யார் மீதோ அன்பு செலுத்தியே சாவடிக்கிறோம். யாருடைய அன்புக்கோ ஏங்கி ஏங்கி சாகிறோம்.நினைத்ததை செய்ய முடியாமலும் செய்ததை பொறுக்க முடியாமலும் நாட்களை கடத்தி கொண்டிருக்கிறோம்.இவை அத்தனையும் ஓயும் ஓர் கணத்தில் நாமும் மொத்தமாய் ஓய்ந்து போகிறோம்.


     Days of Being Wild - உலக புகழ் பெற்ற ஹாங்காங் இயக்குநர் Wong Kar Wai - ன் ஆரம்ப கால திரைப்படங்களுள் ஒன்று சரியாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது படம்.தெற்கு சீனாவில் பேசப்படும் கேண்டோனீஸ் (Cantonese) மொழியில் எடுக்க பட்டதாகும்.


    ” நல்ல படம் எடுக்க நல்ல கதை கிடைப்பதில்லை ” - அப்புடின்னு டகில் விடறவங்க எல்லாம் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.ஒரு நல்ல படம் எடுக்க ஒரு நல்ல கான்செப்ட் போதுமானது முன்னுரையில் தொடங்கி பொருளுரை எழுதி முடிவுரையில் முடிக்க படும் கதையல்ல என்ற கோட்பாட்டிற்கு சரியான உதாரணம் இந்த திரைப்படம்.     மூன்று ஆண்கள் , மூன்று பெண்கள் மொத்தம் ஆறே ஆறு பேர் அவர்களுக்கு இடையிலான உறவுகள் , அதன் சிக்கல்கள் , ஏமாற்றங்கள் , காதல்கள் , துரோகங்கள் , எதிர்ப்பார்ப்புகள் மிகமுக்கியமாய் இவர்களின் தேடல்கள் இவைகளின் மொத்த கலைவையே   " Days of Being Wild ".


     1960  , ஏப்ரல் 16 , சரியாக அதிகாலை 2.59 முதல் 3.00 வரையிலான இந்த ஒரு நிமிடத்திற்க்கு மட்டும் நட்பாய் இருக்குமாறு ஸ்டேடியத்தில் வேலை பார்க்கும் பெண்ணான லி ஜின்னிடம் கேட்கிறான் யட்டி.அதை தொடர்ந்து தினமும் ஒரு நிமிடம் சந்திப்பதாக சொல்லி செல்கிறான்.அந்த ஒரு நிமிடம் பல மணிநேரங்களாக வளர்ந்து ஸ்டேடியத்தில் இருந்து படுக்கை அறை வரைக்கும் செல்கிறது.கல்யாணம் பற்றி அவள் பேச தொடங்கியவுடன் அவளிடம் சண்டை போடுகிறான்.அதன் பின் அவளை பார்ப்பதை நிறுத்தி கொள்கிறான்.முன்னாள் விபச்சாரியான யட்டியின் வளர்ப்பு தாய் அமெரிக்கா போவதாக அவனிடம் சொல்கிறாள்.தன்னுடைய பெற்றோர் பற்றி தெரியாதவரை அவள் எங்கும் போக கூடாதென கடுமையாய் சொல்லி விடுகிறான்.


        லி ஜின்னை கழட்டிவிட்டப்பின் கேப்ரே டான்ஸரான மிமியுடன் சுற்ற தொடங்குகிறான் யட்டி.முந்தைய உறவை போலவே படுக்கை வரை செல்கிறது.யட்டியை மறக்க முடியாத லி ஜின் அடிக்கடி அவனை பார்க்க வருகிறாள் ஆனால் அவன் ஒரு முறை கூட மதித்து பேசவே இல்லை.ஒரு முரை மிமிக்கும் லி ஜின்னுக்கும் சண்டை வந்து விடுகிறது அதனால் மனமுடைந்து செல்லும் லி ஜின்னுக்கும் அந்த ஏரியா போலீஸான டைட்க்கும் ஒரு நட்பு உருவாகிறது.டைட் கப்பல் மாலுமி ஆக ஆசைபட்டு தன் தந்தைக்காக போலிஸ் வேலையில் இருப்பதாக சொல்கிறான். யட்டியை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தவள் டைட் - ஐ பார்ப்பதற்காகவும் வர தொடங்குகிறாள்.தன்னுடன் பேச விரும்பினால் தெரு ஓரத்தில் இருக்கும் பொதுதொலைபேசிக்கு அழைக்குமாறு சொல்லி நம்பர் தருகிறான்.இதற்கிடையில் மிமியையும் கழட்டி விடுகிறான் யட்டி அதன்பின் தன் உண்மையான பெற்றோர் பிலிபைன்ஸில் இருப்பதாய் தெரிய வர அங்கே செல்கிறான்.யட்டி உண்மையான பெற்றோர்களை பார்த்தானா , லி ஜின் போ செய்தாளா , டைட் மாலுமி ஆனான என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,


