சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 2


                  சென்னை திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களுள் சிறந்த எட்டு படங்களை பட்டியலிட போன பதிவில் தொடங்கி இந்த பதிவில் முடிக்கிறேன். சென்ற பதிவில் நான்கு படங்களை அறிமுகப்படுத்தி விட்டதால் மிச்சமிருக்கும் நான்கு படங்களை சிறந்த நான்கு படங்களாகவும் கொள்ளலாம்.

சென்ற பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்..,

4. Departures:

             மரணத்தை சூழ்ந்திருக்கும் மர்மமே அதன் மீதான பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. அந்த பயமே மரணத்தை சார்ந்து இருப்பவர்கள் மீதான அசூசையும் வெறுப்பையும் இயல்பாகவே உருவாக்கி விடுகிறது. அப்படி மரணத்தை சார்ந்த ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் ஒரு இசை கலைஞன் மீதான வெறுப்பும் அசூசையும் அன்பாக மாறும் அற்புதம் தான் "Departures". செல்லோ (பெரிய வயலின்) கலைஞனான நாயகனின் இசை குழு கலைக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக இறந்தவர்களுக்கு மேக்கப் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேண்டா வெறுப்புடன் வேலைக்கு சேர்கிறான். இறந்த வீடுகளில் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் அந்த வேலையை வெறுத்த அவனும் மற்றவர்களும் அந்த வேலை மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியை உணர்வது தான் கதை.


       மொத்த படமுமே மரணத்தை சுற்றியே நடக்கிறது ஆனாலும் நம் கண்ணுக்கு க்ளிசெரின் ஊற்ற முயற்சிக்காமல் ஒரு உன்னதமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். தெளிவான தேவையற்ற காட்சிகளற்ற திரைக்கதை, அற்புதமான இசை, பலமான உரையாடல்கள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவு குறைகள் ஏதும் இல்லாத அற்புதமான படம். இந்த படம் 2008-ம் ஆண்டிற்க்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்க்கான ஆஸ்கர் விருதை பெற்றது.

3. Final Cut - Ladies and Gentlemen :

              முதலில் இது ஒரு திரைப்படம் அல்ல, 450-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் காட்சி துணுக்குகளின் தொகுப்பு. என்ன தான் எண்ணற்ற திரைப்படங்களின் கதம்ப மாலை என்றாலும் அவற்றின் துணையோடு ஒரு சின்ன கதையையும் சொல்லி இது வரை இருந்த கதை சொல்லும் பாணியை எல்லாம் அனாயசயமாக தாண்டி இருக்கிறார்கள். பஸ்டர் கீடன் தொடங்கி ராம் சரண் தேஜா வரை, Birth of the Nation தொடங்கி ஓம் ஷாந்தி ஓம் வரை, 2001 தொடங்கி அவதார், Pulp Fiction தொடங்கி Paprika வரை உலகின் அத்தனை கிளாசிக்கிலும் அத்தனை முக்கியமான படங்களையும் தொட்டு செல்கிறது.


              நமக்கு ரொம்ப பிடித்த படத்தின் ஒரு காட்சி எதோ ஒரு படத்தில் வந்தாலே உற்சாகமாய் இருக்குமல்லவா இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த அனைத்து படங்களில் இருந்தும் ஒரு துணுக்கு வந்து விடுவதால் மனதிற்க்குள் ஒரு மாதிரி இதமான உணர்வு ஏற்படுகிறது. படம் மட்டுமல்ல படம் முடிந்த பின்னர் அனைத்து படங்களின் பெயரையும் காட்சிகளின் வரிசையிலையே போடுகின்றனர் பெரும்பாலனவர்கள் அனைத்தையும் நின்று பார்த்துவிட்டு சென்றனர். திரைப்பட காதலர்கள் அனைவரும் நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.

2. Holy Motors:

                பார்ப்பவர்களின் கண்களுக்கும் மூளைக்கும் இடையில் கண்ணாமூச்சு விளையாடும் வித்தியாசமான சர்ரியலிஸ திரைப்படம். ஒரு நடிகனுக்கு ஒரு நாளில் ஒன்பது இடங்களில் நடிப்பதற்க்கான பட்டியல் ஒன்று தரப்படுகிறது. நடிப்பென்றால் நாடகத்திலோ திரைப்படத்திலோ அல்ல நிஜ வாழ்க்கையில் அதாவது கூடு விட்டு கூடு பாய்வது போல் ஒரு வாழ்க்கையில் இருந்து இன்னொரு வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். எது நிஜ வாழ்க்கை ?? எது நடிப்பு என்றெல்லாம் பிரிக்க முடியாத படி அங்காங்கே சில வட்டங்களின் முனைகளை இணைத்து சென்று இருக்கிறார்கள்.


                அரசியல்வாதி, பிச்சைகாரன், சினிமாவில் மோஷன் கேப்சர் ஆர்டிஸ்ட், பைத்தியம், கொலை செய்பவன், கொலை செய்யப்படுபவன், இசை கலைஞர், சாக காத்திருக்கும் கிழவர், குடும்ப தலைவர் என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களை எந்த பிழையும் செய்து இருக்கிறார் நாயகன் Denis Lavant. எந்த தர்க்கத்துக்குள்ளும் அடங்காத கதையாக இருந்தாலும் படம் ஓடும் 100 நிமிடங்களும் தலையை திருப்பாமல் பார்க்க வைக்கின்றனர். படத்தில் ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம் இசை அதிலும் குறிப்பாக அந்த தீம் மியூசிக். நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டு பாருங்க இரத்ததில் ஏதோ ஒரு திரவம் கலந்து இருக்கையில் இருந்து சில மில்லி மீட்டர்கள் மேலே செல்வதை உணர்வீர்கள்.


1. Amour:

              இந்த வருட திரைப்பட விழாவில் நான் பார்த்த முதல் திரைப்படம் சந்தேகமே இல்லாமல் நான் பார்த்த சிறந்த படமும் இதுவே. வாழ்க்கையில் சுகமான முடிவு என்று ஒன்று கிடையவே கிடையாது நமது எல்லா பயணங்களும் ஒரு தோல்வியை நோக்கி ஒரு சூன்யத்தை நோக்கி அல்லது ஒரு மரணத்தை நோக்கியே இருக்கிறது.  வயதான தம்பதிகளான ஜார்ஜ் மற்று ஆன்னி பெரிய வீட்டில் தனியா வசிக்கின்றனர். வயதானாலும் அன்யோன்யமும் காதலும் குறையாமல் இருக்கிறது அதிலும் ஜார்ஜ் எப்போதும் ஆன்னியை விட்டு எப்போதும் விட்டு விலகாமலே இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆன்னி தீவிரமாக உடல்நிலை மோசமாகி கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரிவின் துயரமும் காதலின் கடைசி அத்தியாயமும் தான் படத்தின் களம்.


               படத்தின் தொடக்க காட்சியிலேயே படத்தின் முடிவை யூகித்து விடலாம் ஆனால் படத்தின் பலம் முடிவு ஏற்படுத்தும் அதிர்ச்சி அல்ல அதை நோக்கிய பயணம் ஏற்படுத்து வலியே. படத்தை இயக்கி இருப்பது உலகின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான Micheal Hanake கதாப்பாத்திரங்கள் உணரும் வலியை பார்வையாளர்களுக்கு கணமான காட்சிகளின் மூலம் கட்த்தி இருக்கிறார். படம் பார்த்த பின் ஏற்படும் பாதிப்பு நீங்க நிச்சயம் கொஞ்ச காலமாவது பிடிக்கும். இந்த படம் குறித்து கொஞ்சம் விரிவாக தனி பதிவா எழுதிட விருப்பம். விருப்பத்தை சோம்பேரித்தனம் வென்று விடாமல் இருப்பின் கண்டிப்பாக எழுதுவேன்..