      படத்தில் வரும்  எல்லா கதாபாத்திரங்களும் பிரிவையும் , ஏமாற்றத்தையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே நம் முன் காட்சியாக விரிகிறது.பல வசனங்கள் கவிதையாய் படம் முடிந்த பிறகும் ஞாபகத்தில் இருக்கின்றது.குறிப்பாக யட்டி அடிக்கடி கூறும் அந்த பறவை கதை.படத்தில் அழகான காட்சிகள் நிறையவே உண்டு.குறிப்பாக யட்டிக்கும் லி ஜின்னுக்கும் இடையேயான அந்த "ஒரு நிமிட நட்பு" காட்சி.இதுவரை எந்த தமிழ் படத்திலும் இந்த காட்சியை சுடாமல் இருப்பது ஆச்சர்யமே..,அந்த அழகான காட்சி கிழே ..,

     Wong Kar Wai - ன் படங்கள் அனைத்திலும் இருக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள் சுண்டி இழுக்கும் ஒளிப்பதிவு , கிறங்கடிக்க்கும் இசை , திரைக்கதையில் ஒரு சின்ன மேஜிக். Wong Kar Kai படங்கள் அனைத்தும் ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Christopher Doyle.இவர்கள் இருவரும் இணைந்த முதல் திரைப்படம் இதுவாகும் இதன் பின்னர் இவர்கள் இணைந்த படங்களை போல் வண்ணங்கள் வழியும் காட்சிகளாக இல்லாமல் படம் நெடுகிலும் உலர்ந்த நிறங்களே பயன்படுத்த பட்டு உள்ளது.கவர்ந்திழுக்கும் வண்ணங்கள் ஏதுமில்லாமல் வெறும் கேமராவை மட்டும் வைத்து கொண்டு கலக்கி இருப்பார்கள்.


         Wong Kar Wai - ன் திரைக்கதைகள் தனித்துவமானவை பெரும்பாலும் மனித மனங்களை காட்சி களங்களாய் கொண்டவை.மற்ற இயக்குனர்களை போல் இவர் படபிடிப்பு தொடங்குவதற்க்கு முன்னால் திரைக்கதையை எழுதி முடிப்பதில்லை சில காட்சிகள் எழுதியதுமே படப்பிடிப்பை தொடங்கிவிடுகிறார். அந்த காட்சியை எடுக்கும் போது கிடைக்கும் அனுபவங்களை கொண்டே மற்ற காட்சிகளை எழுதுகிறார்.சில சமயங்களில் கடைசி காட்சியை மட்டும் எழுதிவிட்டு படப்பிடிப்புக்கு போய் இருக்கிறார்.சில சமயங்களில் ஒரு படத்திற்க்காக எடுத்த காட்சிகளை வெட்டி இரண்டு படங்களாக மாற்றி இருக்கிறார்(Fallen Angels and  Chungking Express).

       இவர் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படங்கள் பார்த்து இருக்கிறேன் (இது தவிர Chungking Express மற்றும் In the Mood for Love ). இந்த மூன்று படங்களிலும் திரைக்கதையில் எதாவது ஒரு மேஜிக் இருக்கும்.In the Mood for Love படத்தில் எந்த ஒரு காட்சியும் எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என பார்வையாளனால் கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமாக காட்சியை கடத்தி போய் இருப்பார்.இரண்டு கதைகளை கொண்ட படமான chungking express-ல் ஒரு கதையில் இருந்து இன்னொரு கதைக்கு மாறுவது செம்ம்ம கியூட்டாக இருக்கும்.அதே போல் இந்த படத்திலும் ஒரு மேஜிக் உண்டு  அது படத்தின் கதையை யாராவது ஒரு கேரக்டர் வாய்ஸ் ஓவரில் சொல்ல தொடங்கும் அப்படியே அதன் போக்கிலேயே போய் வேறு யாடராவது அந்த கதையை முடிப்பார்கள்.

படத்தில் அறிவுரையோ , அழுகை காட்சிகளையோ எதிர்பார்க்காமல் பார்க்க தொடங்கினால் நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்.

Days of Being Wild : A film which make a place in your heart without any permission.
My rating : 9/10[ Read More ]