           இந்த படங்கள் தவிர உங்கள் அனைவருக்கும் நன்கு பரிட்சியமான இரண்டு மிக மிக முக்கியமான படங்களை பார்த்தேன் ஒன்று சத்யஜித் ரேவின் "பதேர் பாஞ்சலி"   மற்றொன்று தியாகராஜன் குமாரராஜாவின் "ஆரண்ய காண்டம்". இரண்டு படங்களை பற்றியும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை இருந்தாலும் ஆரண்ய காண்டம் திரையிடப்பட்ட சூழல் குறித்து சொல்ல விரும்புகிறேன்.

           முதலில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ராணி சீதை ஹாலில் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 300 - 400 இருக்கைகள் கொண்ட ராணி சீதை ஹால் வாசலில் கிட்ட தட்ட 1000 பேர் நின்றனர் எப்படியோ அடித்து பிடித்து உட்கார்ந்தால் படச்சுருள் வராததால் திரையிடல் இல்லை என அறிவித்தனர். பின்னர் 8 மணிக்கு சின்ன அரங்கான Woodlands Symphony-ல் திரையிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டு பின்னர் கூட்டம் காரணமாக 1400 இருக்கைகள் கொண்ட Woodlands அரங்கில் திரையிடப்பட்டது. அரங்கு நிறைய கூட்டத்தோடு ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு தீம் இசைக்கும் கைதட்டலால் விருது கொடுத்து கொண்டிருந்தனர்.  தமிழ் சினிமா பற்றி தெரியாத யாரிடமாவது இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த படம் என்று சூடம் அணைத்து சொன்னால் கூட நம்பி இருக்க மாட்டார்கள். சில அலைச்சல்கள் சில ஏமாற்றங்கள் இருந்தாலும் மொத்தமாக ஒரு நல்ல அனுபவத்துடன் திரைப்பட விழா இனிதாய் நிறைவடைந்தது.

     
[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 1

             13-ம் தேதி தொடங்கி எட்டு நாட்களாக நடைப்பெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. எல்லா நாட்களும் செல்ல முடியவில்லை என்றாலும் அப்படி இப்படி என 21 படங்கள் பார்த்தாகி விட்டது.  எதிர்ப்பார்த்திருந்த படங்களுள் பார்த்த வரையில் எல்லாம் திருப்தியாக இருந்தது எதிர்ப்பார்க்காத சில படங்கள் ஆச்சர்யப்படுத்தியது மற்ற படங்கள் மொக்கை போடும் பணியை சிரத்தையுடன் செய்து முடித்தன.

            எதிர்ப்பார்த்திருந்த படங்களுள் பாதுகாப்பு காரணங்களுக்காக  "Rust and Bone", ஆரண்ய காண்டத்திற்க்காக "Once Upon a Time in Anatolia", காரணம் எதுவும் சொல்லாமல் "Antiviral", "Not One Less" ஆகிய படங்கள் திரையிடப்படவில்லை. பார்த்த படங்களுள் சிறந்த படங்களாக நான் கருதும் எட்டு படங்களை பற்றிய சிறு குறிப்பு உங்களுக்காக :)


8. In Another Country:

           ஹோட்டலில் அம்மாவுடன் தங்கி இருக்கும் பெண் கொரியாவுக்கு வரும் மூன்று ஃப்ரஞ்ச் பெண்களை பற்றிய கதை ஒன்றை எழுத தொடங்குகிறார்.  மூன்று கதையிலும் அதே நடிகர்கள் அந்த பெண்ணை தவிர அனைவருக்கும் அதே கதாப்பாத்திரங்கள் சொல்லப்போனால் அந்த பெண்ணுக்கு கூட ஒரே பெயர் தான் ஆனால்  ஃப்ரஞ்ச் இயக்குநர், கணவனுக்கு தெரியாமல் காதலனை பார்க்க வரும் பெண், விவாகரத்தான மனைவி என அவருக்கு மட்டும் வெவ்வேறு கதாப்பாத்திரகள்.      ஒரே மாதிரியான உரையாடல் அல்லது காட்சிகள் அதே கதாப்பாத்திரங்களுக்குக்கோ அல்லது வேறு கதாப்பாத்திரங்களுக்கோ இடையில் வருவது ரசிக்கும் படி இருக்கிறது. சில சமயங்களில் முதல் கதைகள் விட்டு சென்ற எதோ ஒரு மிச்சத்தை அடுத்த கதைகள் தொடர்வது அல்லது அதற்கு முன்னதாக வந்திருப்பது போல் சில பொருட்களை காட்டுவது சில சமயங்களில் இரண்டும் என சுவாரசியத்திற்க்கு குறைவில்லை. அந்த ஃப்ரஞ்ச் பெண்ணாக நடித்திருப்பவர் பிரபல ஃப்ரஞ்ச் நடிகை Isabelle Huppert பியானோ டீச்சர் ஞாபகம் இருக்குல்ல. படத்தை மொத்தமாக பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமலில்லை என்றாலும் படம் முடிந்தும் படம் பற்றியே நம்மை யோசிக்க வைப்பது தான் அதன் வெற்றி.

7. Pieta:
 
         இருக்கைகள் யாவும் நிறைந்து, நடைப்பாதைகள் யாவும் நிறைந்து,  கதவை கூட சாத்த விடாமல் நின்று கொண்டிருக்கும் கூட்டதிற்க்காக வணிக அம்சங்கள் ஏதுமற்ற கலைப்படம் ஒன்று சென்னையில் திரையிடப்பட்டதென்றால் நம்புவீர்களா ? நம்பாவிட்டாலும் Pieta விற்கு அது தான் நடந்தது கிம்-கி-டுக்கிற்க்கு நம்ம ஊரில் இருக்கும் செல்வாக்கு அப்படி. கொடூரமான முறையில் கடன் வசூலிக்கும் ஒருவனின் வாழ்க்கையில் அம்மா என்று சொல்லி கொண்டு வரும் பெண்ணினால் வரும் மாற்றங்கள் தான் கதை.

       கடன் தாராதவர்களை கை அல்லது கால்களை உடைத்து முடமாக்கும் கொடூரமான காட்சிகளுடன் தொடங்குகிறது படம். நாயகனுடைய அம்மா வந்த பிறகு கொஞ்சம் நல்லவராக மாறி பாசத்துக்கு அடிமையாகும் காட்சிகள் எல்லாம் கிம்-கி-டுக்கை எந்த பிக்காலி பயலோ தமிழ் படம் நிறைய பாக்க வைச்சுட்டானோன்னு நினைக்க வைக்குது அவ்வளவு க்ளேஷேவான காட்சிகள். வந்த பெண் அம்மா தானான்னு கண்டுபிடிக்க வைக்கிற டெஸ்ட்லாம் கொடூரம். இதை கிம்மின் சிறந்த படமென்றெல்லாம் சொல்ல முடியாது என்றாலும் சில காட்சிகளில் மனசை தொடுகிறார் குறிப்பாய் அந்த கடைசி சில நிமிடங்கள். உங்களுக்கு அவரை பிடிக்குமெனில் கண்டிப்பாக இதுவும் பிடிக்கும் இல்லையெனில் மதில் மேல் பூனை தான்.

6. Everybody in Our Family:

                 ஒரு பட்டன் ஸைஸ் கதை வைத்துக்கொண்டு சும்மா பின்னி எடுத்திருக்கும் ரோமனிய திரைப்படம் தான் Everybody in our family. விவாகரத்தான தன் மனைவியிடம் வாழும் தன் ஐந்து வயது மகளை கடற்கரைக்கு கூட்டி செல்வதற்க்காக காலையில் சாதரணமாக  கிளம்பும் மாரியோஸ் எவ்வளவு மாற்றமடைகிறார் என்பது தான் கதை. அப்பாவிடம் கார் வாங்க செல்லும் போது வாக்குவாதம் அதிகமாகி சண்டை வருகிறது. முன்னாள் மனைவியின் வீட்டிற்க்கு அவர் இல்லாத போது செல்கிறார் அங்கே இருக்கும் முன்னாள் மனைவியின் இன்னாள் காதலர் குழந்தையை அழைத்து செல்ல அனுமதி மறுக்கிறார் அவரிடமும் சண்டை போடுகிறார். அப்போது அங்கே வரும் அவர் மனைவி போலிஸுக்கு ஃபோன் செய்ய பெரிதாகிறது சண்டை.  அவ்வளவு தான் படமே ஆனால் அட்டகாசமாய் இருக்கிறது.


                  நாகரிகத்தின் போர்வையில் நம்முள் மறைந்திருக்கும் மிருகம் வெளிவருதற்க்கு அதிக நேரம் பிடிக்காது என்பதை உணர்த்தும் படம். இதை படிச்சதும் எதோ ஹாரர் படம்ன்னு நினைச்சுடாதிங்க கண்ணுல தண்ணி வரும் அளவுக்கு சிரிக்க வைக்கிற காமெடி படம். ஆனா என்ன தான் சிரிச்சாலும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இதுக்கு போய் சிரிச்சோமான்னு உங்களையே ஃபீல் பண்ண வைக்கும் ரகம் அதான் இந்த Dark Comedy-ன்னு சொல்லுவாங்களே அதான். பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளயே எடுத்து இருந்தாலும் ஒரு நாடகதன்மை இல்லாம படு இயல்பா படம் இருக்கு அதற்கு முக்கிய காரணம் கேமரா நாயகன் கூடவே ட்ராவல் ஆகுது. அடுத்த காரணம் நடிப்பு முக்கியமாக ஹீரோ மற்றும் அந்த குழந்தை ரொம்ப க்ளேஷேவா சொல்லனும்ன்னா அவங்க முன்னால கேமரா இருக்கிறா மாதியே இல்ல அதுலையும் அந்த குழந்தை சான்ஸே இல்ல. நண்பர்கள் யாரும் தவறவே விடக்கூடாத படம்.
                


5.Kuma:

       படத்தின் தொடக்கத்தில் துருக்கிய கிராமம் ஒன்றில் ஆயிஷாவுக்கும் ஹசனுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்க்கு செல்வதற்க்காக வியன்னா நோக்கி புறப்படுகிறாள். வியன்னா வந்ததும் நடந்தது ஒரு பொம்மை திருமணம் என்பது நமக்கு தெரிகிறது உண்மையில் அயிஷாவுக்கு ஹசனுடன் நடந்த திருமணம் ஊருக்காக செய்யப்பட்டது ஆனால் அவள் வாழப்போவது ஹசனின் தந்தை முஸ்தஃபாவுக்கும் இரண்டாம் மனைவியாக இப்படி ஒரு அதிர்ச்சியான தொடக்கத்துடன் துவங்குகிறது படம்.


         ஒரு கட்டத்தில் முஸ்தஃபா இரந்து விட குடும்ப பாரம் ஆயிஷா மேல் விழுகிறது. குடும்பத்தை தாங்கும் காதலுக்கு ஏங்கும் இளம்தாய் ஆயிஷாவின் கதை தான் படம். Kuma என்றால் இரண்டாம் மனைவி என்று அர்த்தமாம். மெதுவாக நகரும் குழப்பமான திரைக்கதையில் சின்ன சின்ன ட்விஸ்ட்கள், சில சுவாரசியங்கள், கொஞ்சம் அழகியல் என நம்மை சோர்வடைய வைக்காமல் கடைசி வரை அழைத்து செல்கின்றனர். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அந்த ஆயிஷாவா நடிச்சு இருக்கிற பொண்ணு செம அழகு :). இந்த படத்தை குடும்ப அமைப்புனால் பெண்களுக்கு எற்படும் பிரச்சனைகளை பற்றியதாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் கதையாகவும் கொள்ளலாம் எப்படி எடுத்து கொண்டாலும் பரவாயில்லை தவறாமல் படத்தை பாருங்கள்.

                                                                                                                       (தொடரும்..,)
[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு முன்னோட்டம்

                    வருகின்ற 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை எட்டு நாட்கள் சென்னையில் 10-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். 57 நாடுகளை சேர்ந்த 175 படங்கள் திரையிடப்பட இருக்கிறது என்றாலும் எவ்வளவு முயன்றாலும் இதில் பாதி படத்தை கூட பார்க்கமுடியாது அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 படம் வீதமாக 40 படங்கள் பார்க்கலாம் அதுவும் எட்டு நாட்களும் விடுப்பு எடுத்தால் மட்டுமே சாத்தியம்.

Ciff 2012 Poster

                சென்ற வருடம் தான் முதல்முறையாக பெரும் எதிர்ப்பார்ப்புடன் முதல்முறையாக திரைப்பட விழாவுக்கு சென்றேன் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். நான் பார்த்த படங்களுள் பாதி படங்கள் வெகு சுமாரான அல்லது மொக்கை படங்கள். வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான் பெரும்பாலான படங்களை பார்த்தேன் அங்கே பகலில் படம் பார்க்கும் போது நிறைய இடைஞ்சல்கள் இருந்தது. சராசரியாக 5 நிமிடத்திற்க்கு ஒரு முறை கதவு திறக்கப்பட்டு கொண்டே இருந்தது யாராவது வந்து கொண்டோ போய் கொண்டோ இருந்தார்கள் மாலை மற்றும் இரவு காட்சிகளில் இந்த பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை. சத்யம்,ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் அங்கு சீட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும். இவ்வளவு இருந்தாலும் ரொம்ப பிடித்த திரைப்படமொன்றை பெரிய திரையில் காணும் போது கிடைக்கிற அனுபவத்திற்க்காவே கலந்து கொள்ள வேண்டும். சென்ற வருடம் A Separation திரைப்படத்தை விழாவில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகள் இன்னமும் நினைவிருக்கிறது அப்படி ஒரு அனுபவத்தை எதிர்ப்பார்த்தே இவ்வருடமும் செல்கிறேன். சென்ற வருடத்தை விட இந்த வருட திரைப்பட பட்டியலில் பெயர் தெரிந்த பார்க்க விரும்பிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது அந்த படங்களுள் முக்கியமான படங்கள் சிலவற்றை பற்றிய சின்ன அறிமுகம்..,

Amour :

          தற்கால இயக்குநர்களுள் மிக முக்கியமானவரான Micheal Hanke-ன் சமீபத்திய திரைப்படம். உலகின் மிக பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சிறந்த திரைப்படத்திற்க்கான தங்கப்பனை விருதையும் பெற்று இருக்கிறது. இதுவே இந்த படத்தை பெரும்பாலன ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக மாற்றி இருக்கிறது.  Micheal Hanke-ன் முந்தைய படமான The White Ribbon படமும் தங்கப்பனை விருது பெற்றது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

Pieta :

           தமிழ் இணைய உலகில் மிக பிரபலான இயக்குநரான கிந்கி-டுக்கின் சமீபத்திய திரைப்படம். உலகம் முழுதும் நிறைய ரசிகர்கள் இருந்தாலும் பெரிய அளவில் அங்கிகாரம் எதுவும் கிடைக்காததால் பெரும்பாலும் சர்ச்சைகுரிய இயக்குநராய் மட்டுமே அடையாளப் படுத்தபட்டார். இப்போது முக்கியமான திரைப்பட விழாவான வெனிஸில் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதின் மூலம் மிக பெரிய அங்கிகாரத்தை பெற்றுள்ளார். இந்த விழாவில் நிறைய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதர்க்கான காரணம் இந்த விருதல்ல அவரின் பெயர் மட்டுமே.

CIFF 2012 Films


Not One Less :
               
           சீனாவின் அழகியலையும் கலாச்சார பின்னணியையும் கலந்து அற்புதமான படங்களை எடுக்கும் Zhang Yimou  1999-ல் எடுத்த படம். சீன அரசு 90-களில் கல்வியை கட்டாயமாகி மிக தீவிரமாக அமல் படுத்தியது ஆனாலும் கிராமப்புற பள்ளிகள் ஒற்றை ஆசிரியரை வைத்து கொண்டு மாண்வர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு மாதக்காலம் பயிற்சி ஆசியராய் வரும் 13 வயது பெண்ணின் கதை தான் படம். பார்ப்பவர்களின் ஆன்மாவை தொடும் அற்புதமான படம். இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

Holy Motors :

           ஒரு பத்து நாளைக்கு முன்பு வரை இப்படி ஒரு படம் வந்து இருப்பதே தெரியாது. பிரபலமான ஃப்ரஞ்ச் சினிமா பத்திரிக்கையான Cahiers Du Cinema இந்த படத்தை இந்த வருடத்தின் சிறந்த படமாக தேர்ந்தெடுத்ததும் ஒரு மாதிரி ஆர்வம் தொற்றிக்கொண்டது. த்ருபோ, கோதார் போன்ற ஃப்ரஞ்ச் புதிய அலையின் ஆளுமைகள் எல்லாம் இந்த பத்திரிக்கையில் தான் ஆரம்ப காலத்தில் விமர்சனம் எழுதி கொண்டிருந்தார்கள். படத்தின் டிரைலரை  படித்ததும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன். திரைப்பட விழாவில் தவறாமல் பாக்கனும் மிஸ் பண்ணுனா டவுன்லோடு தான் :).

Pather Panchali :

             இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் விதமாக இந்த விழாவிலும் சில முக்கியமான இந்திய படங்கள் திரையிடப்பட இருக்கிறது அதிலும் முக்கியமாக இந்தியாவின் ஆக சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படும் பதேர் பாஞ்சலி திரையிட இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏற்கனவே பார்த்து இருந்தாலும் திரையரங்கில் பார்க்க விருப்பமாக இருக்கிறது அதுவும் விடுமுறையன்று திரையிட இருப்பதால் கண்டிப்பாக பார்த்து விடுவேன் என்றே நினைக்கிறேன். மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான ஜி.அரவிந்தனின் “வசுந்தரா”-வும் திரையிட இருக்கிறார்கள்.
       
Like Someone in Love:

             பிரபலமான ஈரானிய இயக்குநர்  Abbas Kiarostami இயக்கி இருக்கும் ஜப்பானிய மொழி திரைப்படம். பெரிய அளவில் நல்ல விமர்சனங்களையோ பெரிய விருதுகளையோ வாங்கவில்லை என்றாலும்  Abbas Kiarostami-ன் பெயருக்காகவே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

              இவற்றுடன்  Melancholia ( இயக்கம் : Lars von Trier), Cosmopolis ( இயக்கம் :David Cronenberg ), Zorba the Greek, Departures  ( 2009 சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது), Antiviral, Beasts of the Southern Wild , Once Upon a Time in Anatolia  ஆகிய படங்களையும் தவறவிடாமல் பார்த்து விட விருப்பம். நண்பர்களுக்கும் தங்கள் அட்டவணையில் இந்த படங்களை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன்.  இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் நான்கு நாட்களுக்கான அட்டவணையில் இடம் பெறவில்லை ஆகையால் முக்கியமான படங்கள் யாவும் கடைசி நான்கு நாட்களில் தான் திரையிடுவார்கள்  என நினைக்கிறேன் அதனால் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே விடுப்பு எடுக்க முடிந்தவர்கள்  அடுத்த வாரத்தில் விடுப்பு எடுத்தால் நிறைய நல்ல படங்கள் பார்க்கலாம் :).

பின் இணைப்புகள்:

  •  விழாவில் திரையிட இருக்கும் மொத்த படங்களின் பட்டியலுக்கு இங்கே க்ளிக்கவும்.

  • முதல் நான்கு நாட்களுக்கான பட்டியலை இங்கே க்ளிக்கி பார்க்கலாம். 

  •  பெங்களூர் உலக திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் படங்களின் பட்டியலை காண நேர்ந்தது. சென்னை விழாவை விட ஏகப்பட்ட நல்ல படங்கள், பிரபலமான படங்கள் என்று அசத்துகின்றனர். இங்கே க்ளிக்கி அந்த பட்டியலை பார்த்து கொஞ்சமாய் பொறாமைப்பட்டு கொள்ளுங்கள்.


[ Read More ]